செப்டம்பர் 20

அர்ச். எயுஸ்தாக்கியுசும் குடும்பத்தாரும் - வேதசாட்சிகள் – (கி. பி. 118).

பிறமதத்தைச் சார்ந்த இவர், மிகுந்த செல்வந்தராய் உரோமை சக்கரவர்த்திகளின் படைத் தலைவனாகி, அதிக மகிமையுடனும் புகழுடனும் வாழ்ந்து வந்தார். இவர் ஒருநாள் வேட்டையாடுகையில், ஒரு மானைக் கண்டு அதைத் துரத்தினபோது, மான் தன் ஓட்டத்தை நிறுத்தி அவருக்கு எதிராக நின்றது. அப்போது அதன் கொம்புகளின் மத்தியில் கர்த்தர் பாடுபட்ட சுரூபம் பிரகாசத்துடன் காணப்படுகிறதை எயுஸ்தாக்கியுஸ் கண்டு, அதிசயித்து நின்றார். தேவ ஏவுதலால் கிறீஸ்தவ வேதமே மெய்யான வேதமென்று நம்பி, தமது மனைவி இரு பிள்ளைகளுடன் ஞானஸ்நானம் பெற்று சத்தியவேதக் கட்டளைப் பிரகாரம் நடந்து வந்தார். இதனால் இவர் தனக்கிருந்த அனைத்து செல்வங்களையும் பதவியையும் இழந்தார். தனக்கு வந்த துன்பத்தைப் பொறுமையுடன் சகித்து, தன் குடும்பத்துடன் வேறு நாட்டிற்குப் புறப்பட்டுப் போகும்போது, நடுவழியில் இவர் மனைவியும் இரு பிள்ளைகளும் காணாமல் போனார்கள். எயுஸ்தாக்கியுஸ் யோபுவைப்போல பொறுமையாயிருந்து, ஒரு குடியானவனிடம் வேலையில் அமர்ந்தார். அக்காலத்தில் உரோமாபுரி இராயன் பகைவர்கள்மேல் படையெடுக்க நேரிட்டதால், எயுஸ்தாக்கியுஸை அழைத்து வரும்படி தூதரை அனுப்பினான். இராயன் கட்டளைப்படி எயுஸ்தாக்கியுஸ் படையை நடத்தி, சத்துருக்களை ஜெயித்து உரோமைக்குத் திரும்புகையில், காணாமற்போன தன் மனைவியையும் இரு குமாரர்களையும் கண்டு சந்தோஷமடைந்தார். பின்பு போரில் அடைந்த வெற்றிக்காகப் பொய் தேவர்களுக்குப் பலி செலுத்தும்படி இராயன் விளம்பரம் செய்தான். இராயன் கட்டளைக்கு எயுஸ்தாக்கியுஸ் கீழ்படியாததால், இவரையும், இவர் மனைவியையும் மற்றும் இரு குமாரர்களையும் சிங்கங்களுக்கு இரையாகப் போட இராயன் கட்டளையிட்டான். அந்த துஷ்ட மிருகங்கள் இவர்களைத் தொடாததினால், ஒரு வெண்கலத்தாலான காளையைச் செய்து அதன் வயிற்றில் இந்த நால்வரையும் அடைத்து நெருப்பு மூட்டியபோது, இவர்கள் உயிர் துறந்து வேதசாட்சி முடி பெற்றார்கள்.      

யோசனை

நமக்கு உண்டாகும் துன்பம், வறுமை, வியாதி முதலியவைகளால் மனம் சோர்ந்துபோகாமல் தேவ சித்தத்திற்கு பணிந்து இருக்கப் பழகுவோமாக.