செப்டம்பர் 19

அர்ச். ஜானுவாரியுசும் துணைவரும் - வேதசாட்சிகள் - (கி.பி. 305)

ஜானுவாரியுஸ், பெனவென்தும் என்னும் நகரின் ஆயராவார். அக்காலத்தில் தியோகிளேசியன் சக்கரவர்த்தி செய்த வேத கலகத்தில், அநேக கிறீஸ்தவர்களும் குருக்களும் வேதத்திற்காகப் பிடிபட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். தமக்கு மிகவும் பிரியமான சீஷன் சிறைப்படுத்தப்பட்டிருப்பதை ஜானுவாரியுஸ் அறிந்து, அவரைச் சந்தித்து, ஆறுதல் சொல்லும்படி சிறைச்சாலைக்குப் போனார். இதைக் கேள்விப்பட்ட அதிபதி ஆயரைப் பிடிக்கும்படி கட்டளையிட்டான். ஜானுவாரியுஸ் அதிபதிமுன் விசாரிக்கப்பட்டபோது அவர் வேதத்தை மறுதலியாததினால், நெருப்பில் போட்டுச் சுட்டெரிக்கும்படி தீர்ப்பிடப்பட்டார்.  ஆனால் நெருப்பால் அவர் சிறிதும் சேதம் அடையாததினால், துஷ்ட மிருகங்களுக்கு இரையாகப் போடப்பட்டார்.  அந்த மிருகங்கள் அவருக்குத் தீமை செய்யாமல் நாய்க்குட்டிகளைப் போல் அவருடையவும் அவரது துணைவர்களுடையவும் பாதங்களை நக்கிக்கொண்டிருந்தன. இதைக் கண்ட ஆயிரக்கணக்கான பிறமதத்தினர் கிறீஸ்தவர்களானார்கள். இதனால் அதிபதி சினங்கொண்டு வேதசாட்சிகளை சிரச்சேதம் செய்யும்படி கட்டளையிட்டான். மரித்த வேதசாட்சிகளின் சரீரங்களைக் கிறீஸ்தவர்கள் பக்தியுடன் எடுத்துக்கொண்டு போய், அடக்கம் பண்ணினார்கள். ஜானுவாரியுஸின் சிரசும், அவருடைய இரத்தம் அடங்கிய இரு பளிங்கு குப்பிகளும் இன்று வரையில் நேப்பிள்ஸ் நகரில் பக்தியுடன் ஸ்தாபிக்கப்பட்டு, அவற்றால் அநேக புதுமைகள் நடந்து வருகின்றன. இறுக உறைந்திருக்கும் அவருடைய இரத்தம் அடங்கியக் குப்பிகளை அவருடைய சிரசின் அருகில் கொண்டுபோகும்போது, இரத்தம் இளகி, கரைந்து சிகப்பு நிறமாகி, கொதிப்பது போலக் காணப்படும். இந்நாள் வரையில் இவ்வற்புத சம்பவம் ஒவ்வொரு வருடமும் அவர் திருநாளன்று நடந்தேறி வருகிறது        

யோசனை

ஆண்டவர் அர்ச்சியசிஷ்டவர்கள் மூலமாய் செய்து வரும் புதுமைகளை நாம் கண்டறிந்து, நமது விசுவாசத்தைத் தூண்டி, புண்ணிய வழியில் நடப்போமாக