சரீரத் தீங்கு

1. தற்கொலை, பிறர்கொலை மாத்திரம்தானா ஐந்தாம் கற்பனை விலக்குகிறது?

இன்னும் பிறருடைய ஆத்தும சரீரத்துக்கு எவ்வித தீங்கும் செய்யக்கூடாதென்றும் விலக்குகிறது.


141.  பிறருக்குத் தீங்கு செய்யக்கூடாதென்றால் என்ன?

மனிதனை அநியாயமாய் அடித்துக் காயப்படுத்தவும், சண்டை போடவும், பகை, பழி, வர்மம் வைக்கவும், கோபித்துத் திட்டவும் கூடாது என்பதாம்.


1. பிறனை அடித்துக் காயப்படுத்துவது எப்போதும் பாவமா?

நியாயமாய் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள அவசியம் நேரிடும் போது தவிர, மற்ற வேளையில் நமது எதிராளியை அடிப்பதும், காயப்படுத்துவதும் குற்றமாகும்.


2. அநியாயமாய்ப் பிறனை அடிப்பது எப்பேர்ப்பட்ட பாவமாகும்?

பிறனைக் கை, கால் முறித்துப் போடுகிறதும், அவனைக் கடினமாய்க் காயப்படுத்துகிறதும் கனமான பாவந்தான்.


3. பிறனைப் பகைக்கிறதும், அவன்மேல் உள்ளத்தில் வர்மம் கொண்டிருக்கிறதும், அவனைப் பழிவாங்க ஆசை கொள்ளுகிறதும் பாவமா?

அது எப்போதும் பாவமாயிருக்கும்.  எவனுடைய இருதயத் தில் கடும் பகை, வர்மம், பழி வாங்க ஆசையிருக்குமோ, அவன் கனமான பாவம் கட்டிக் கொள்ளுகிறவன்தான்.


4. பிறர் சாகவேண்டுமென்று ஆசைப்படலாமா?

பிறர் பேரிலுள்ள பகையினாலாவது, நமது சுயநலத்தைக் கருதியாவது, அவர்கள் சாகவேண்டுமென்று ஆசிக்கிறதும், செத்தால் சந்தோஷப்படுகிறதும் பெரிய பாவமாம்.


5. கடும் பகை, வர்மம் உடையவன் தேவநற்கருணையைப் பெறலாமா?

பெறவே கூடாது. ஏனெனில், அப்பேர்ப்பட்டவன் சாவான பாவ அந்தஸ்திலிருக்கிறான்.


6. பகை, வர்மம், பழிவாங்க ஆசையை விட்டுவிடாமல் பாவசங்கீர்த்தனம் செய்தால் என்ன நேரிடும்?

அது கள்ளப் பாவசங்கீர்த்தனம் என்பதால், அப்படிப்பட்ட பாவசங்கீர்த்தனத்தால் பாவப்பொறுத்தல் கிடையாது.


7. பாவப் பொறுத்தலை அடையும்படி செய்ய வேண்டியதென்ன?

உள்ளத்தில் வர்மத்தை முழுதும் தள்ளி, பகையாளியுடன் சமாதானமாய்ப் போகவேண்டும். “உனக்குத் தீமை செய்யும் அயலானுக்குப் பொறுத்தல் கொடு; அப்போதுதான் மன்றாடும் உனக்குப் பாவங்கள் மன்னிக்கப்படும்” (சர். பிர. 28:2).


8. பழி வாங்கலாமா?

எப்பொழுதும் கூடாது. ஏனெனில், தீயவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் சர்வேசுரனுக்குரிய சுதந்தரம்; நமக்குத் தீங்கு செய்கிறவர்களைத் தமக்கு இஷ்டமானபோது தண்டிப்பார். “பழிக்குப் பழிவாங்குவதும், ஏற்ற காலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடச் செய்து பதிலுக்குப் பதில் அளிப்பதும், நம்முடைய அதிகாரமே” என்று சர்வேசுரன் திருவுளம்பற்றினார் (உபா. 32:35).  “பழிவாங்க ஆசைப்படுகிறவனைச் சர்வேசுரனே பழிவாங்குவார், அவன் பாவங்களை இவர் ஒருபோதும் மறக்க மாட்டார்” (சர். பிர. 28:1). 


9. சேசுகிறீஸ்துநாதர் இவ்விஷயத்தில் என்ன படிப்பினை கொடுத் திருக்கிறார்?

சேசுகிறீஸ்துநாதர் சொல்லியிருக்கிறதாவது:  “கண்ணுக்குக் கண்ணும், பல்லுக்குப் பல்லும் என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்களே. நானோ தின்மைக்கு எதிர்த்து நிற்க வேண்டாமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.  ஆகையால், ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு... உங்கள் சத்துராதிகளைச் சிநேகியுங்கள்.  உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்” (மத். 5:38,39,44).


10. பழிவாங்க ஆசை நமது மனதில் உண்டாகும்போது, அதை ஜெயிக்கத்தக்க உபாயம் என்ன?

நமக்குத் தீங்கு செய்தவனுக்காக வேண்டிக்கொள்ளுகிறது.