பூசை விளக்கம். 1

107. முன் சொல்லியபடித் திவ்விய நற்கருணை தேவத்திரவிய அநுமானமாக ஸ்தாபிக்கப்பட்டதல்லாமல் மெய்யான தேவ பூசையாக அதனைச் சேசுநாதர் உண்டாக்கினாரென்பது உரோமான் திருச்சபை படிப்பிக்கும் ஐந்தாஞ் சாத்தியமாமே. இது சொல்லும்போது நற்கருணை உண்டாகுமுன்னும் பின்னும் திருச்சபை கட்டளையிட்ட சில மந்திரவகையும், சில சடங்கின் ஒழுங்கும், சில வஸ்திர முறையுஞ் சேசுநாதர் ஸ்தாபித்த பூசை என்று கருதவேண்டாம். இதெல்லாம் விசுவாசம் வளரவும், மனஸ் தாபம் எழும்பவும், வேண்டியதைக் கேட்கவுந் திருச்சபையால் ஸ்தாபித்த ஞான முறைகள் மாத்திரமென்று சொல்லப்படும். நாம் எதில் நம்முடைய பூசைக் குணமெல்லாம் ஸ்தாபித்தோமென்று வெளியாகும்படிக்கு முந்திப் பூசையாவது ஏதென்று காட்டக்கடவோம்.

ஆகையால் ஒன்றாகிய மெய்யான கடவுள் எல்லாத்தையும் உடையவராகி, எல்லாத்தையும் ஆளும் ஆண்மையைக் காட்டவும், அவருக்கு நாம் கீழ்ப்படிந்துரிய வணக்கத்தைச் செய்யவும் ஸ்தாபிக்கப்பட்ட குருக்களால் யாதொரு ஞான அர்த்தத்தைக் காட்டும் புறச் சடங்கோடு லௌகீகப் பொருளே தேவ பலியாகும் படிக்குத் திருப்பொருளாகச் செய்த பின்பு, அந்தப் பலியே அழிக்கப்பட்டுக் கடவுளுக்கு மாத்திரஞ் செய்யப்படும் படைப்புப் பூசையாமே. ஆகையால் மெய்யான குருக்களன்றி, மற்றவர் ஆணும், பெண்ணும் என்ன சடங்கு செய்தாலும், என்னத்தைப் படைத்தாலும், அது மெய்யான பூசையல்ல. அப்படிச் செபதப திருப்புகழ் மற்றப் புண்ணியங்கள் கடவுளுக்குத் தோத்திரமாகச் செய்யப்பட்டாலும் மேலந்தோன் அபத்தமாய்ச் சொன்னபடி மெய்யான பூசை என்று சொல்லப்படாது.

அர்ச். மத்தேயு சுவிசேஷத்தின் 9-ம் அதிகாரம் 13-ம் வசனத்தில் சேசு நாதர் தாமே தயையே வேண்டும் பூசை வேண்டாமென்றார். இதோ தயையாகிய புண்ணியமும் பூசையும் வேறு படுத்தின தாமே. அப்படியே ஆண்டவருக் குப் படைக்கப்பட்ட காணிக்கைகளை எல்லாம் கல்வீன் அபத்தமாய்ச் சொன்னபடி மெய்யான பூசை என்று சொல் லப்படாது. தாவீதரசன் 39-ம் சங்கீதத்தின் 7-ம் வசனத் தில் ஆண்டவரை நோக்கிப் பூசையும், மற்றக் காணிக்கை யும், வேண்டாமென்றீர் என்றெழுதினார். இதோ காணிக்கை வேறே, பூசை வேறே வைக்கப்பட்டதாமே. மீளவும் பூசையால் வணங்கப்பட்டவர் எல்லாத்தையும் உடையவ ரென்றும், எல்லாத்தையும் ஆண்டவரென்றுங் காட்டப் பூசை செய்யப்பட்டமையால் ஒரு மெய்யான கடவுளுக் கொழிய எவருக்கும் பூசை செய்யப்படாது.

ஆகையால் நாம் செய்யும் பூசை சர்வேசுரனுக்கொழி யத் தேவமாதாவுக்காகிலும், மற்ற மோக்ஷ வாசிகளுக்காகி லுஞ் செய்கிறோமென்று பதிதர் சொல்வது வெட்கமில்லா மல் சொன்ன அக்கிரமமான தப்பறைதானே. இதில் திருச் சபை செய்யுந் தன்மை அர்ச். அகுஸ்தீன் என்பவர் பாவுஸ் தினுஸ் சொன்ன அபத்தங்களை மறுத்த 20-ம் புஸ்தகத் தின் 13-ம் அதிகாரத்தில் சொன்னதாவது : கிறீஸ்துவர் கள் ஒருங்குடன் கூடி, வேத சாட்சிகளுடைய திருநாட் களைப் பத்தியோடு கொண்டாடுவது மெய்தான். ஆயினும் இது வேதசாட்சிகள் காட்டின புண்ணிய மாதிரிகைக்கொப் பத் தாங்களே நடக்கவும், அவர்கள் அடைந்த பலன்களில் பங்குடையவராகவும், அவர்கள் வேண்டுதலினால் ஆதரவ டையவுஞ் செய்வார்களொழிய, வேதசாட்சிகளுக்குப் பீடம் ஏற்றிப் பூசை செய்து படைப்பார்களென்று நினைக்க வேண்டாம். வேதசாட்சிகளை நினைத்து, அவர்களுக்கு ஆண்டவர் செய்த சகாயங்களுக்குத் தோத்திரமாகச் சர் வேசுரனுக்கு மாத்திரம் பீடத்தை ஏற்றுவதும், படைத் துப் பூசையைச் செய்வதுஞ் சத்தியந்தானே என்றார்.

மீளவும் முன் சொன்ன பூசையின் குணங்களைப் பற் றிச் சேசுநாதர் கபாலமலையின் மேல் தாமே பரம தேவ குருவாகவும், தாமே மாசில்லாத பலியாகவும், உலகந்துவக் கின நாள் முதற்கொண்டு செய்யப்பட்ட தொழிய , இனி உலகம் முடியந்தனையுஞ் செய்யப்படும் பாவங்கள் எல்லா வற்றையுந் தீர்க்கச் சிலுவையில் அறையுண்டு, இரத்தத்தைச் சிந்தி அடைந்த மரணமே மெய்யான உரிய பூசை என்று நம்மோடு பதிதருஞ் சந்தேகமறச் சொல்லுகிறார்கள். அந் தச் சிலுவை பூசைக்கொத்ததாய் நற்கருணைப் பூசை உண்டென்று நாமே சொல்லுகிறோம். சிலுவையில் படைக்கப் பட்ட தேவ பலி சேசுநாதர் ; இதிலேயுந் தேவ பலியாக நிற்பவர் அவர் தாமே. சிலுவையில் பலியைப் பிதாவுக்குப் படைத்த பரம தேவ குரு சேசுநாதர் ; இதிலேயும் பிரதான குருவாகப் பூசையை முடிப்பவர் அவர்தாமே. மற்றக் குருக்கள் சேசுநாதருக்கு ஊழியஞ் செய்பவரொழியத் தம் வினையாகப் பலியைப் படைப்பவரல்ல.

இதினாலல்லோ மற்றதெல்லாந் தம் வார்த்தையாகக் குருக்கள் சொன்ன பின்பு, நற்கருணையை உண்டாக்குகிற போது சேசுநாதர் வார்த்தையாக இது அவர் சரீரம் என் னாமல், இது என் சரீரம் என்று சொல்லி உண்டாக்குகிறார் கள். ஆகையால் சேசுநாதர் வார்த்தையாகவும் அவர் வினை யாகவுங் குருக்கள் எல்லாரும் நற்கருணை உண்டாக்குகிற செய்கை தானே மெய்யான பூசைக்கு வேண்டிய குணமெல் லாம் உடையதாகி, அந்தச் செய்கைதானே மெய்யான நற் கருணைப் பூசை என்று சொல்லக்கடவோம். அதெப்படி யெனில், மெய்யான பூசைக்கு லௌகீகப் பொருள் வேத சடங்கோடு திருப்பொருளாகவும் ஆண்டவருக்குப் படைக் கப்படவும் அவருக்குத் தோத்திரமாக அழிக்கப்படவும் இவை மூன்றும் மெய்யான குருவினால் செய்யவேண்டிய தல்லோ .

நற்கருணைப் பூசையிலோவெனில், பிரதான பரம தேவகுருவாகிய சேசுநாதர் நற்கருணை உண்டாக்குகிற செய்கையில் தானே இம்மூன்றையுஞ் செய்கிறாரென்று ஒப்பிப்போம். ஆகையால் முதலாவது இதில் வெறும் அப் பமும் இரசமுஞ் சேசுநாதர் சரீரமும் இரத்தமுமாகி , லௌ கீகப்பொருள் உத்தம பலியாகும் படிக்குத் தேவ சடங் கோடு திருப்பொருளாகக் கண்டோம். இரண்டாவது, முன் அங்கே இல்லாத சேசுநாதர் சரீரமும் இரத்தமும் சொன்ன வார்த்தையின் வல்லமையால் அப்பத்தின் குணங் களிலேயும் இரசத்தின் குணங்களிலேயும் உண்டாக்கி, ஸ்தாபித்த பீடத்தின் மேலே ஆண்டவர் சமுகத்தில் அதனை வைத்தபோது தேவ பலியே சர்வேசுரனுக்குப் படைக்கப்படுவது சரிதானல்லோ . மூன்றாவது, சேசுநா தர் நற்கருணை வார்த்தையின் வல்லமையால், மெய்யான போசனமாகையில் சொன்னபடி இதில் படைத்த தேவ பலி உண்ணப்படும்படிக்கு வைத்தமையால், மெய்யாகவே அழிக் கப்படும் படிக்கு வைத்ததென்று சொல்லக்கடவோம். இது பிறகு பூசை செய்யுங் குருக்கள் நற்கருணை உட்கொள்ளும் போது முடியுங் கருமமாமே.

இதனால் தோலேது நகரில் கூடின திருச்சபையார் ஸ்தாபித்த ஐந்தாங் கற்பனையில், சில குருக்கள் பூசை செய் யும்போது தாங்களே நற்கருணை உட்கொள்ளாதிருந்தார்க ளென்று அறிந்ததினால், அவர்களை மிகவுங் கண்டித்துப் பூசிக்கிறவன் முதலாய் அதில் ஒன்றுங் கொள்ளாமல் முடித்த பூசையை பூசை அல்லவென்றார்கள். ஆகிலும் இதில் தேவ பலியாக நிற்கும் சேசுநாதர் போசனமாக நின் றாலும், போசனமாக உண்ணப்பட்டாலும் அவர் அழிபட வுமில்லை, குறைபடவுமில்லை யென்பது மெய்தானாயினும் இதில் படைத்த பலி அழியாமல், மெய்யான பூசை இதல்ல வென்று சொல்லவும் வேண்டாம். அதேதெனில், சேசுநா தருக்குள்ள சுபாவத்தன்மை இதில் கெடாதாயினும் புதி தாய் நற்கருணை அப்பத்தின் குணங்களிலேயும் இரசத்தின் குணங்களிலேயும் அவர் அடைந்த தன்மை குருக்கள் நற் கருணை உட்கொண்ட வினையால் மெய்யாகவே முழுதும் இல்லாதே போவது சத்தியந்தான்.

மீளவும் நற்கருணைப் பூசை , சிலுவைப் பூசையைக் காட்டும் நினைவு அடையாளமாகஸ்தாபிக்கப்பட்டதல்லோ? அப்படி அர்ச். லூக்கா சுவிசேஷத்தின் 22-ம் அதிகாரம் 19-ம் வசனத்தில் சேசுநாதர் திருவுளம்பற்றின தாவது: என்னை நினைத்து நீங்களும் இதனைச் செய்யக்கடவீர்க ளென்றார். அதனால் அவர் அடைந்த மரண நினைவாக இத னைச் செய்யக்கடவோமென்று அர்ச். சின்னப்பர் முதல் நிருபத்தின் 11-ம் அதிகாரம் 26-ம் வசனத்தில் கொரிந்தியாருக்கு எழுதினார். அப்படியே சிலுவைப் பூசையைக் காட்டும் நினைவு அடையாளமாக வேண்டுமென்றதினால், நற்கருணை அப்பத்தின் குணங்களிலேயும் இரசத்தின் குணங்களிலேயும் உண்டாக்கப்பட்டதென்று சொல்லக் கடவோம்.

அதெப்படியென்றால், ஒவ்வொரு வகைக் குணங்க ளில் முன் சொன்னபடிப் பிரியாத் துணை முறையால் சேசு நாதர் சரீரமும், இரத்தமும், ஆத்துமமும், தேவசுபாவ மும் இருந்தாலும், சொன்ன நற்கருணை வார்த்தையின் வல் லமையால் அப்பத்தின் குணங்களில் அவர் சரீரமாத்திரம், இரசத்தின் குணங்களில் அவர் இரத்தமாத்திரம் இருப்பது சத்தியந்தானே. ஆகையால் நற்கருணையில் மெய்யாகவே சேசுநாதர் சரீரமும், இரத்தமும் பிரியாதாயினும் பிரிந்த பாவனை காட்டினதினால் சிலுவைமேல் அறையுண்டவர் திருமேனியில் நின்று சிந்தின இரத்தமெல்லாம் மெய்யா கவே பிரிந்த தன்மையை நற்கருணைப் பூசை அடையாள மாகக் காட்டுமல்லோ . இதனால் நற்கருணை குறையின்றி முழுத் தேவத்திரவிய அநுமானமாக ஒவ்வொருவகைக் குணங்கள் போதுமென்றாலும், அந்த நற்கருணை தானே சிலுவைப் பூசையைக் காட்டுந் தேவ பூசையாக இருவகைக் குணங்கள் அவசியமாய் வேண்டியதென்று முன் சொன் னோமல்லோ?

108.- இதெல்லாத்தையும் வெளிப்படுத்தின பின்பு, சேசுநாதர் நற்கருணையை உண்டாக்கினபோது நமக்குத் தேவத்திரவிய அநுமானங் கட்டளை இட்டதன்றி அவர் தாமே மெய்யான பூசை செய்தாரென்றும், அப்போஸ்தல ரும், மற்றக் குருக்களும் மெய்யான பூசை செய்யக் கட்ட ளையிட்டாரென்றும் ஒப்பிக்கக்கடவோம். மலக்கீயனென் னுந் தீர்க்கத்தரிசி முதல் அதிகாரம் 10-ம் வசனந் துவக்கி , பழைய வேதத்தில் செய்யப்பட்ட பூசைகளெல்லாவற்றை யுஞ் சர்வேசுரன் வெறுத்து நீக்கி, அதுகளுக்கு இடமாக வேறோர் உத்தம தேவ பூசை ஸ்தாபிப்பாரென்றும், அது பூவுலகெங்குஞ் செய்யப்படுமென்றும் எழுதி வைத்தார். ஆகிலுந் தேவ சிலுவைப் பூசை ஒருமுறை மாத்திரம் ஓரி டத்தில் மாத்திரஞ் செய்யப்பட்டமையால் அது இதில் தீர்க் கத்தரிசி சொன்ன பூசை அல்லவென்று சொல்லக்கடவோம்.

ஆகையால், பழைய பூசைகளுக்கு இடமாகச் சிலு வைப் பூசைக்கொப்பாக எங்கும் அநுதினமும் செய்யப் படுந் தேவநற்கருணைப் பூசைதானே அந்தத் தீர்க்கத்தரிசி சொன்ன பூசை என்பது நிச்சயமாமே. இந்தத் தீர்க்கத் தரிசியின் வார்த்தையைப்பற்றி அர்ச். அருளப்பர் சுவிசே ஷத்தின் 4-ம் அதிகாரம் 21-ம் வசனந் துவக்கிச் சமறித் தானவள் ஒருத்திக்குச் சேசுநாதர் திருவுளம் பற்றினதைப் பார்க்கக்கடவோம். யூதருக்கும், சமறித்தானருக்கும் நெடு நாள் வேத விகற்பமாகி எருசலேம் நகரிடத்தில் மாத்திரமே மெய்யான பூசை செய்யப்படுமென்று யூதர் சொல்ல , சம றித்தானரெல்லாருந் தம் ஊருக்கு அடுத்த கரிசி என்னும் மலைமேல் பூசையை முடிப்பது நல்லதென்று சொல்லிக் கொண்டு வந்தார்கள்.

இதில் மிகவுந் தங்களுக்குள்ளே தர்க்கமாகும் போது சமறித்தானர் வகையில் ஒருத்தி சேசுநாதரைக் கண்டு பேசி அவர் சொன்ன தேவ உணர்ச்சிகளால் அவரை வேத சாஸ் திரியென்றும், யூதர் குலத்தாரென்றும் அறிந்து கேட்ட தாவது: எங்கள் பிதாக்கள் இம்மலைமேலே தேவாராதனை செய்தார்களல்லோ? நீங்களோவெனில் அந்த ஆராதனை எருசலேமாநகரில் செய்யவேண்டுமென்கிறீர்கள்; இதென்ன ஐயாவென்று கேட்டாள். அதற்குச் சேசுநாதர் இம்மலை மேலும், எருசலேமிடத்திலும் பிதாவுக்குச் செய்த ஆரா தனை முடியும் நாள் வந்தது தானே என்ற பின்பு, மெய்யான வணக்கமுறை உடையவர் மெய்முறையாலும், ஞான முறை யாலும் பிதாவுக்கு ஆராதனை செய்யக் காலம் இதுதா னென்றார். இதில் மெய்யான வணக்க முறை உடையவ ரென்றபோது, சேசுநாதர் கிறீஸ்துவர்களைக் குறித்தா ரென்று சந்தேகப்படுவார் இல்லை.

மீளவும் யூதருக்கும், சமறித்தானருக்கும் இருந்த விகற்பம் மெய்யான பூசை ஆராதனையாலே வந்ததினால், இதில் சேசுநாதர் தேவாராதனை என்ற போது வேறு ஆரா தனையைச் சொல்லாமல் மெய்யான பூசை ஆராதனையைச் சொன்னாரென்று சந்தேகப்படத் தேவையில்லை. ஆகை யால் சேசுநாதர் சொன்னதற்கு அர்த்தமேதெனில், மலக் கீயன் சொன்னபடி யூதரும், சமறித்தானருஞ் சர்வேசுர னுக்குச் செய்து கொண்டு வந்த பூசைகளெல்லாம் அவரால் வெறுக்கப்பட்டு நீங்கி முடியும்படிக்கு நாளாகி இனிமேல் எருசலேம் நகரில் மாத்திரம் அல்ல, கரிசி மலைமேல் மாத் திரமும் அல்ல, எங்குங் கிறீஸ்துவர்களால் வேறோர் உத் தம் பூசை செய்யப்படுங் காலம் இதுவே என்றார். இதோ மலக்கீயன் சொன்ன தன்மை தானே.

மீளவும் பழைய வேதத்தின் பூசைகளில், ஆடுகள் முதலான மிருகங்கள் பலியாக வைத்ததினால் ஞான முறை யால் செய்யப்பட்ட பூசைகளென்று சொல்லப்படாதல் லோ? பின்னையும் அந்தப் பலிகளெல்லாம் நீசப் பலியாகை யால், சிலுவைப் பூசையில் கொடுக்கப்பட்ட தேவ பலியா கிய சேசுநாதரை மிகுந்த வேற்றுமையோடு காட்டினதி னால் அதுகளை மெய் முறையால் செய்யப்பட்ட பூசைக ளென்று சொல்லவுங் கூடாதே. கிறீஸ்துவர்கள் அநுதினங் காணும் நற்கருணைப் பூசையிலோவெனில், சேசுநாதர் தாமே பிரதான குருவும், தேவ பலியுமாகக் கொள்ளச் சிலு வைப் பூசைக் கொத்ததாய் மெய் முறையாலும், ஞான முறையாலுஞ் செய்யப்படும் பூசை என்பதற்குச் சந்தேகம் என்றுமில்லை. ஆகையால், மெய் முறையாலும், ஞான முறையாலுங் கிறீஸ்துவர்கள் எங்கும் பூசை செய்வார்கள் ளென்று சேசுநாதர் சொன்னபோது, உரோமான் திருச் சபையில் செய்யப்பட்ட நற்கருணைப் பூசையைக் குறித்தா ரென்று சொல்லக்கடவோம்.

109. - மீளவுஞ் சேசுநாதர் நற்கருணை உண்டாக்கின வகையைச் சலஞ் சாதியாமல் ஆராய்ந்து பார்க்கில் நாம் சொல்லுஞ் சத்தியந்தானே வெளியாகுமே. ஆகையால் அதற்கு முந்தி அறியவேண்டிய தாவது: தாவீதரசன் பாடின 109-ம் சங்கீதம் 4-ம் வசனத்தில் சொன்னபடியும், அர்ச். சின்னப்பர் எபிறேயருக்கு எழுதின 7-ம் அதிகாரம் 17-ம் வசனத்திலும், 26-ம் வசனத்திலுஞ் சொன்னபடி யும், ஆண்டவர் சத்தியமாகச் சொல்லுகிறேனென்று ஆணை யிட்டுச் சேசுநாதரை மேல்கீசதேக்கன் வகையால் நித்திய மாய் எந்நாளும் பூசிக்கிற குருவாக ஸ்தாபித்தாரென்று நிச்சயமாய் அறிவோமல்லோ? மேல்கீசதேக்கன் செய்த பூசையோவெனில், மோயீசன் முதல் ஆகமத்தின் 14-ம் அதிகாரம் 18-ம் வசனத்தில் சொன்னபடி மேல்கீசதேக் கன் அப்பத்தையும், முந்திரிகைப்பழத்தின் இரசத்தையும் படைத்துப் பூசை செய்ததறிவோம்.

ஆகையால் சிலுவையில் சேசுநாதர் தம்மை நமக்கா கப் பலியாகச் சாகக் கொடுத்துச் செய்த பூசை அப்பத்தை யும், இரசத்தையுங்கொண்டு செய்யாமையால் அந்தப் பூசை மேல்கீசதேக்கன் வகைப் பூசையுமல்ல. அதனை ஒரு முறை மாத்திரஞ் செய்ததினால் சிலுவைப் பூசையை மாத்திரம் பற்றிச் சேசுநாதர் நித்தியமாய் எந்நாளும் பூசிக்கிற குரு வாக ஸ்தாபிக்கப்பட்டவரும் அல்ல. ஆகையால் வேறே வகைப் பூசையைப்பற்றி அந்த வார்த்தையை ஆண்டவர் சத்தியமாகத் திருவுளம்பற்றினாரென்று சொல்லக்கட வோம். இந்த வேறே வகைப் பூசையோவெனில், நற்கரு ணைப் பூசையொழிய வேறுண்டென்று இந்நாள் வரைக்குஞ் சொல்வாருமில்லை, நினைப்பாருமில்லை. நற்கருணைப் பூசை யோவெனில் அப்பத்தையும், இரசத்தையுங் கொண்டு அநு தினஞ் சேசுநாதர் பரம தேவ குருவாகச் செய்யுந் திவ்விய பூசையாகையால், இதுவே மேல்கீசதேக்கன் வகைப் பூசை யென்று நித்தியமாய் எந்நாளும் பூசிக்கிற குருவாகிய சேசு நாதர் அநுதினம் எங்குஞ் செய்யும் பூசை என்றுஞ் சொன் னால் புத்திக்கொத்த நியாயமாமே.

ஆகையால் சேசுநாதர் அப்பத்தையும் இரசத்தையும் வெவ்வேறு கையில் ஏந்திக்கொண்டு இது என் சரீரம், இது என் இரத்தமென்று நற்கருணை உண்டாக்கித் தம் மைச் சீஷர்களுக்குப் போசனமாகக் கொடுக்குமுன்னே, தம்மைப் பிதாவுக்குப் பூசையாகப் படைத்தாரென்று சொல்லக்கடவோம். இல்லாவிட்டால் அப்பத்தையும், இர சத்தையும் படைத்த மேல்கீசதேக்கன் வகைப் பூசை சேசு நாதர் செய்தது எப்போதென்று பதிதர் தாமே காட்டக் கடவார்கள். ஆகையால் சேசுநாதர் அப்பத்தையும், இர சத்தையுங் கொண்டு நற்கருணை உண்டாக்கின வகையைப் பார்க்கில், நற்கருணை மெய்யான பூசையென்பதற்குச் சந்தேகமில்லை.