பரிசுத்த ஆவியே! என்றும் எம்மை விட்டுப் பிரியாத பாதுகாவலரே நீர் எமக்குத் தந்த அன்பு செல்வங்களுக்காக உமக்கு கோடான கோடி நன்றி செலுத்துகிறோம். எங்கள் குழந்தைகளை உமது அரவணைப்பிலும், பாதுகாப்பிலும் நாங்கள் ஒப்படைக்கிறோம். இவ்வுலக மாயைகளும், தீமைகளும் எங்களை அச்சுறுத்துகின்றன. தெய்வ பயமின்றி வாழும் எங்கள் குழந்தைகளுக்கு தெய்வ பயத்தையும், ஞானத்தையும் அளித்தருளும். எங்களுக்கு வழிகாட்டியும், துணையுமான பரிசுத்த ஆவியே! எங்கள் குழந்தைகளின் வழிப்பயணத்தில் துணையாக வாரும். அவர்களது சொல், செயல், சிந்தனைகளை ஆசீர்வதியும் அவர்களது நாவுகளுக்கு நல் வார்த்தைகளையும், பரந்துபட்ட ஞானப் பார்வையையும் அவர்களுக்கு வழங்கியருளும்.
சாத்தானின் சதியில் விழுந்து விடாமல் இருக்க அவர்களை நன்மையின் பாதையில் வழி நடத்தும். அவர்கள் பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும் பெருமையைத் தேடித் தரக்கூடியவர்களாகவும், சமூகப் பார்வை உடையவர்களாகவும், கல்வி அறிவிலும், பொது அறிவிலும் சிறந்து விளங்கி, இந்த உலகின் கலங்கரைச் சுடர்களாக விளங்க உமது அக்னியின் சுடரால் அவர்களை அருட்பொழிவு செய்தருளும். போர்களினாலும், இயற்கை இடர்களினாலும் அவர்களுக்கு எத்துன்பமும் நேராமல், எந்நேரமும் உமது கருணையின் சிறகு கொண்டு அணைத்துப் பாதுகாத்தருளும். அவர்கள் பாதங்கள் வழிதவறிச் செல்லாமல் இறைவழியில் செல்ல ஒளியின் தூதுவர்களை அவர்களுக்குத் துணையாக அனுப்பும்.
நன்மையின் பரிசுத்த ஆவியே! எந்நாளும் எந்நேரமும் எங்கள் குழந்தைகளை விட்டுப் பிரியாமல் அவர்களை நீதியின் பாதையில் வழிநடத்தும். உயிரின் உயிரான பரிசுத்த ஆவியே! எங்கள் குழந்தைகளுக்கு நீடிய ஆயுளும், நிலைத்த நன்மைகளையும் மழையென பொழிந்து ஆசீர்வதியும். எங்கள் குழந்தைகள் உம்மை மறவாது போற்றிப் புகழும் வரம் அருளும். உம் உறவில் வாழ்வதை நாடும் நல்மனதை அவர்களுக்கு தந்தருளும். என்றும் வாழும் பரிசுத்த ஆவியே எங்கள் குழந்தைகளை என்றும் உமது சாட்சிகளாக மாற்றியருளும்.
ஆமென்