அர்ச். ஓமெர் - ஆயர் - (கி.பி. 670).
இவர் உத்தம குடும்பத்தாரும் தனவந்தருமான தாய் தந்தையிடமிருந்து பிறந்து, உலக சாஸ்திரங்களையும் வேதசாஸ்திரங்களையும் கற்று, தர்ம வழியில் நடந்துவந்தார். சிறு வயதிலேயே இவர் தெய்வ பக்தியுள்ளவராய் நடந்து, தேவ பணிவிடையில் பிரவேசிக்க ஆசையாயிருப்பதைக் கண்ட இவருடைய தந்தை, சந்தோஷப்பட்டு அதற்கான நல்ல ஆலோசனையும் அவருக்குச் சொல்லி வந்தார். தன் தாய் இறந்தபின் ஓமெர் துறவியாகப் போக இருப்பதையறிந்த இவர் தந்தையும் தமது சொத்துக்களையெல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு தன் குமாரனுடன் ஒரு துறவற மடத்தில் சேர்ந்தார். ஓமெர் துறவற மடத்தைப் பூலோக மோட்சமாகப் பாவித்து சகல புண்ணியங்களிலும் சிறந்து விளங்கி, மற்றவர்களுக்கு முன்மாதிரிகையாய் இருந்தார். வாரத்தில் மூன்று நாள் ஒருசந்தி பிடித்து, இரத்தம் வரத் தமது சரீரத்தைத் தண்டித்து, வெகு நேரம் ஜெபத்தியானம் செய்து, தரையில் படுத்து, அரிதான தவம் புரிந்து வந்தார். இவருடைய மேலான ஞானத்தையும் கல்வியையும் குறித்து ஆயராகக் கட்டாயப்படுத்தப்பட்டார். இந்த மேலான நிலைக்கு ஓமெர் உயர்த்தப்பட்டபின், முன்னிலும் அதிக புண்ணியங்களைச் செய்து, தம்மை நீசனாகக் தாழ்த்தினார். தமது கிறீஸ்தவர்களுக்காக ஜெபித்து, ஒருசந்தி பிடித்து, தவம் புரிந்து, இடைவிடா பிரசங்கத்தால் பிறமதத்தினரை சத்திய வேதத்திற்கு மனந்திருப்பினார். சிலைகளையும் பள்ளிவாசல்களையும் தகர்த்து, அசமந்தமாய் உள்ளவர்களை விசுவாசத்தில் திடப்படுத்தி, தமது மறைமாவட்ட கிறீஸ்தவர்களை உத்தம விசுவாசிகளாக்கினார். தமது உழைப்புக்குச் சம்பாவனையான மோட்சத்தைப்பற்றி நினைத்துப், பாக்கியமான மரணமடைந்து அதில் மகிமையுடன் பிரவேசித்தார்.
யோசனை
பெற்றோரே, உங்கள் பிள்ளைகள் தேவ ஊழியத்தில் சேர மனதாயிருந்தால், அவர்களைத் தடை செய்யாதீர்கள்.