நவம்பர் 10

அர்ச். அவெல்லினோ அந்திரேயாஸ் - துதியர் - (கி.பி. 1608).

பெலவேந்திரர் என்று அழைக்கப்படும் அந்திரேயாஸ், நற்குணமுள்ளவராய் வாழ்ந்து, மேற்படிப்பு படித்து முடித்தபின், குருப்பட்டம் பெற்று திருச்சபை நியாய விசாரணை கோர்ட்டில் வழக்கறிஞர் உத்தியோகம் புரிந்துவந்தார். ஒருநாள் இவர் இரு கட்சியினருக்கும் பாதிப்பில்லாத வகையில் ஒரு அற்பப் பொய் கூறவேண்டியதிருந்ததினால், அந்த பதவியிலிருந்து விலகி, தான் செய்த அந்த தவறுக்காக கடின தவம் புரிந்தார். பிறகு, பிறர் ஆன்ம இரட்சணியத்திற்காக கடினமாய் உழைத்து வந்தார். அந்திரேயாசுடைய பக்தி, அறிவு, புண்ணிய வாழ்வைக் கண்ட அவ்வூர் ஆயர், ஒரு கன்னியர் மடத்திற்கு சிரேஷ்டராக இவரை நியமித்தார். அந்திரேயாஸ் தமது கிறீஸ்தவ மக்களுக்குப் பிரசங்கத்தாலும், ஒழுக்கத்தாலும் ஞானக் கண்ணாடிபோல துலங்கி, கன்னியருக்கும் புண்ணிய வழியைக் கற்பித்துவந்தார். தகுந்த காரணமின்றி கன்னியர் மடத்தைப்பற்றி பேசாதபடிக்கு சிலரை விலக்கம் செய்தார். இதனால் அவர்கள் இவர்மேல் அவதூறு பேசி, இவரை அடித்துக் காயப்படுத்தினதுடன், வேறொரு சமயத்தில் இவரை அவர்கள் கொல்லவும் முயற்சித்தப்போது, தேவ செயலால் இவர் சாவிலிருந்து தப்பித்துக்கொண்டார். இவர் இந்த அக்கிரமங்களைப் பொறுத்துக்கொண்டு, அவர்களுக்காக மன்றாடி வந்தார். அநேக வருட காலம் தமது அலுவலை கவனத்துடன் செய்து, துன்ப துரிதங்களையும் பொறுமையுடன் சகித்து, கடின வியாதியுற்று, திவ்விய பலிபூசை நிறைவேற்றத் தொடங்கும்போது, பீடத்தின் படியில் உயிர் துறந்து மோட்ச சம்பாவனையை அடைந்தார்.  

யோசனை

பிறரைக் குறை கூறும் உரையாடல்களையும், ஊர் செய்திகளையும் துறவற மடங்களில் போய் பேசுவது தகாது. மேலும் நமக்கு தேவையில்;லாத போது, அப்படிப்பட்ட இடங்களுக்கு நாம் போகாமலும் இருப்போமாக.