சங் சகோதரி பவுஸ்தீனாவின் நாள் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்டது.
குழந்தைகள், தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள ஆன்மாக்களுக்காக.
"இன்று சாந்தமும் தாழ்மையுமுள்ள ஆன்மாக்களையும் சிறு குழந்தைகளின் ஆன்மாக்களையும் என்னிடம் அழைத்து வா. என் இரக்கத்தில் மூழ்க வை. இவ்வான்மாக்கள் என் இருதயத்தை மிகவும் ஒத்திருக்கிறார்கள். எனது கசப்பான வேதனையில் எனக்கு சக்தியளித்தார்கள். எனது பீடங்களின் அடியில் விழித்துக் காத்திருக்கும் உலக வானதூதர்களாக இவர்களைக் காண்கிறேன். இவர்கள் மேல் எனது அருளைப் பொழிகிறேன். தாழ்மையான ஆன்மாக்கள் மட்டுமே என் வரப்பிரசாதத்தைப் பெறமுடியும். இவர்கள் மட்டுமே என் நம்பிக்கைக்கு உரியவர்கள்'' என்றார் சேசு.
இரக்கம் நிறை சேசுவே! நான் சாந்தமும் இருதயத் தாழ்ச்சியும் உள்ளவன், என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று நீர்தாமே சொல்லி இருக்கிறீர். சாந்தமும் தாழ்மையுமுள்ள ஆன்மாக்களையும், சிறு குழந்தைகளின் ஆன்மாக்களையும் இரக்கம் மிகுந்த உமது இருதய வீட்டில் ஏற்றுக் கொள்ளும். இவ்வான்மாக்கள் பரலோக பரவசத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் பரம பிதாவின் செல்லக் குழந்தைகள். சர்வேசுரனின் அரியாசனத்தின் முன் இவர்கள் மணம் வீசும் மலர்க் கொத்து ஆவார்கள். இவர்களது நறுமணத்தில் சர்வேசுரன் இன்பம் கொள்கிறார். இவர்களுக்கு இரக்கம் நிறைந்த சேசுவின் இதயத்தில் நிலையான இடமுண்டு. இவர்கள் அன்பு இரக்கம் பற்றிய பாடல்களை இடையறாது பாடுகிறார்கள்.
நித்திய பிதாவே! சாந்தம் உள்ள ஆன்மாக்கள், தாழ்மையுள்ள ஆன்மாக்கள், குழந்தைகள் இவர்கள் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இவர்கள் சேசுவின் இரக்கம் மிகுந்த இருதய வீட்டில் ஒன்று சேர்ந்துள்ளார்கள். இவர்கள் உமது திருக்குமாரனின் சாயலை மிகவும் ஒத்திருக்கிறார்கள். இவ்வான்மாக்களின் நறுமணம் மண்ணுலகிலிருந்து எழுந்து உமது அரியணையை அடைகின்றது. எல்லா நன்மைக்கும் இரக்கத்திற்கும் தந்தையே! இந்த ஆன்மாக்கள் மட்டில் உமக்குள்ள அன்பையும் மகிழ்ச்சியையும் குறித்து நான் வேண்டுகிறேன். உலக முழுவதையும் ஆசீர்வதியும். எல்லா ஆன்மாக் களும் ஒன்றுசேர்ந்து, உமது இரக்கத்தை முடிவில் லாக் காலம் புகழ்ந்தேத்துவார்களாக!
ஆமென்.