இறைவன் படைப்புகள் எண்ணற்றன; இணையற்றன! எழில் நிறைந்தன; இன்பம் அளிப்பன! அதனால் தான் இறையன்பர்களில் ஒருவர். "எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் எங்கள் இறைவா!"-என்று பாடிப் புகழ்கின்றார்.
இப்படைப்புகளில் சிறந்தது மக்கட் படைப்பு. ஏனைய படைப்புகளுக்கு இல்லாமல் மக்களுக்கு மட்டுமே இறைவன் அமைத்துள்ள சிறந்த பகுதி பகுத்தறிவு, நல்லது இது, தீயது இது எனப்பகுத்து அறியும் திறனே பகுத்தறிவு எனப்படுகிறது. எனவே, இத்தகைய பகுத்தறிவுடைய மக்கள் தொகுதி, தம்மையும், தம்மைச்சுற்றி அமைந்துள்ள ஏனைய படைப்புகளையும் ஒப்பிட்டு அவற்றின் தன்மைகளை அறியவும், அவற்றிற்கும், தமக்கும் உள்ள வேறுபாடுகளை தனித்தறிந்து. அதற்கேற்றவகையில் தமது வாழ்க்கையை வகுத்துக்கொள்ளவும் கடமைப்பட்டுள்ளது என்பது வெள்ளிடை மலை. இந்த அடிப்படையில் எழுகின்ற இயல் பான வினாவே "நாம் யார்" என்பதாகும். இதற்குரிய விடையும் அதன் விரிவும் பின்வரும் விஷயங்களால் தெள்ளிதில் உணர்த்தப்படும்.
1. நாம் யார்?
நாம் மனிதர். அதாவது மனதை உடையவர் மனதை உடையவன் மனிதன் என்னும் உண்மையை விளக்கும் இறைவனின் இணையற்ற படைப்பு. உலகில் உள்ள பல வகைப் படைப்புகளில் நாம் ஒரு வகையைச் சேர்ந்தவர்கள். கல் முதலியன திடப்பொருள்கள் ; தண்ணீர், எண்ணெய் வகைகள் நீர்ப்பொருள்கள்; பிராணவாயு முதலியன வாயுப் பொருள்கள், வெள்ளி, ஈயம், இரும்பு முதலியன உலோகப் பொருள்கள்; செடி, கொடி, மர வகைகள் தாவரங்கள்; மீன் முதலியன நீர் வாழ்வன; விலங்கு வகைகள் நடப்பன; பூச்சி, புழு முதலியன ஊர்வன; பறவைகள் பறப்பன ஆகிய இவைகளும் இறைவனால் படைக்கப்பட்டவையே. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவை. இரு உயிருடன் வாழும் பிராணிகள் அனைத்தும் ஓரறிவு உயிர் முதல் ஐயறிவு உயிர் வகையில் அடங்குவன. ஆனால் பகுத்தறிவு என்னும் ஆறாவது உயிருடைய நாம் மக்கள் பகுதியைச் சேர்ந்தோராவோம்.!
'மக்கள் தாமே ஆற்றி வுயிரே!" என்பது தொல் காப்பியம் கூறும் சான்று நம்மைப்போல உருவைக் (உடலை) கொண்டிராத படைப்புகளாகிய அருவப் (உடலற்ற) படைப்புகளும் உண்டு. இவைகள் தூய அரூபிகள் (சம்மனசு) தீய அரூபிகள் (பசாசு) எனப்படுவன இவர்களையும் இறைவனே படைத்தார். (தீய அரூபிகளை அல்ல; ஆனால் அவர்களே தமது நடத்தையால் தீய நிலையைத் தேடிக்கொண்டனர்.)