வேதப் புத்தகங்கள்

98. வேதப் புஸ்தகங்கள் ஆவதென்ன?

இஸ்பிரீத்துசாந்து ஏவுதலின்படி எழுதப்பட்ட சத்திய வேத ஆகமங்கள்தான்.


1. ஆகமம் என்பதற்கு அர்த்தமென்ன? 

வேதப் புஸ்தகம், தேவமொழி என்று அர்த்தமாகும்.


2. வேதாகமங்களை எழுதினவர்கள் யார்? 

தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள், சுவிசேஷகர் இன்னும் இஸ்பிரீத்துசாந்துவின் தேவ ஏவுதலால் தூண்டப்பட்ட மற்றவர்களும்தான்.


3. இஸ்பிரீத்துசாந்துவின் ஏவுதல் எதில் அடங்கியிருக்கிறது? 

(1) வேதப் புஸ்தகங்களை எழுதும்படி இஸ்பிரீத்து சாந்து சில மனிதர்களை ஏவித் தூண்டி எழுப்பினார்.

(2) தமது கட்டளைப்படி என்னென்ன எழுத வேண்டுமா அவற்றையெல்லாம், அவற்றை மாத்திரம், அவர்கள் தங்கள் மனதில் சரியாய் நிதானித்துப் பிரமாணிக்கமாய் எழுதி, சத்தியத்தைத் தப்பின்றி வெளிப்படுத்தும்படி அவர்களுக்குப் பக்கத்தில் துணையாய் நின்றார்.

இஸ்பிரீத்துசாந்துவின் ஏவுதலால் வேதாகமம் எழுதப் பட்டது என்பதின் அர்த்தம் இதுவே.

ஆகையினாலே வேதப் புஸ்தகங்களின் மெய்யான மூல காரணக் கர்த்தர் சர்வேசுரன்தான்.


99. வேத ஆகமங்களில் எத்தனை பாகங்கள் உண்டு?

இரண்டு பாகங்கள் உண்டு.  அதாவது:  சேசுநாதர் சுவாமி வருவதற்கு முன் எழுதப்பட்ட பழைய ஏற்பாடு ஒன்றும், அவர் வந்த பிறகு எழுதப்பட்ட புதிய ஏற்பாடு ஒன்றுமாம்.


1. ஏற்பாடு என்னும் பதத்துக்கு அர்த்தமென்ன? 

பிரமாணம், உடன்படிக்கை என்று அர்த்தமாம்.


பழைய ஏற்பாட்டில் எத்தனை புத்தகங்கள் உண்டு?

46 புஸ்தகங்கள்.


3. பழைய ஏற்பாட்டை எழுதிய முக்கியமான மனிதர்கள் யார்? 

(1) உலக ஆரம்பத்தையும், தேவப் பிரசைகளின் சரித் திரத்தையும் எழுதிய மோயீசன்;  (2) சங்கீதங்களை எழுதிய தாவீது இராசா; (3) பழமொழி, சர்வப் பிரசங்கி, ஞானம் முதலிய ஆகமங் களைத் தந்த சலோமோன்; (4) சேசுநாதருடைய சீவியத்தையும், பாடுகளையும் முன் அறிவித்த தீர்க்கதரிசிகள் இசையாஸ், ஜெரேமியாஸ், எசேக்கியேல் முதலியவர்கள்.


4. புது ஏற்பாட்டில் எத்தனை புஸ்தகங்கள் உண்டு? 

27 புஸ்தகங்கள்.


5. புதிய ஏற்பாட்டை எப்படி வகுக்கலாம்? 

சுவிசேஷம், அப்போஸ்தலருடைய நடபடிகள், அப்போஸ்தலர் நிருபங்கள், அர்ச். அருளப்பர் காட்சி என நான்கு பாகமாக வகுக்கலாம்.


6. அந்தப் புஸ்தகங்களுக்குள் பிரதானமானவை எவை? 

அர்ச். மத்தேயு, மாற்கு, லூக்காஸ், அருளப்பர் எழுதிய சுவிசேஷம் என்கிற பேர்கொண்ட 4 புஸ்தகங்கள்.


7. இப்படி வெவ்வேறான நான்கு புஸ்தகங்கள் எத்தனை சுவிசேஷம் ஆகும்? 

வெவ்வேறான நான்கு புஸ்தகங்கள் இருந்தபோதிலும், ஒரே ஒரு சுவிசேஷம்தான்.  அவைகள் ஒரே சுவிசேஷப் பொருள் அடங்கிய நாலு பிரிவுகள் போலேயாம்.


8. சுவிசேஷம் என்பதற்கு அர்த்தமென்ன? 

சுபசெய்தி அல்லது நல்ல செய்தி எனறு அர்த்தமாம்.


9. அப்படிப்பட்ட பெயர் உண்டாவதற்குக் காரணம் என்ன? 

சேசுநாதர் பிறந்த ஆச்சரியத்துக்குரிய வகையும், செய்து காட்டிய உத்தம புண்ணிய மாதிரிகைகளும், செய்த அற்புதங்களும், போதித்த வேத கற்பனை உபதேசங்களும், மனிதருடைய இரட்சணியத்திற்கு அடைந்த கடின மரணமும், மறுபடி உயிர்த்தெழுந்தருளிய நிகரற்ற வல்லபமும், மனுக்குலம் ஈடேறுவதற்கு விசுவசித்து அநுசரிக்க வேண்டிய சத்திய ஒழுக்கமும், இவை முதலிய விசேஷங்கள் இப்புஸ்தகத்தில் அடங்கியிருக்கிற படியால் இத்திருப்பெயரே உண்டாயிற்று.


10. அப்போஸ்தலர் நடபடிகள் ஆகமம் என்றால் என்ன? 

இந்த ஆகமம் அப்போஸ்தலருடைய நடபடிகள் என்று பெயர் கொண்டிருந்தாலும், இது எல்லா அப்போஸ்தலர் களுடைய சரித்திரம் அல்ல. பிரதான அப்போஸ்தலர்களாகிய அர்ச். இராயப்பர், சின்னப்பர் இவர்களுடைய நடபடி என்கலாம்.  அர்ச். சின்னப்பருடைய சீஷனாயிருந்த அர்ச். லூக்காஸ் என்பவர் இதை எழுதினார்.


11. நிருபங்கள் என்னும் ஆகமம் ஆவதென்ன? 

அப்போஸ்தலர்களாகிய அர்ச். சின்னப்பர், யாகப்பர், இராயப்பர், அருளப்பர், யூதா முதலியவர்கள் சில கிறீஸ்துவ சபைகளுக்கும், கிறீஸ்துவர்களுக்கும் எழுதிய நிருபங்களாம்.


12. அர்ச். அருளப்பர் காட்சி என்றால் என்ன? 

அப்போஸ்தலரான அர்ச். அருளப்பர் தொமிசியன் என்கிற உரோமைய சக்கரவர்த்தியால் பத்மோஸ் என்ற தீவுக்குப் பரதேசியாக அனுப்பப்பட்டிருக்கையில் எழுதிய வேதப் புஸ்தகமாம். இப்புஸ்தகத்தில் அர்ச். அருளப்பர் ஏழு மேற்றிராணி மார்களுக்குத் தாம் கண்ட காட்சியையும், சேசுநாதர் சுவாமி தமக்குச் சொன்னதையும் விபரமாய்ச் சொல்லி, கடைசி மட்டும் திருச்சபை யில் நடக்கப் போகிற பிரதான காரியங்களையும், விசேஷமாய் உலக முடிவில் வரப்போகிற அந்திக் கிறீஸ்துவின் செய்கைகளையும் குறித்து ஆழ்ந்த கருத்துள்ள தீர்க்கதரிசனங்களை வெளிப்படுத்தி யிருக்கிறார்.  கர்த்தர் அவதாரத்தின் 94, அல்லது 95-ம் ஆண்டில் அர்ச். அருளப்பர் இவ்வாகமத்தை எழுதினார்.


13. வேதப்புஸ்தகங்களை வாசிக்கலாமா? 

வேதப் புஸ்தகங்களை வாசிப்பது அவசியமில்லாதிருந்தாலும், அவைகளை அறிந்திருப்பது வெகு பிரயோசனமாயிருப்பதால், அவைகளை வாசிக்கும்படி திருச்சபை நம்மைத் தூண்டி வருகிறது.


14. அவைகளுக்குள் விசேஷமாய் வாசிக்க வேண்டியது எது? 

நமது விசுவாசத்துக்கும், நம்பிக்கைக்கும் அஸ்திவாரமாகிய சுவிசேஷமே.  சுவிசேஷமானது நம்மை இரட்சிக்கவும், அர்ச்சிக்கவும், நமக்கு மோட்ச வழியைக் காட்டவும், மோட்சத் திலிருந்து இறங்கி வந்த சேசுநாதருடைய சீவியத்தைச் சொல்லி, நமது கதியை அடைய நாம் செய்ய வேண்டியவைகளையெல்லாம் விளக்குகிறது.  மேலும் அது நமதாண்டவருடைய அளவிறந்த நேசத்தையும், இரக்கத்தையும் வெளிப்படுத்தி, அவர் மட்டில் நம்முடைய நேசத்தைத் தூண்டிவிடும்.


15. பதிதராலும், பிரிவினைக்காரர்களாலும், அல்லது திருச்சபை யின் உத்தரவின்றி அச்சிடப்படும் வேதப் புஸ்தகங்களை வாசிக்கலாமா? 

அப்பேர்ப்பட்டவர்கள் வேதப் புஸ்தகங்களிலுள்ளவைகளை வேண்டுமென்று மாற்றிவிட்டதினாலேயும், அநேகம் தப்பறைகளைச் சேர்த்திருப்பதினாலேயும், திருச்சபையானது தான் அங்கீகரிக்காத மொழிபெயர்ப்புகளை வாசிக்கலாகாதென்று கற்பித்திருக்கின்றது.  இந்தக் கட்டளையை மீறுகிறவன் சாவான பாவம் கட்டிக் கொள்ளுகிறான்.


16. பதிதரால் அச்சிடப்படும் வேதப் புஸ்தகங்களை வாங்கி வைத்திருக்கலாமா? 

அப்பேர்ப்பட்ட புஸ்தகங்களைத் தன் வசத்தில் முதலாய் வைத்திருக்கக் கூடாதென்று திருச்சபை கற்பித்திருக்கிறபடியால், அவைகளை வாங்கித் தன் வசத்தில் வைக்கிறவர்கள் கனமான பாவம் செய்கிறார்கள்.  தெரியாமல் வாங்கியிருந்தால், இவைகளை நெருப்பில் போட்டுச் சுட்டெரிக்க வேண்டியது.


17. திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட வேதப் புஸ்தகங்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? 

அவை அச்சிடப்படும்படி ஒரு மேற்றிராணியாரால் கொடுக்கப்பட்ட உத்தரவு (___________) குறிக்கப் பட்டிருப்பதால் கண்டுபிடிக்கலாம்.