செப்டம்பர் 18

அர்ச். குப்பெர்தீனோ ஜோசப் - துதியர் - (கி.பி. 1663).

இவருடைய பக்தியுள்ள தாயார் தவறு செய்யும்போது இவரைக் கண்டித்து, தெய்வ பக்தியிலும் புண்ணிய வாழ்விலும் சிறந்து விளங்கும்படியாக வளர்த்து வந்தாள். இவர் தமது சரீரத்தை அடக்கி ஒறுத்து, ஆன்மாவை பரிசுத்தமாய் காப்பாற்றி வந்தார். இவர் பிரான்சீஸ்கு மடத்தில் தவ சந்நியாசியாகச் சேர்ந்து, தாழ்ச்சிக்குரிய வேலைகளை சுறுசுறுப்புடன் செய்து வந்தார். மடத்தின் ஒழுங்குகளில் குறிக்கப்பட்ட ஜெபமும் தபமும் இவருக்குப் போதாமல் வேறு தவக்காரியங்களையும் செய்வார். இரவு வேளையில் வெகு நேரம் ஜெபத்தில் செலவழிப்பார். மட அதிபர் காரணமின்றி தம்மைத் தண்டிக்கும்போதும், கடிந்துகொள்ளும்போதும் இவர் சாக்குபோக்கு சொல்லாமல் அவைகளுக்கு உட்படுவார். குருப்பட்டம் பெற்றபின் முன்னிலும் அதிக ஜெபத் தியானங்களையும் தவக்காரியங்களையும கடைபிடித்து வந்தார்.  பூசை நேரத்திலும், ஜெப வேளையிலும் பரவசமாவார். சில சமயங்களில் சகலரும் பிரமிக்க, ஆகாயத்தில் எழும்பி பரவசமாய் நின்று ஜெபிப்பார். இவர் தேவதாயார் மீது அதிக பக்தி வைத்து, என் தாயே! என் தாயே! என்று பேரொலியாய்க் கூப்பிடுவார். ஒருநாள் இவர் அசிசி மடத்திற்குப் சென்றபோது, அதன் முகப்பில் தேவமாதா சுரூபத்தைக் கண்ட மாத்திரத்தில், இதோ என் தாய் என்று கூறி 40 அடி உயரம் மேலே எழும்பி சுரூபத்தின் பாதத்தை முத்தி செய்தார். இவர் புதுமை வரமும் தீர்க்கதரிசன வரமும் பெற்று கணக்கற்ற வியாதியஸ்தரைக் குணப்படுத்தினார். இதனால் இவர் இருக்கிற இடங்களில் பெரும் ஜனக்கூட்டம் கூடும். இவர் தமது பிரசங்கத்தாலும் அற்புதங்களாலும் அநேக பாவிகளையும் பதிதரையும் மனந்திருப்பினார். இவ்வளவு பெரிய அர்ச்சியசிஷ்டவராயிருந்தும், ஜோசப் தாம் பெரும் பாவி என்றும் ஒன்றுக்கும் உதவாதவன் என்றும் கூறுவார். கடைசியாய் இவர் பாக்கியமான மரணமடைந்து மோட்ச சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.

யோசனை

சுவிசேஷப் படிப்பினைப்படி நாமும் ஒன்றுக்கும் உதவாத ஊழியரென்று நம்மை தாழ்த்துவோமாக.