செப்டம்பர் 11

அர்ச். பாப்னூசியுஸ் - ஆயர் (4-ம் யுகம்).

இவர் எஜிப்து தேசத்தில் பிறந்து, கல்வி சாஸ்திரங்களைக் கற்றறிந்தபின் காட்டிற்குச் சென்று, அர்ச். அந்தோணியாருக்கு சீஷனாகி, ஜெப தபத்திலும் கடின வேலையிலும் ஆண்டவருக்கு ஊழியம் செய்து வந்தார். இவருடைய மேலான புண்ணியங்களினாலும், கல்வியறிவினாலும், இவர் ஆயராக அபிஷேகம் பெற்று, தமது கிறீஸ்தவர்களை சத்திய வேதத்தில் உறுதிப்படுத்தி, வெகு பிரயாசையுடன் உழைத்து வந்தார். ஆனால் அக்காலத்தில் வேத கலகம் உண்டாகி அநேக கிறீஸ்தவர்கள் கொடூர வேதனையை அனுபவித்து வேதசாட்சிமுடி பெற்றார்கள். வேறு அநேகர் சுரங்கங்களுக்கு கொண்டுபோகப்பட்டு, அங்கே கடினமான வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். பாப்னூசும் வேதத்திற்காகப் பிடிபட்டு, இவருடைய வலது கண் பிடுங்கப்பட்டு, சுரங்கங்களுக்கு அனுப்பப்பட்டார். அவ்விடத்தில் இவர் வெகு பொறுமையுடன் அவ்வேலையைச் செய்து வந்தார். சில காலத்திற்குபின் திருச்சபைக்கு சமாதானம் உண்டானபோது, பாப்னூசும் மற்றவர்களுடன் சிறையினின்று விடுதலையாக்கப்பட்டு தமது மறைமாவட்ட மக்களிடம் திரும்பி வந்தார். அக்காலத்தில் நீசே நகரத்தில் கூடிய பொதுச்சங்கத்திற்குப் போயிருந்த தைரியராயர் எனப்படும் கொன்ஸ்டான்டின் இராயர், இவர் மட்டில் அதிக மரியாதை காட்டி, இவரைக் கண்டு பேசும்போதெல்லாம் இவருடைய வலது கண் இருந்த இடத்தை உருக்கமாய் முத்தி செய்வார். இந்த அர்ச்சியசிஷ்;டவர் வேதத்திற்காக வெகு காலம் உழைத்து மோட்ச முடி பெற்றார்.    

யோசனை

வேதத்தின் பொருட்டு நமக்கு யாதொரு நிந்தை, அவமானம், கஷ்ட நஷ்டம் உண்டாகும்போது, கலங்காமல் அதறகுரிய மோட்ச சம்பாவனை கிடைக்குமென்று நம்புவோமாக.