மூன்றாம் செபம்

சம்மனசுகளுக்கு உண்மையான சுதந்திரமுமாய்ச் சகல இன்பம் நிறைந்த மோட்சமுமாயிருக்கிற சேசுவே, உம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மனிதர் கையில் பிடிபட்டு பொய்சாட்சிகளினால் குற்றம் சாட்டப்பட்டீர்; நல்ல இளம் பிராயத்தில் மூன்று நியாயாதிபதிகளுடைய அநியாயத் தீர்வைக்குள்ளானீர்; உமது சத்துராதிகள் மூர்க்க வெறிகொண்ட சிங்கங்கள் போல் உம்மைச் சூழ்ந்து உமது திருமுகத்தை மூடி, குட்டி பரிகாசம் செய்து உமது திருக்கன்னத்தில் அறைந்து தூஷணித்துத் துப்பினார்கள்; உமது வஸ்திரத்தைக் கழற்றிப் பரிகாசமாய் கிழிந்த வஸ்திரத்தை உடுத்தினார்கள்; உம்மைத் தூணோடு கட்டி, வார்களினாலும் கசைகளினாலும் திருத்தசை கிழிய அடித்தார்கள்; உமது திருசிரசில் முள்முடி அணிந்தார்கள்; உமது திருத்தோளின் மேல் சிலுவை மரத்தைச் சுமத்தி நடத்தினார்கள். இதுவுமன்றி இன்னும் உம்மை வருத்தின எண்ணமுடியாத கொடுமையான நிந்தைப் பெருக்கத்திற்கெல்லாம் உள்ளானபோது நீர் அனுபவித்த அளவில்லாத வருத்த வேதனைகளையும், கஸ்தி நோவுகளையும் நினைத்தருளும் சுவாமி. ஆ, என் ஆண்டவரே! தேவரீர் சகித்த தூஷண வார்த்தைகளையும், அனுபவித்த சகல கொடூரப் பாடுகளையும் குறித்து, காணப்பட்ட சத்துருக்களிடத்திலும் காணப்படாத சத்துருக்களிடத்திலுமிருந்து என்னைக் காத்து, உமது அடைக்கல நிழலில் அமர்த்தி நித்தியத்தில் மகிமைப் பிரதாபத்தை அடையக் கிருபை செய்தருளவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன் சுவாமி.

ஒரு பர., அருள்., திரி. ஆமென்.