135. நாலாம் கற்பனையால் சர்வேசுரன் நமக்கு கற்பிக்கிறதென்ன?
தாய், தகப்பனுக்கு சங்கை, சிநேகம், கீழ்படிதல், அவசியமான சமயத்திற்கு உதவி இவை முதலிய கடமைகளைச் செலுத்தக் கற்பிக்கிறார்.
136. பிதா மாதா என்பதால் பெற்றதாய் தகப்பன் அல்லாமல் இன்னும் குறிக்கப்படுகிறவர்கள் யார்?
ஞான அதிகாரிகள். உலக அதிகாரிகள். எசமான்களான சிரேஷ்டர்கள் யாவருமேயாம்.
137. தாய் தகப்பன், எசமான் முதலிய பெரியோர்கள் ஆகாத காரியம் செய்யக்கற்பித்தால் செய்யலாமா?
கட்டாயம் செய்யக்கூடாது. ஏனெனில் சர்வேசுரனுடைய கற்பனைக்கு விரோதமான காரியங்களைக் கற்பிக்க அவர்களுக்கு அதிகாரமில்லை.
138. தங்கள் பிள்ளைகள் மட்டில் பெற்றோருக்குண்டான கடமைகள் எவை?
1. தங்கள் பிள்ளைகளுக்கு வேண்டிய உணவு. உடை, கொடுத்துக் காத்து அவர்களுக்கு தங்கள் நிலைமைக்கு தக்க உலகியல் கல்வியைப் படிப்பிப்பது.
2. வேத சத்தியங்களைப் படிப்பித்து தேவபயத்தில் அவர்களை வளர்ப்பது,
'3. அவர்களுடைய குற்றம் குறைகளை நியாயமாயும், அன்புடனும் தண்டித்துத் திருத்துவது.
4. எந்தக் காரியத்திலும் அவர்களுக்கு நல்ல முன் மாதிரிகை காண்பித்து நடப்பது.
139. 4-ம் கற்பனையின்படி முதலாளிகளுக்கும் வீட்டெஜமான்களுக்கும் தங்கள் தொழிலாளர் ஊழியர் மட்டில் கடமைகள் உண்டா ?
உண்டு, 1. இவர்களுக்கு நியாயமாய்ப் போதுமான ஊதியத்தைத் தரவேண்டும். 2. கிறிஸ்துவக் கடமைகளை சரிவர நிறைவேற்று வதில் தடையொன்றும் செய்யாமலிருப்பதோடு கூட போதுமான நேரமும் வசதியும் அளித்து ஊக்குவிக்க வேண்டும். ஞாயிறு முதலிய கடன் திருநாட்களில் இதைப்பற்றி விசேஷகவனம் செலுத்த வேண்டும்.
140. ஐந்தாம் கற்பனையால் சர்வேசுரன் விலக்குகிறதென்ன?
தன்னையாவது. புறத்தியாரையாவது கொலை செய்வதையும், புறத்தியாருடைய ஆத்தும சரீரத்துக்கு எவ்வித தீங்கு செய்வதையும் விலக்குகிறார்.
141. புறத்தியாருக்குத் தீங்கு செய்யக் கூடாதென்றால் என்ன?
மனிதனை அநியாயமாய் அடித்துக் காயப்படுத்தவும், சண்டை போடவும், பகை, பழி, வர்மம் வைக்கவும். கோபித்துத் திட்டவும் கூடாதென்பதாம்.
142. ஆத்தும விஷயத்தில் புறத்தியாருக்குத் தீங்கு செய்வதென்றால் என்ன?
துர்மாதிரிகை காண்பித்து அல்லது துர்ப்புத்திசொல்லி புறத்தியார் பாவத்தில் விழும்படி காரணமாயிருப்பதுதான்.
143. ஐந்தாம் கற்பனையால் சர்வேசுரன் நமக்கு கற்பிக்கிறதென்ன?
புறத்தியார் செய்த குற்றத்தை மன்னிக்கவும் தமது பகையாளிகளோடு சமாதானமாய்ப் போகவும், கூடின வரையில் எல்லோருக்கும் உதவி தர்மங்களைச் செய்யவும் வேண்டுமென்று கற்பிக்கிறார்.