இரண்டாம் செபம்

சர்வலோகத்தையும் சிருஷ்டித்தவருமாயிருக்கிற சேசுவே! உமது அளவற்ற நன்மைத்தனத்தால் வல்லமையுடையவராய் உலகத்தை கையில் அடக்கிக் கொண்டிருக்கிறவரே, தேவரீர் மனிதருக்காகப் பாடுபடத்தக்க காலம் நெருங்கிவந்தபோது நீர் ஒரு பூங்காவனத்தில் எழுந்தருளி அங்கே பூமியில் சாஷ்டாங்கமாக விழுந்து உமது பிதாவை மும்முறை வேண்டிக்கொண்ட பொழுது நீர் அனுபவிக்கப்போகிற பாடுகளையெல்லாம் ரூபமாய் கண்டதினாலும், உமது திரு ஆத்துமம் துக்கக்கடலில் அமிழ்ந்து உமது திருச் சரீரம் முழுவதும் இரத்த வியர்வை வியர்த்து நீர் அனுபவித்த துக்க வேதனைகளையும், உமது சீஷர்களை மும்முறை எழுப்பிச் செபம் செபிக்கத் தேவரீர் அவர்களுக்குக் கற்பித்தருளின நல்லுணர்ச்சியினாலும் அதிகமாய் மேற்கொண்ட நித்திரையினால் ஐம்புலன்களும் ஒடுங்கி அறிவு சோர்ந்து ஒருகணப் பொழுதாயினும் விழித்திருக்க அவகாசமற்றவர்களாகிய அவர்களால் அற்ப ஆதரவும் இல்லாதிருந்ததையும் நினைத்தருளும் சுவாமி. ஆ, என் சர்வேசுரா! அடியேன் உமது சித்தத்திற்கு முழுவதும் ஒத்து நடக்க எனக்கு வேண்டிய நல்லுணர்ச்சிகளை என் இருதயத்தில் பிறப்பித்தருளும். நான் உலக சிந்தனைகளைவிட்டுத் தனித்திருந்து பிரயோசனமாகும்படி உம்மை செபித்து வேண்டுதல் செய்வதற்கு எனது புலன்கள் இடையூறு செய்யாமலிருக்கவும் எனது இரட்சண்யத்தின் சத்துருக்கள் மேற்கொள்ளாதபடிக்கு அகலவும், உமது ஊழியத்தில் அடியேன் எப்பொழுதும் விழித்திருக்கவும், உமது திவ்விய ஜெபத்தியானத்தின் திருப்பலனை கிருபை செய்தருளவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன் சுவாமி.

ஒரு பர., அருள்., திரி. ஆமென்.