துறவறத்தாரின் ஆன்ம நலன்களுக்காக பரிசுத்த ஆவியாரிடம் செபம்,

நன்மையின் வழியில் உலகை வழி நடத்தும் பரிசுத்த ஆவியே உமது மேலான ஆற்றலால் உலகை இயங்க வைப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். படைப்பிற்கெல்லாம் மேலான படைப்பாக மனிதகுலத்தை படைத்து காத்து வழிநடத்தும் வல்லமைக்காகவும் நன்றி செலுத்துகிறோம். அழைக்கப்பட்ட பலரில் சிலராக எங்களை தேர்ந்தெடுத்த மேலான அன்புக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆவியின் கனிகளையும், கொடைகளையும் எமக்கு தந்ததற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம்

பரிசுத்த நல் துறவற ஆடையை எமக்குத் தந்து, பரிசுத்த நல் துறவற வாழ்வை ஏற்கும் அருள் வரத்தை தந்ததற்காகவும் உமக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். திருமுழுக்கின் வழியாக எங்களை அருட்பொழிவு செய்த நீர், துறவற வார்த்தைப்பாட்டின் வழியாக மூவொரு இறைவனின் உன்னத ஆசீரை எமக்குப் பொழிந்தீர். ஆடையின் மாசற்ற தன்மை போல், எங்கள் ஆன்மாக்களையும் கறைபடாமல் பாதுகாத்தருள்வீராக. உலக மாயைகளை எங்களுக்குக் காட்டி, எம்மை மாயைகளுக்கு அடிமையாக்கத் துடிக்கும் சாத்தானின் தந்திர வலைகளில் சிக்கி சிதைந்து விடாமல் எங்களை பாதுகாத்தருளும்

எங்கள் ஆன்மா சோதனைகளை வெல்ல முடியாதபடி பலவீனம் அடையும் போதெல்லாம்; எங்கள் ஆன்மாவை பலப்படுத்தி எங்களை தூய்மையின் சாட்சிகளாக ஒளிரச் செய்வீராக. எனவே நம்பிக்கையின் பரிசுத்த ஆவியே, ஒருபோதும் உம்மை விட்டுப் பிரியாமல், உமது பாதுகாவலில் இருந்தால் எனக்குப் பயமில்லை . எனது ஆன்மா வலிமையும், தன்னம்பிக்கையும் அடையும். பரிசுத்த நல் அடையாளச் சின்னங்களை அணிந்து, திருச்சபையின் சாட்சிய வாழ்வுக்கு உம்மால் அழைக்கப்பட்ட நான்; ஒருபோதும் உமக்கு துரோகம் செய்யாமல், எனது ஆன்ம தூய்மையால் திருச்சபையை அணி செய்யும் மகுடமாக விளங்கும் ஆற்றலை எமக்கு அருள்வீராக

பாவத்தின் நிழல் என் மீது படும் போதெல்லாம், என் ஆன்மா இயேசுவின் சிலுவைப் பாடுகளைத் தியானித்து, பாவம் என்னைப் படுகுழியில் தள்ளி விடாமல் இருக்க எனக்கு பாதுகாப்பு அரணாய் இருப்பீராக. எங்கள் அரணும், கோட்டையும், கேடயமுமான பரிசுத்த ஆவியே! அன்று நீர் திருத்தூதர்கள் மேல் இறங்கியதும் அவர்கள் இறைவாக்கு உரைக்கவும், பல மொழி பேசவும் ஆற்றலைப் பெற்றனர். அதுபோன்று எங்கள் மீதும் அக்னி நாவு வடிவில் இறங்குவீராக. எங்கள் உள்ளங்களைத் திடப்படுத்தி தூய்மைப்படுத்துவாராக! நாங்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் உண்மை சாட்சிகளாய் வாழ்ந்து, உமது ஆவியின் ஆற்றலால் துறவறத்தின் மேன்மையை உலகிற்கு உணர்த்தி, உன்னத வாழ்வுக்கு மக்களை வழிநடத்திச் செல்லும் அருளையும், ஆற்றலையும் எமக்கு வழங்குவீராக.

ஆமென்.