அர்ச். நிக்கொலாஸ் - துதியர் - (கி.பி. 1306).
ஏழைகளாயினும் புண்ணியவாளர்களான இவருடைய பெற்றோருக்கு வெகு காலம் குழந்தை இல்லாததினால், அவர்கள் அர்ச். நிக்கொலாஸை மன்றாடியதின் பேரில் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு அந்த அர்ச்சியசிஷ்டவரின் பெயரையே வைத்து, அவரை தர்ம வழியில் கவனத்துடன் வளர்த்து வந்தார்கள். இவர் குழந்தையாய் இருக்கும்போதே தேவ பக்தி கொண்டு வெகு நேரம் ஜெபத்தில் செலவழிப்பார். ஏழைகள் மட்டில் இரக்கம் கொண்டு தன் கையில் கிடைக்கும் உணவுகளை அவர்களுக்கு கொடுப்பார். சிறுவயதிலேயே துறவியாய் இருக்க விரும்பி, அர்ச். அகுஸ்தீன் சபையில் சேர்ந்து, தாழ்ச்சி, கீழ்ப்படிதல், பொறுமை, ஜெபம் தபம் முதலிய ஞானச் செயல்களை மேற்கொண்டார். தமது பாதுகாவலரான அர்ச். நிக்கொலாஸ் மீது அதிக பக்தி வைத்து அவருடைய நன்மாதிரிகையைப் பின்பற்றுவார். இவர் குருப்பட்டம் பெற்று, பிறரின் ஆன்ம இரட்சண்யத்திற்காக வெகு ஊக்கத்துடன் உழைத்து வந்தார். சேசுநாதருடைய திருப்பாடுகளின் மட்டில் அதிக பக்தி வைத்து, அவற்றை நினைக்கும்போது உருக்கத்துடன் கண்ணீர் சிந்துவார். உத்தரிக்கிறஸ்தல ஆன்மாக்களுக்காக இடைவிடாமல் வேண்டிக்கொண்டு, அவர்களுக்காக திவ்விய பூசை செய்து ஒப்புக்கொடுப்பார். பூசைக்குப்பின் எத்தனை ஆன்மாக்கள் மோட்சத்திற்குப் போயினவென்று தேவ ஏவுதலால் அறிவார். மகா புண்ணியவாளராய் வாழ்ந்து, இவருக்கு மரணம் நெருங்கியிருப்பதைக் கண்டு இவர் பயப்பட்ட தருவாயில், தேவதாயார் இவருக்குக் காணப்பட்டு தைரியம் கூறியதால், இவர் மனச் சமாதானத்துடன் மரித்து நித்திய சம்பாவனையில் பிரவேசித்தார்.
யோசனை
நமது பெயர்கொண்ட அர்ச்சியசிஷ்டவர்கள் மீது பக்தி வைத்து அவர்களுடைய நன்மாதிரிகையைப் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும்.