சர்வேசுரனின் இரக்கத்தின் நவநாள் ஜெபங்கள் - எட்டாம் நாள்.

சங் சகோதரி பவுஸ்தீனாவின் நாள் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்டது.

உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக.

"இன்று உத்தரிக்கும் ஸ்தலமாகிய சிறைக் கூடத்தில் உள்ள ஆன்மாக்களைக் கூட்டி வந்து என் இரக்கத்தின் ஆழத்தில் அமிழ்த்து. என் இரக்கம் இவர்களைச் சுட்டெரிக்கும் தீப்பிழம்புகளைக் குளிரச் செய்யட்டும். இவ்வான்மாக்கள் அனைவரும் என்னால் அதிகம் நேசிக்கப்படுகிறார்கள். என் நீதிக்கு பரிகாரம் செய்கிறார்கள். இவர்களுக்கு விடுதலை அளிப்பது உன் கையில் இருக்கிறது. எனது திருச்சபையின் பொக்கிஷத்தினின்று எல்லாப் பலன்களையும் எடுத்து இவர்களுக்காக ஒப்புக்கொடு. இவர்கள் அனுபவிக்கும் வேதனைகளை நீ அறிவாயானால், இடைவிடாது அர்ப் பணித்து எனது நீதிக்கு இவர்கள் செலுத்த வேண்டிய கடனைத் தீர்ப்பாய்'' என்றார் சேசு.

இரக்கம் நிறைந்த சேசுவே! நீர் இரக்கத்தையே விரும்புவதாக நீரே மொழிந்தீர். எனவே இரக்க மிகுந்த உமது இருதய இல்லத்தினுள்ளே உத்தரிக் கிற ஆன்மாக்களை அழைத்து வருகிறேன். அவர்கள் உமது அன்பர்கள். ஆயினும் உமது நீதிக்கு உத்தரிக்க வேண்டியவர்கள். உமது இருதயத்திலிருந்து பீறிட்டு வரும் இரத்தமும் நீருமாகிய அருவிகள் இவர்களைச் சுத்திகரித்து அனற்பிழம்பு களை அணைக்கட்டும். இவ்விடத்திலும் உமது இரக்கத்தின் வல்லமை கொண்டாடப்படட்டும்.

நித்திய பிதாவே! உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும். அவர்கள் இரக்கம் நிறைந்த சேசுவின் இருதயத்தில் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளார்கள். உமது திருக்குமாரன் சேசுவின் வேதனை நிறைந்துள்ள பாடுகளைக் குறித்தும், அவரது திரு இருதயத்தின் துயரத்தைக் குறித்தும் உம்மை மன்றாடுகிறோம். உமது நீதியின் தீர்ப்பில் நிற்கும் இவ்வான்மாக்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும். உமது நேச குமாரன் சேசுவின் திருக்காயங்கள் வழியாக இவர்களை நோக்கும். உமது நன்மைத்தனத்திற்கும், இரக்கத்திற்கும் எல்லையேயில்லை என்று நாங்கள் உறுதியாக விசுவசிக்கிறோம்.

ஆமென்.