சர்வ வல்லபரும், கிருபாசமுத்திரமுமான பிதாவாகிய சர்வேசுரா, தேவரீருடைய அத்தியந்த பட்சத்தை மனிதருக்குக் காண்பிக்கத்தக்கதாக, உமது திருக்குமாரனுடைய அநேக நன்மை நிறந்த திவ்ய இருதயத்தை வெளிப்படுத்தி, இத்திரு இருதயத்தில் உண்டான திரவியங்கள் எல்லாவற்றையும் எங்களுக்குச் சொந்தமாய் அளிக்கச் சித்த மானீரே. தேவரீர் அடியேனுக்குச் செய்த எண்ணிறந்த உபகாரங்களைப் பற்றி, நான் உமக்குத் தகுந்த தோத்திரம் செலுத்தக் கூடாமையால், இந்தப் பரிசுத்த இருதயம் உமக்குச் செலுத்துகிற குறையற்ற நன்றியறிந்த தோத்திரங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.
நீசப்புழுவுக்கு சமமாயிருக்கிற அடியேன், உமது மகிமைப் பிரதாபத்திற்குச் சரியான பணிவிடை செய்யக் கூடாமையால், இந்தத் திரு இருதயம் உமக்குச் செலுத்துகிற ஆராதனை நமஸ்காரங்களை உமக்குப் பாத காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். நான் இந்தப் பூசையைக் காணும்போது, என் பலவீனத்தாலும், பக்திக்குறைவாலும் செய்த அநேக குற்றங்களைப் பரிகரிக்கத் தக்கதாக, இத்திரு இருதயம் சிலுவை மரத்தில் உமக்குச் செலுத்தின உன்னதப் பலியை அவரோடு ஒன்றித்து உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். தேவரீர் இத்திரு இருதயத்தின் பேரில் வைத்திருக்கிற மட்டற்ற அன்பை அடியேனுக்குப் பங்கிட்டுக் கொடுத்தருளும் சுவாமி.
கிறீஸ்தவர்களுடைய மதுரமுள்ள இருதயமே, எங்களுடைய சகல அவசரங்களில் உதவியும், தஞ்சமுமாகக் கொடுக்கப்பட்ட திரு இருதயமே, நாங்கள் செய்த பிழையெல்லாம் நிவிர்த்தியாக்கி, எங்கள் நல்ல பிரதிக்கினைகளுக்கு நீர் பிணையாயிருந்து, இப்போது நாங்கள் கண்ட பூசையின் பலனை இழந்து போகாதபடிக்கு எங்களைத் தற்காத்து, எங்களை உமது திவ்ய பிதாவின் சிம்மாசனத்தருகில் சேர்த்தருளுமாறு மன்றாடுகிறோம்.
சர்வேசுரனுடைய அர்ச். மாதாவே, இதோ உமது சரணமாக ஓடி வந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு நீர் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவருமாய், மோட்சமுடையவருமாயிருக்கிற நித்திய கன்னிகையே, சகல ஆபத்துக்களிலும் நின்று எங்களைத் தற்காத்து இரட்சித்துக் கொள்ளும். ஆமென்.
தேவ வரப்பிரசாதத்தின் தாயே, இரக்கத்துக்கு மாதாவே, அர்ச்சியசிஷ்ட மரியாயே, எங்கள் மாற்றானுடைய சோதனையிலேயும், மரண நேரத்திலேயும் உம் திருக்குமாரனை வேண்டி எங்களைக் காக்கவும், ஆளவும் கைக்கொண்டு நடத்தவும் வேணுமென்று உமது திருப்பாதம் முத்தி செய்து உம்மை மன்றாடுகிறோம் தாயே.
ஆமென்.