செப்டம்பர் 04

அர்ச். விற்றர்போரோசம்மாள். கன்னிகை - (கி.பி. 1251).

ரோசம்மாள் இத்தாலி தேசத்திலுள்ள விற்றர்போ நகரில் பிறந்து, குழந்தையாய் இருக்கும்போதே தேவ கிருபையால் அநேக புதுமைகளைச் செய்துவந்தாள்.

அக்காலத்தில் பிரேடெரி என்னும் இராயன் கர்வங்கொண்டு, திருச்சபைக்குப் பல துன்பங்களைச் செய்து ஆயர்களை அவமதித்து, பாப்பாண்டவரையும் பலவகையில் நிர்பந்தப்படுத்தினான்.

மூன்று வயது குழந்தையான ரோசம்மாள் மெள்ள மெள்ள நகர்ந்து கோவிலுக்குப் போய், தேவநற்கருணை பெட்டிக்கு முன் வெகு நேரம் என்னமோ கேட்பது போல கவனமாய்க்  கேட்டுக்கொண்டிருந்தாள்.

10-ம் வயதில் விற்றர்போ நகரிலுள்ள பெரிய மைதானத்தில் அவ்வூர் ஜனங்களுக்குமுன், ஒரு பிரமாண்டமான பாறையின்மேல் ஏறி, சகல கிறீஸ்தவர்களும் சத்திய திருச்சபையில் ஒற்றுமையாயிருந்து சேசுநாதருடைய பதிலாளியான பரிசுத்த பாப்பரசர் சொற்படி கேட்டு நடக்கவேண்டுமென்று பிரசங்கிக்கும்போது, இவள் நின்ற பாறை மேலே உயர்ந்து, இவள் பேசி முடித்தபின் அது முன்போல தாழ இறங்கினது.

இந்த அதிசயத்தைக் கண்ட ஜனங்கள் வியந்து, திருச்சபைக்குப் பிரமாணிக்கமான பிள்ளைகளானார்கள்.

இராயன் இதைக் கேள்விப்பட்டு, ரோசம்மாளை நாடுகடத்தினான். அவ்விடத்தில் இவள் திருச்சபைக்காகப் பிரயாசைப்பட்டதினால், சீக்கிரத்தில் திருச்சபைக்கு சமாதானமுண்டாகி, கொடுங்கோலன் அரசாட்சியை இழந்தான்.

ரோசம்மாள் ஒரு குகையில் வசித்து, ஜெப தபத்தில் ஈடுபட்டு 18-ம் வயதில் மரித்து மோட்சம் சேர்ந்தாள். 

யோசனை.

திருச்சபையை அல்லது அதன் போதகர்களை விரோதிக்கும் மனிதருடன் நட்பு வைக்கலாகாது.