நவம்பர் 07

அர்ச். வில்லிப்றார்ட் - ஆயர் - (கி.பி. 738).

இவர் இங்கிலாந்து தேசத்தில் பிறந்து, தமது 8-ம் வயதில் ஒரு அர்ச்சியசிஷ்டவருடைய கண்காணிப்பில் வளர்ந்து, பக்தியிலும் அறிவிலும் சிறந்து, வயது வந்தவுடன் குருப்பட்டம் பெற்றார். பிறருடைய ஆன்ம இரட்சணியத்தின் மீது ஆவல் கொண்டு, வட ஐரோப்பிய தேசங்களிலுள்ள பிறமதத்தைச் சார்ந்தவர்களுக்கு வேதம் போதித்துவந்தார். இவருடைய புண்ணியத்தையும் ஆன்ம ஈடேற்றத்தின் மீது இவருக்குள்ள ஆவலையும்பற்றி கேள்விப்பட்ட பாப்பாண்டவர் வில்லிப்றார்டுக்கு ஆயர் பட்டம் அளித்து, வேதம் போதிக்கும்படி உத்தரவளித்தார். ஆன்ம இரட்சணியத்தின் மட்டில் அதிக ஆவல் கொண்டிருந்த இந்தப் பரிசுத்த ஆயர், ஊர் ஊராய்ச் சுற்றித் திரிந்து வேதம் போதித்து, பிறமதத்தினர் கோவில்களை இடித்து, சிலைகளை உடைத்து, விடா முயற்சியுடன் பிரசங்கம் செய்து, அநேகரை சத்தியவேதத்திற்கு மனந்திருப்பினார். இவர் திராட்சை இரசத்தை புதுமையாக அதிகரிக்கச் செய்தார். ஒருநாள் ஒரு பூசாரி இவரை கையோங்கி அடிக்கப் போனபோது, அவன் பசாசால் ஆவேசங்கொண்டு சில நாட்களுக்குள் அவலமாய்ச் செத்தான். இதைக் கண்டவர்கள் பயந்து, இவருக்கு மரியாதை செலுத்தினதுடன், பிறமதத்தினர் அநேகர் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றார்கள். ஐந்து வருட காலம் வில்லிப்றார்ட் உடல் களைப்பை பாராமலும், நிந்தை அவமானத்தை சட்டை பண்ணாமலும், சத்தியவேதம் பரவ இரவு பகலாய் உழைத்தார். புண்ணியங்களாலும், புதுமைகளாலும் அநேக மக்களை சத்தியவேதத்தில் சேர்த்து, இதற்குச் சம்பாவனையாக மோட்ச இராச்சியத்தை சுதந்தரித்துக்கொண்டார்.  

யோசனை

நமது ஆன்ம இரட்சணியத்திற்காக உழைப்பதுடன், பிறருடைய ஆன்ம ஈடேற்றத்திற்காகவும் ஆண்டவரிடம் மன்றாட வேண்டும்.