மகா இரக்கமும், தயவும், பட்சமும் நிறைந்த சர்வேசுரா! உமது படைப்புகளாகிய நாங்கள் மனங்கலங்கி, எங்கள் பலவீனத்தினாலே சோர்ந்து கண்ணீர் சொரிந்து கொண்டு, உம்மை நோக்கி அபயமிடுகிறோம். பலமற்ற எங்கள் கரங்களை விரித்து அலறிக் கூப்பிடுகிறோம். சர்வ வல்லவரும், ஏக சகாயருமாகிய எங்கள் தேவனே, மிகுந்த நிர்ப்பந்தத்தில் அகப்பட்டிருக்கிற எங்களுக்கு உம்மை விட வேறு ஆறுதலும் சகாயமும் இல்லையே. நாங்கள் செய்ய வேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியாமல் பயந்து நடுநடுங்கி மெத்த நம்பிக்கையோடும், தாழ்ச்சியோடும் இரக்கத்தின் சமுத்திரமாகிய உம்முடைய பாதத்தை நாடி வருகிறோம். எங்களுக்குக் கர்த்தரான தேவனே! உயர்ந்த வானத்தில் வான்தலங்களை நாட்டி, இத்தாழ்ந்த பூமியில் எங்களை ஏற்றி, எங்களுக்கு வேண்டிய நன்மை உபகாரங்களையயல்லாம் செய்து கொண்டு வரும் கடவுளே! மகா கஸ்திக்குரிய இந்நாளில் இரக்கம் பொருந்திய உமது திருக்கண்களால் எங்களை நோக்கியருளும். திரளான தண்ணீர் இரைச்சலையும், மகா சமுத்திரத்தின் வீரியமான அலைகளையும் அடக்கிக் கொண்டு, இராஜாக்களுடைய இருதயங்களை உமது சித்தப்படி ஆட்டுவிக்கும் சர்வலோக அதிபதியானவரே, இக்கட்டுகளில் ஏக அடைக்கலமே, எங்களுக்கு இத்தருணத்தில் சகாயமாக வாரும். பூமி நிலை தடுமாறினாலும், மலைகள் சமுத்திரங்களில் சாய்ந்தாலும், அவை களின் தண்ணீர்கள் கொந்தளித்துப் பொங்கி அதனால் மலைகள் அதிர்ந்தாலும், இஸ்பிரீத்து சாந்து ஆளுகிற உம்முடைய திருச்சபை துன்பப் படுகையில் அதற்குச் செழிப்பும், சந்தோமும், வெற்றியும் நீர்தானாகையால் நரக வாசல் அதை மேற்கொள்ளாதென்று நாங்கள் கெட்டியாய் அறிந்திருக்கிறோம். தேவரீர் அதன் நடுவில் இருக்கிறீர். அது ஒருக்காலும் அசையாது.
விடியற்காலம் வருகையில் அதற்குச் சகாயம் செய்வோமென்று உமது ஊழியக்காரரான தாவீது என்பவரைக் கொண்டு திருவுளம்பற்றினீரே. இப்போது உமது அடியார்களுடைய பாவங் களைப் பார்த்து கோபம் கொண்டு உமது திரு முகத்தை மறைத்துக் கொள்ளாதேயும். எங்கள் இரட்சணியத்தின் தேவனே! எங்களை ஒருக் காலும் கைவிடாதேயும். தேவரீருடைய ஆசீர் வாதம் உம்முடைய கைப்படைப்பாகிய எங்கள் பேரில் தாராளமாய் இறங்கக்கடவது. “இந்தச் சிறுவன் கூப்பிட்டான். கர்த்தர் அவன் மன்றாட் டைக் கேட்டு இடுக்கத்தினின்று அவனை இரட்சித்தார்” என்கிற வார்த்தையை எங்கள் பேரில் நிறைவேற்றியருளும். உமக்குப் பயந்தவர் களாகிய எங்களை விடுவிக்க உம்முடைய சம்மனசுக்களுக்குக் கட்டளையிட்டருளும். விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது இறக்கைகளின் நிழலிலே எங்களை நிறுத்தி யருளும். எங்களுக்காக யாவையும் செய்த தேவனே! உம்மை நோக்கி நாங்கள் கூப்பிடு கிறோம். எங்கள் மேல் கோபமாயிராமல், பரமண்டலங்களில் இருந்து ஒத்தாசை அனுப்பி எங்களை இரட்சித்தருளும். காரியத்தின் மாறுதல் உந்நதமான தேவரீருடைய கரத்தில் இருக்கின்றது. உம்முடைய கரம் குறுகியிருக்கிறதில்லை.
அதிசயங்களைச் செய்கிற தேவனே! மக்கள் கூட்டங்களிலே உம்முடைய வல்லமையைக் காட்டியருளும். என்றென்றைக்கும் எங்கள் மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறை யாக உம்முடைய கோபம் நீடித்திருக்கச் செய் வீரோ? கர்த்தாவே! உமது அடியோர்களின் தவிப்பைப் பார்த்து இரட்சிப்பை எங்களுக்குக் கட்டளையிட்டருளும். தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் தீங்கடைந்த வருங்களுக்கும் ஈடாக எங்களை மகிழ்ச்சியாக்கியருளும். ஆண்டவரே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய் எழும்பி னாலும், தேவரீர் உமது நாமத்தின் நிமித்தம் எங்களுக்குக் கிருபை செய்யும். இஸ்ராயேலின் நம்பிக்கையே, நொந்திருக்கும் கத்தோலிக்க அரசாங்கங்களை உயர்த்தி, சத்திய வேத இராஜாக் களுக்கு சமாதானத்தைத் தந்தருளும். சகல ஜனங் களையும் படைத்த சர்வேசுரா, அஞ்ஞானிகள் மனந்திரும்பவும், பதிதர்கள் சத்தியத் திருச்சபை யில் வந்து பிரவேசிக்கவும், பிரிவினைக்காரர் களின் கலகங்கள் ஒழிந்து அவர்களும் மனந்திரும் பவும் கிருபை செய்தருளும். இந்த இக்கட்டுக் காலங்களில் திருச்சபையைப் பலப்படுத்தும் ஆண்டவரே. ...........(இன்றைய பாப்பானவரின் பெயரைச் சொல்லவும்) என்னும் பாப்பானவ ருடைய சுகிர்த கருத்துக்கள் நிறைவேறச் செய் தருளும். திருச்சபைக்குப் பலமான வெற்றி கொடுத்து, அது தடையின்றி பூலோகம் எங்கும் பரவச் செய்தருளும்.
பராக்கிரம சிங்கமும், சமாதானப் பிரபுவு மாகிய எங்கள் கர்த்தரே! சுற்றிலும் எங்களுக்கு விரோதமாகப் பாளையம் இறங்கித் திருச்சபைச் சத்துருக்களை ஒடுக்கி, எங்களுக்குத் தைரியத்தைத் தந்தருளும். உமது இரட்சிப்பின் கேடயத்தை எங்களுக்குக் கட்டி, யுத்தத்தின் வெண்கல வில்லை எங்களுக்குக் கொடுத்து, ஞானப் போர் புரிய எங்களுக்கு பலம் தந்தருளும். சத்துருக்களைக் கடும் காற்றின் முகத்துப் பதரைப் போல் ஓடச் செய்தருளும். திருச்சபையின் சத்துருக்களின் வழி இருளும் சறுக்கலுமாகக் கடவது. எங்கள் விரோதிகள் எங்களுக்கு வைத்த வலைகளில் அவர் களே விழக்கடவார்கள். நாங்கள் தேவரீரிடத்தில் நம்பிக்கை வைத்திருப்பதால், உமது நாமத்தின் பலத்தினாலே அவர்களைக் கீழ்ப்படுத்துவோம். நாங்கள் எங்கள் வில்லை நம்ப மாட்டோம். எங்கள் வாள் எங்களை இரட்சிக்க முடியாது. நீரே எங்களுக்குப் பரிபூரண வெற்றியைக் கொடுக் கிறவர். நீரே பூமியின் கடைசி முனை மட்டும் யுத்தங்களை ஓயச் செய்வீர். பலசாலிகள் உம்மு டைய சமூகத்திலே சுழற்காற்றின் புழுதிக்குக் கீழ் அசையும் துரும்புபோல் ஆவார்கள். உம்மைச் சார்ந்திருக்கிறவர்களுக்கு கல்மலையும் அரண் மனையும் நீரே. ஆகையால் சிறுமைகளில் இருக்கிற எங்கள் பேரில் இரங்கி, இந்த இடுக்க காலத்தில் வரப்பிரசாத மழையை எங்கள் மீது பொழியச் செய்தருளும். எங்களுக்குத் தைரியம் தந்து, நாங்கள் சன்மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்தருளும் சுவாமி. உமது நாமத்துக்கு மகிமை யுண்டாகத்தக்கதாக நாங்கள் இஸ்பிரீத்து சாந்துவின் வரங்களால் தெளிந்து அந்தரங்கப் பிரகாசத்தால் கம்பீரம் கொண்டு ஆகாயத்தில் எழும்பும் பறவைகளைப் போல உம்மை நோக்கி விசுவாசத்தால் நாங்கள் எழும்பி வரச் செய்தருளும் சுவாமி.
ஆமென்.
ஒரு பர. அருள். திரி.