என் இரட்சகரான சேசுக்கிறிஸ்துநாதரே, பரலோகம் பூலோகம் எல்லாம் படைத்தவருடைய ஏக குமாரரே, உம்மை சிநேகிக்கிறவர்களுக்கு நித்திய மதுரமே! சகல சந்தோஷத்திற்கும் ஆசைக்கும் மேலான சந்தோஷமே, ஆதியில் நித்திய பிதாவினால் குறிக்கப்பட்டு வேதாகமத்தில் சொல்லப்பட்டபடியே தேவரீர் மனுஷ அவதாரம் எடுத்து மகா வறுமையை அனுபவித்து மனுஷ ஜென்மத்திற்குரிய மெலிவான பலவீனங்களுக்கெல்லாம் உள்ளானீர். விருத்தசேதனத்தின் வேதனையையுஞ் சகித்து வெகுதூர வழியான எஜிப்து யாத்திரையில் மிகுந்த பசிதாகத்தையும் பொறுத்தருளச் சித்தமானீர். உலகத்தில் தேவரீர் ஒரு பரதேசியைப் போல வாழ்ந்து, அஞ்ஞானிகளுக்கு உமது உண்மையான வேதத்தை உபதேசித்து, உபத்திரப்படுபவருடைய நோய் பிணிகளைத் தீர்த்துக் கடைசியாய் பிதாவினுடைய திருவுளம் நிறைவேற உமது ஜீவிய காலமெல்லாம் செலவழித்தீர். தேவரீருடைய மரணத்திற்குமுன் சர்வேசுரனுடைய சிநேகப் பெருக்கத்தை மனிதருக்கு காட்டும்படி மறைவாய் எப்போதும் அடியோர்களோடு இருக்கச் சித்தமான காரணத்தினாலே தேவரீரைக் கொல்ல வேண்டுமென்று கொலைப்பாதகரான யூதர் கூடின அன்று இராத்திரிதானே எங்களுக்கு ஜீவியம் அளிக்கும் ஆராதிக்கப்பட்ட தேவநற்கருணையை உண்டாக்கி, உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுத்தருளினீர். என் சர்வேசுரா, உலகம் முடியுமளவும் எங்களை விட்டுப் பிரியாதிருக்கும் உம்முடைய அன்பின் தேவதிரவிய அநுமானமாகிய இந்த அற்புதமான பரம இரகசியத்தைத் தேவரீர்தாமே அடியோர்களுக்கு அறிவித்துப் போதித்தருளினீர்! உமது சீஷர்களுடைய கால்களைக் கழுவி, உமது திருவாய் முத்தங் கொடுத்து, அவர்களுக்கு உம்முடைய தேவ தாழ்ச்சியின் மாதிரியைக் காண்பித்து உம்மை உணவாகத் தந்தருளினதுமல்லாமல், அவர்களில் ஒருவனால் நீர் காட்டிக்கொடுக்கப்படுவதையும், மற்றொருவனால் மறுதலிக்கப்படுவதையும், கடைசியாய் உம்மைவிட்டு யாவரும் ஓடிப்போவதையும் ஏற்கனவே அறிக்கையிட்டருளினதெல்லாம் நினைத்தருளும் சுவாமி. ஆ, என் சர்வேசுரா! நான் காட்டிக் கொடுத்தவனான யூதாஸ் என்பவனைப்போல் ஆகாமலும், உலகப் பாசப் பற்றுதலால் உம்மை மறுதலியாமலும் இருக்க அநுக்கிரகஞ் செய்தருளும். தேவரீருக்கு நானே துரோகம் செய்தேனாகையால் உத்தம மனஸ்தாபப்பட்டு நற்கிருத்தியங்களை அநுசரித்து சுத்தமாகவும் தேவநற்கருணையில் உமது திருச்சரீரத்தை உட்கொள்கிறதினால் இரட்சண்யம் அடையவும், இந்த திவ்விய சற்பிரசாதத்தை அருந்தினபொழுதே ஆத்துமத்திற்கு நிறைவு அளித்து நித்திய ஜீவியத்தின் வித்தாக என் இருதயத்தில் ஆழமாய் வேரூன்றி விளையும்படிக்குத் தயை புரியுஞ் சுவாமி.
ஒரு பர., அருள்., திரி. ஆமென்.
ஒரு பர., அருள்., திரி. ஆமென்.