செப்டம்பர் 12

பரி. கன்னிமரியாயின் திருநாமத்தின் திருநாள்.

1683-ம் வருடம் துலுக்கர் ஆஸ்திரியா தேசத்தின் மேல் படையெடுத்து, அதன் முக்கிய பட்டணங்களை முற்றுகையிட்டு அதை பிடித்து, அத்துடன் மற்ற கிறீஸ்தவ தேசங்களையும் கைப்பற்றி அழிக்குந் தருவாயில், கிறீஸ்தவர்கள் தேவதாயாருடைய சகாயத்தை மன்றாடி அற்புதமாக ஜெயங் கொண்டார்கள். இதன் ஞாபகார்த்தமாக கன்னிமரியம்மாள் பிறந்த திருநாளுக்குப்பின் அவர்களுடைய பரிசுத்த நாமத்தின் திருவிழாவை திருச்சபையில் எங்கும் கொண்டாடும்படி பரிசுத்த பாப்பரசர் கட்டளையிட்டார். சேசுநாதருடைய திருநாமத்திற்குப்பின் கன்னிமரியம்மாளின் நாமம் சிறந்தது. மரியா என்னும் நாமத்திற்கு சமுத்திரத்தின் நட்சத்திரம் என்று அர்த்தமாகும். கப்பலோட்டும் மாலுமியானவன் கடல் கொந்தளித்துப் புயலுண்டாகும்போது, நட்சத்திரத்தைப் பார்த்து கப்பலோட்டுவான். அது போல கடலாகிய இவ்வுலகில் புயலாகிய துன்பதுரிதம், இடைஞ்சல் இக்கட்டுகளை வெல்ல வேண்டுமாகில், மோட்ச இராக்கினியின் சகாயத்தை தேட வேண்டும். ஆங்காரம், கோபம், மோகம் முதலிய துர் இச்சைகள் நமது இருதயத்தில் எழும்பும்போது, நாம் மோட்ச இராக்கினியை அபய சத்தத்துடன் கூப்பிட்டு அவைகளை அடக்கும்படி மன்றாட வேண்டும். நாம் தேவதாயாரின் நாமத்தைப் பக்தியுடன் மனதில் தியானித்து நாவால் உச்சரித்தால், நமது அவசரங்களிலும் அபாயங்களிலும் அந்தப் பரம நாயகி நமக்கு உதவியாக வருவார்கள். நாம் எப்போதும் சேசுநாதருடைய திருநாமத்துடன் அவருடைய தாயாரின் நாமத்தையும் சேர்த்து உச்சரிப்போமாக.     

யோசனை

தேவமாதாவின் பெயரை உச்சரிக்கும்போது பக்தி வணக்கத்துடன் உச்சரிக்க வேண்டும்.