சர்வேசுரனின் இரக்கத்தின் நவநாள் ஜெபங்கள் - ஏழாம் நாள்.

சங் சகோதரி பவுஸ்தீனாவின் நாள் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்டது.

சர்வேசுரனின் இரக்கத்தை சிறப்பாக மகிமைப்படுத்தி, வணங்கும் ஆன்மாக்களுக்காக.

"இன்று எனது இரக்கத்தைச் சிறப்பாக மகிமைப்படுத்தி வணங்கும் ஆன்மாக்களை அழைத்து வந்து என் இரக்கத்தில் மூழ்கச் செய். இவ்வான்மாக்கள் எனது பாடுகளை எண்ணி, வருந்தி என் ஆன்மாவோடு ஆழ்ந்து ஒன்றிக்கிறார்கள். எனது இரக்கமுள்ள இருதயத்தின் உயிருள்ள சாயல்கள் இவர்கள். இவ்வான்மாக்கள் மறுவாழ்வில் விசேஷ ஒளியோடு பிரகாசிப்பார்கள். இவர்களில் ஒருவரும் நரக நெருப்பில் விழ மாட்டார்கள். இவர்களின் மரண வேளையில் அவர்களை நான் பாதுகாப்பேன்'' என்றார் சேசு.

அன்பையே இருதயமாகக் கொண்ட இரக்க மிகுந்த சேசுவே! உமது இரக்கத்தின் உயர்வைச் சிறப்பாகப் போற்றி வணங்கும் ஆன்மாக்களை உம் இரக்கமிகுந்த இருதய இல்லத்தில் ஏற்றுக் கொள்ளும். சர்வேசுரனின் வல்லமையைக் கொண்டு இவர்கள் வலிமை பெறுகிறார்கள். இவர்கள் துன்பங்கள் இடைஞ்சல்களுக்கு நடுவே கடவுளின் இரக்கத்தில் முன்னேறிச் செல்பவர்கள். இவ்வான்மாக்கள் மனுக்குலம் முழுவதையும் தங்கள் தோள்களில் சேசுவோடு இணைந்து சுமந்து செல்கின்றார்கள். இவர்கள் கடுமையாகத் தீர்வை யிடப்படமாட்டார்கள். இவ்வுலகை விட்டுப் பிரியும்போது உமது இரக்கம் இவர்களை அணைத்துச் செல்லும்.

நித்திய பிதாவே! உமது மிகச் சிறந்த இயல்பாகிய ஆழங்காணமுடியாத இரக்கத்தைப் போற்றி வணங்கும் ஆன்மாக்கள் மீது, உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும். சேசுவின் கருணை நிறைந்த இருதயத்தில் இவர்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் சுவிசேஷத்தின்படி வாழ்பவர்கள். இவர்களின் கரங்கள் இரக்கத்தின் செயல்களால் நிரம்பியவை. மகிழ்ச்சி பொங்கி வழியும் இவர்கள் இருதயம், உன்னதராகிய உமக்கு இரக்கத்தின் கீதத்தை இசைக்கும். சர்வேசுரா! உம்மை வேண்டுகிறேன். இவர்கள் உம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு அளவாக இவர்களுக்கு உமது இரக்கத்தைக் காண்பியும். ஆழங்காண முடியாத உமது இரக்கத்தை வணங்கும் ஆன்மாக்களை, வாழ்விலும் முக்கியமாக கடைசி வேளையிலும், "என் சொந்த மகிமை எனக் கருதிப் பாதுகாப்பேன்'' என்று சேசுவே கூறிய அந்த வாக்குறுதி நிறைவேறுமாக!

ஆமென்.