செப்டம்பர் 03

அர்ச். சின்ன சிமியோன். (கி.பி. 592).
இவர் அந்தியோக்கியா பட்டணத்தில் பிறந்து சிறுவயதிலேயே அருகில் இருந்த ஒரு துறவற மடத்தில் சேர்ந்து, சகல புண்ணியங்களிலும் சிறந்து விளங்கினார்.

அந்த மடத்தைச் சேர்ந்த ஒரு வனவாசிக்கு இவர் சீஷனாகி, அவரது தர்ம படிப்பினையைப் பின்பற்றி வந்தார். கபடமற்றவரான சிமியோன் ஒரு நாள் காட்டில் ஒரு சிறு சிறுத்தைப் புலியைக் கண்டு, அதன் கழுத்தைக் கயிற்றால் கட்டி அதை தன் குருவிடம் கொண்டு போய்: “சுவாமி, இது எவ்வளவு பெரிய பூனை” என்றார். இதைக் கண்ட வனவாசி, அந்த மிருகம் அவருக்குத் தீமை செய்யாததினால் அதிசயித்தார்.

பிறகு தன் குருவின் உத்தரவுப்படி இரண்டு தூண்களை எழுப்பி, மாறி மாறி அவைகள் மேலேறி, 68 வருடம் கடுந்தவம் புரிந்து வந்தார். இவர் செய்துவந்த புண்ணிய செயல்களை முன்னிட்டு, ஆண்டவர் இவருக்குப் புதுமை வரம் அளித்தபடியால், கணக்கற்ற ஜனங்கள் இவருடைய தூண்களைச் சுற்றி நிற்பார்கள்.

தம்மைச் சூழ்ந்திருக்கும் திரளான ஜனக்கூட்டத்திற்கு தேவையான நல்ல புத்திமதிகளைக் கூறி, அவர்கள் கூட்டிக்கொண்டு வந்திருக்கும் சகல வியாதியஸ்தரையும் சுகப்படுத்துவார்.

இவர் தீர்க்கதரிசன வரம் பெற்றதுடன் மனிதருடைய மனதிலுள்ள எண்ணங்களையும் வெளிப்படுத்துவார். இதனால் அத்தேசமெங்கும் இவருடைய புகழ் பரவியதால், அரசரும், பிரபுக்களும், மக்களும் இவரைக் கனப்படுத்தி மரியாதை செலுத்தினார்கள்.

திருச்சுரூபங்களை உடைக்கும்படி துஷ்டர் முயற்சி செய்கையில், சிமியோன் சுரூப வணக்கத்தால் உண்டாகும் பிரயோசனத்தைப்பற்றி ஒரு கடிதம் எழுதி, இராயனுக்கு அனுப்பினார்.

இவ்வாறு கடுந் தவம் செய்து, ஆண்டவருக்கு ஊழியம் செய்து, தமது 80-ம் வயதில் சிமியோன் மண்ணுலகை விட்டு விண்ணுலகில் பிரவேசித்தார்.

யோசனை.

நாம் சிமியோனைப் போல கடுந் தவம் செய்யாவிடினும்,  ஐம்புலன்களையும் அடக்கி ஒறுத்தலை அனுசரிப்போமாக.