குடும்பங்களில் சமாதானமும் மகிழ்ச்சியும் நிலவ பரிசுத்த ஆவியாரிடம் செபம்.

இவ்வுலகின் இயக்கமும், இதயமுமான பரிசுத்த ஆவியே! இப்பரந்த பூமியின் மாந்தர்களை உமது அடைக்கலத்தில் ஒப்புக் கொடுக்கிறோம். இறைவன் தோட்டத்து அழகிய கவிதைகளான குடும்பங்கள் அன்பு, பகிர்வு, மன்னிக்கும் மனநிலை, விட்டுக் கொடுக்கும் பண்பு இல்லாத காரணத்தால் குடும்பங்களில் குழப்பங்களும், பகை உணர்வும், பழிவாங்கும் எண்ணமும் நிறைந்து அமைதியற்ற நிலையில் இருப்பதை நீர் அறிவீர். மூவொரு இறைவனின் இல்லிடமான குடும்பங்கள் இறைவனையும் மறந்து, அவரது கட்டளைகளையும் புறக்கணித்து, கருணையையும், மனிதநேயத்தையும் தொலைத்து அசுத்த ஆவியின் உறைவிடமாக மாறுகின்ற நிலையைக் காண்கிறோம். இந்த கொடிய பாவ நிலையை எண்ணி நாங்கள் கலங்கி கண்ணீர் வடிக்கிறோம். எங்கள் மன மாற்றத்தின் வழியாக நீர் எங்களை புதுப்பிறப்படையச் செய்வீர்

உன்னத பரிசுத்த ஆவியே! உமது அன்பின் அக்னியால் பாவ கறைப்பட்ட எங்கள் ஆன்மாக்களை சுத்திகரித்தருளும். நாங்கள் இடைவிடாது எங்கள் குடும்பங்களை இறை நெருக்கத்தில் இணைத்து, செபத்திலும், தவத்திலும் நிலைத்திருந்து உமது பரிசுத்த ஆவியின் கொடைகளை மிகுதியாகப் பெற்று எங்கள் குடும்பங்கள் சமாதானத்திலும், மகிழ்ச்சியிலும் நிலைத்திருக்கச் செய்வோமாக. வாழ்வின் ஊற்றாகிய பரிசுத்த ஆவியே! கிறிஸ்தவ குடும்பங்களை உமது அக்கினியின் ஆவியால் நிரப்பியருளும். உமது பரிசுத்த ஆவியால் நிரப்பப்படும் குடும்பங்கள், அன்பைப் பொழிந்து, அற வழியில் நடந்து கனிவாலும், கருணையாலும் பிற குடும்பங்களுக்கு முன் மாதிரியாக விளங்கச் செய்தருளும். நாங்கள் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி அன்பை மாதிரியாகக் கொண்டு உயர்ந்த வாழ்வை அமைத்துக் கொள்ள எங்களுக்கு வழிகாட்டும்

தீமை எங்கள் குடுப்பங்களை ஆட்சி செய்ய விட்டுவிடாதேயும். மாறாக, நன்மையால் எங்கள் குடும்பங்களை நாளும் வழிநடத்தும். நாங்கள் கூட்டுக் குடும்ப உறவைப் போற்றவும், ஒருவரை ஒருவர் அன்பு செய்து, ஒருவருக்கொருவர் குற்றங்குறைகளை மன்னித்து, ஒருவரின் பலவீனமான தருணத்தில் பலமாகி, மன்னிக்க வேண்டிய செயல்களை மன்னித்து, அனைவர் மனம் கவரும் உமது ஆவியின் கொடைகளால் எங்கள் இல்லத்தை திருகுடும்பங்களாக்கி, உன்னத சாட்சிகளாய் உலகில் வாழ உமது பரிசுத்த ஆவியின் ஆற்றலை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும். சாத்தானின் சதித்திட்டங்களை முறியடித்து, எங்கள் குடும்பங்களில் சமாதானமும், மகிழ்ச்சியும் நிரம்ப உமது பரிசுத்த ஆவியின் ஆலயங்களாக எங்கள் குடும்பங்களை மாற்றியருளும். இறை சமாதானமும், மகிழ்ச்சியும் எங்கள் இல்லங்களில் தங்கச் செய்யும்.

ஆமென்.