நான்காம் செபம்

பரலோக வைத்தியரான சேசுவே! தேவரீர் சிலுவையில் உயர்த்தப்பட்ட போது உமது அவயவங்களெல்லாம் தளர்ந்து நீர் அனுபவித்த அரிய நோக்காட்டையும், பட்ட தவிப்பையும் அளவிடக் கூடுமோ? உமது திருப்பாதம் துவக்கித் திருசிரசு வரை காயமில்லாத இடம் ஒன்றுமில்லையே. ஆதலால் உமது வேதனைக்கு இணையான வேதனை காணமுடியாதே. இப்படியிருந்தாலும் தேவரீர் அந்த உபத்திரவத் துன்பங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் உமது சத்துராதிகளுக்காக உம்முடைய திவ்விய பிதாவைப் பார்த்து, என் பிதாவே! இவர்கள் செய்கிறதெல்லாம் அறியாமற் செய்கிறார்கள். இவர்களுடைய குற்றங்களைப் பொறுத்தருளுமென்று வேண்டிக்கொண்டதை நினைத்தருளும் சுவாமி. இப்படிப்பட்ட கிருபா சமுத்திரமான உமது கருணைப் பெருக்கத்தைப்பற்றி நீர் அனுபவித்த நிர்ப்பந்த வேதனைகளைப் பார்த்து உமது கடினமான பாடுகளை அடியேன் நினைவுகூர்ந்து தியானித்ததினால் என் பாவங்களுக்கெல்லாம் பரிபூரணப் பொறுத்தலடையத் தயைசெய்தருளும் சுவாமி.

ஒரு பர., அருள், திரி. ஆமென்.