142. ஆத்தும விஷயத்தில் பிறருக்குத் தீங்கு செய்வ தென்றால் என்ன?
துர்மாதிரிகை காண்பித்து அல்லது துர்ப்புத்தி சொல்லி பிறர் பாவத்தில் விழக் காரணமாயிருப்பதுதான்.
1. துர்மாதிரிகை ஆவதென்ன?
பிறர் பாவம் செய்யவோ அல்லது அவர்கள் சர்வேசுரன் மட்டில் கொண்டுள்ள சங்கையைக் குறைக்கவோ அல்லது அவர் களுடைய ஆத்துமத்துக்கு வேறு எந்தக் கேடு வருவிக்கவோ செய்கிற எவ்வித வார்த்தையும், கிரியையும் துர்மாதிரிகையென்று சொல்லப்படும். இன்னும் செய்யக் கடமைப்பட்ட ஒரு காரியத் தைச் செய்யாமல் விட்டுவிடுதல் பிறருக்குத் துர்மாதிரிகையா யிருக்கக் கூடும்.
2. பாவமான வார்த்தை அல்லது கிரியையினால் மாத்திரமே துர்மாதிரிகை காட்டக்கூடுமா?
நல்ல ஒழுங்குமுறைப்படி முழுதும் நடக்காமல், அதற்குக் குறைவான விதமாய்ப் பேசுவதினாலோ, செய்வதினாலோ துர்மாதிரிகை காட்டக்கூடும்.
3. அதெப்படி?
கவனமற்ற அல்லது விவேகமற்ற வார்த்தையினால் அல்லது கிரியையினால்தான். உதாரணமாக: இரகசியமான ஒரு காரணத் தினிமித்தம் சுத்தபோசனம் அனுசரிக்கக் கடமையில்லாதவன் அவ்விஷயத்தை அறிவிக்காமல் சுத்தபோசன நாட்களில் பிரசித்த மாய் மாமிசம் சாப்பிடுவது அவிவேகமான கிரியை ஆகும்.
4. துர்மாதிரிகை காட்டுகிறவன் எப்படி ஐந்தாம் கற்பனைக்கு விரோதமான பாவம் கட்டிக்கொள்ளுகிறான்?
துர்மாதிரிகை கொடுக்கிறவன் நமது இரட்சகரின் திரு இரத்தத்தால் மீட்டு இரட்சிக்கப்பட்ட ஆத்துமத்தை ஒன்று காயப் படுத்துகிறான், அல்லாவிடில் கொல்லுகிறான்.
5. சாதாரணமாய் பிறருக்குத் துர்மாதிரிகை விளைவிக்கிறவர்கள் யார்?
(1) சத்திய வேதத்துக்கும், பிறர்சிநேகத்துக்கும் விரோத மாய்ப் பேசுகிறவர்களும்;
(2) மந்திரக்காரனைக் கொண்டு தங்கள் பிள்ளைகளை மந்திரிக்கிறவர்களும், அஞ்ஞான சாஸ்திரம் பார்க்கிறவர்களும்;
(3) பரிசுத்ததனத்துக்கு விரோதமான வார்த்தை, கதை சொல்லுகிறவர்களும், அசுத்த பாட்டுப் பாடுகிறவர்களும்;
(4) தீமை செய்யவும், நன்மையை விலக்கவும் ஆலோசனை சொல்லித் தூண்டுகிறவர்களும்;
(5) வேதத்துக்கும், பரிசுத்ததனத்துக்கும் விரோதமான புஸ்தகங்கள், பத்திரிகைகள், படங்கள், இவைகளைப் பிறர் வாசிக்கும்படி அல்லது பார்க்கும்படி கொடுக்கிறவர்களும் இவை களை எழுதுகிறவர்களும் அல்லது சித்தரிக்கிறவர்களும், அச்சிட்டுப் பிரசுரம் செய்பவர்களும், விற்கிறவர்களும்;
(6) கெட்ட வாசிப்புக்கும், நாடகத்துக்கும், சினிமாவுக்கும் பிறரை அழைத்துக்கொண்டு போகிறவர்களுமாம்.
6. நாம் ஒரு காரியத்தைச் செய்யத் தடை இல்லாதிருக்கும்போது மற்றவர்கள் அதைக்கண்டு துர்மாதிரிகை கொண்டால் அதைச் செய்யலாமா?
(1) நாம் செய்யும் காரியம் ஓர் கட்டளையாயிருந்தால், அல்லது அதைச் செய்யாததினால், நமக்கு நஷ்டம் உண்டாவதா யிருந்தால், துர்மாதிரிகையைக் கவனியாமல் அதைச் செய்யலாம். உதாரணமாக: ஞாயிறு பூசைக்குப் போவதால், தகப்பனுக்குக் கோபம் வருமானாலும் பிள்ளைகள் பூசைக்குப் போக வேண்டும்.
(2) நாம் செய்யும் பாவமற்ற காரியம், பிறரது பலவீனத் தினிமித்தம் அல்லது அறியாமையினிமித்தம் துர்மாதிரிகைக்குக் காரணமாயிருந்தால், அதை அவசியமில்லாதபோது செய்யாமல் விட்டுவிடவேண்டும். உதாரணமாக:பசாசுக்குப் படைத்த பொருட்களைச் சாப்பிடுவதினால், பிறருக்குத் துர்மாதிரிகை ஏற்படும் என்று கண்டால், அவைகளைச் சாப்பிடக் கூடாது (உரோ.14:20,21; 1 கொரி. 8:9).
(3) நாம் செய்யும் நல்ல காரியம் சாதாரண சொற்பக் காரியமாயிருந்தால், அதை விட்டுவிடத் தகும். உதாரணமாக: வார நாட்களில் கோவிலுக்குப் போவதினால் புருஷனுக்குக் கோபம் வருமானால் மனைவி வீட்டிலிருந்து விடுவது நல்லது.
7. துர்மாதிரிகை காட்டுகிறவன் பாவம் கட்டிக் கொள்கிறானா?
கட்டிக்கொள்கிறான். “பலவீனமான சகோதரர்களுடைய மனச்சாட்சியைக் குத்துகிறதினாலே கிறீஸ்துநாதருக்கு விரோத மாய்ப் பாவம் செய்கிறீர்கள்” (1 கொரி. 8:12).
8. துர்மாதிரிகை காட்டுகிறவன் எப்போது சாவான பாவம் கட்டிக் கொள்கிறான்?
பிறர் சாவான பாவம் செய்வதற்கு யாதொருவன் வேண்டுமென்று காரணமாயிருந்தால், அல்லது அதைச் செய்யத் தூண்டிக் கொடுத்தால், அவன் சாவான பாவம் கட்டிக்கொள்கிறான்.
9. பிறருக்குத் துர்மாதிரிகையாயிருந்தவன் செய்ய வேண்டியதென்ன?
தான் காண்பித்த துர்மாதிரிகையால் உண்டான பொல்லாப்பு களைத் தன்னாலியன்ற மட்டும் தடுத்து, அவைகளைப் பரிகரிக் கும்படி பிரயாசைப்படவேண்டும். இவ்விதமாகச் செய்வதற்கு வேறே வழியில்லையானால், நன்மாதிரிகை, செபதபம் முதலிய நற்கிரிகைகளினால் இக்கடனைத் தீர்க்கக் கடவான்.
10. பிறருக்குத் துர்மாதிரிகை கொடுக்கிறவர்களைப் பற்றி சேசுநாதர் என்ன வசனித்திருக்கிறார்?
துர்மாதிரிகை கொடுக்கிறவர்களுடைய கழுத்திலே எந்திரக் கல்லைக் கட்டி ஆழமான சமுத்திரத்தில் அமிழ்த்தப்படுவது நலமென்று நமது ஆண்டவர் வசனித்திருக்கிறார் (லூக். 17:2; மத். 18:6; மாற். 9:41).
சரித்திரம்
இத்தாலி நாட்டில் ஒரு சர்வகலாசாலையில் படித்து வந்த வாலிபர்களில் உயர்ந்த கோத்திரத்தில் பிறந்தவனும், புண்ணியத்தில் சிறநதவனுமான ஒரு வாலிபன் இருந்தான். இவன் எப்படியோ ஒரு தீயவனோடு சகவாசம் செய்து அவனைப்போல் தீயவனானான். இவனுடைய நல்ல சிநேகிதர் இவனுக்குச் சொன்ன புத்திமதியெல்லாம் பிரயோசனமாகவில்லை. ஒருநாள் இராத்திரி பிள்ளைகள் எல்லோரும் நித்திரை செய்யும்போது, இந்த வாலிபன் திடீரென விழித்துக்கொண்டு, மிகவும் பயந்து நடுங்கி, பெரும் சத்தமாய் அழுவதைக் கேட்ட பிள்ளைகள் எல்லோரும் விழித்துக் கொண்டார்கள். பயப்படாமலிருக்க அவனுக்கு என்னென்ன புத்தி சொன்ன போதிலும், அவன் அழுகையை விடவில்லை. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட குருவானவரும் வந்து வாலிபனுக்குப் புத்தி சொன்னார். அப்போது அந்த வாலிபன் குருவானவரை நோக்கி, “எனக்குத் துர்மாதிரிகை காட்டி என்னைக் கெடுத்தவன் சபிக்கப்படக்கடவான்; எனக்கு இனி இரட்சணியம் இல்லை. திறக்கப்பட்ட நரகத்தில் விழப் போகிறேன்” என்று சொல்லி உயிர் விட்டான். (னி.மூ.னி. V. ஹிலி. 347.)