அர்ச்சியசிஷ்ட வியாகுல மாதாவின் பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும். 2.
கிறீஸ்துவே கிருபையாயிரும். 2.
சுவாமி கிருபையாயிரும். 2.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

வியாகுல வாளால் ஊடுருவப்பட்ட அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவம் நிறைந்த இப்பரதேசத்தில் சொல்லிலடங்காத வியாகுலம் அனுபவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்முடைய திவ்விய குழந்தையான சேசுநாதர் மாட்டுக் கொட்டிலில் காற்று குளிர் வறுமை முதலியவைகளால் பட்ட உபத்திரவத்தைக் கொண்டு அளவற்ற துயரமடைந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விருத்தசேதனத்தில் திவ்விய குழந்தை சிந்தின இரத்தத்தையும், அனுபவித்த நோக்காடுகளையும் கண்டு அழுது துக்கித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுநாதருக்கும், உமக்கும் வரவிருந்த நிர்ப்பந்தங்களை அர்ச். சிமியோன் வெளிப்படுத்தக் கேட்டு, வியாகுல வாளால் ஊடுருவப்பட்டமாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவாலயத்தில் உம்முடைய திவ்விய குமாரனை தேவ நீதிக்கு உத்தரிப்புப் பலியாக மிகுந்த மனத் துயரோடு ஒப்புக் கொடுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஏரோது என்கிற இராஜா உம்முடைய நேச பாலகனைக் கொல்லத் தேடுகிறதைக் கேட்டு மனோவாக்குக் கெட்டாத சஞ்சலத்திற்கு உள்ளான மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவபிதாவின் கட்டளைப்படியே திவ்விய குழந்தையை எடுத்துக்கொண்டு எகிப்தென்கிற அந்நிய தேசத்திற்குப் புறப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அந்தப் புறவின இராச்சியத்தில் அநேக வருஷம் திவ்விய பாலகனோடு பரதேசியாய் கஷ்டத்தை அனுபவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பன்னிரண்டு வயதில் உமது ஆனந்தமாகிய திவ்விய சேசு உம்மைப் பிரிந்து காணாமல் போனதினால் மூன்று நாள் துக்க சாகரத்தில் அமிழ்ந்தின மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுநாதர் வேதத்தைப் போதிக்கச் சுற்றி வருகையில் அநேக முறை பாவிகளான யூதர் அவரை நிந்தித்துத் தூஷித்ததினால் மட்டற்ற வியாகுலமடைந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் பாடுபடப் போவதற்கு உம்மை உத்தரவு கேட்டுக் கொள்ளுகையில், ஆத்துமம் பிரிந்தாற் போல் துக்க வேதனைக்கு உட்பட்டமாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுநாதர் பூங்காவனத்தில் துக்க மிகுதியால் இரத்த வேர்வை வேர்த்து மரண அவஸ்தைப்பட்டதைக் கேட்டு மனம் இளகிப் பரிதவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திவ்விய கர்த்தர் ஒரு கள்ளனைப் போலப் பாவிகளால் பிடிபட்டுச் சங்கிலி, கயிறுகளால் கட்டவும், சீடர்களால் கைவிடவும்பட்டதை அறிந்து திரளான கண்ணீர் விட்டழுத மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்முடைய மாசற்ற குமாரன் அன்னாஸ், கைப்பாஸ் என்கிற பிரதான ஆசாரியர் வீட்டில் பொய் சாட்சிகளால் குற்றஞ் சாட்டவும், சாவுக்கு நியமிக்கவும் பட்டதைக் கேட்டுத் தயங்கிக் களைத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திவ்விய நாதர் நீச ஊழியர்களால் திருக்கன்னத்தில் அடிக்கவும், திருமுகத்தில் துப்பவும், இராத்திரி முழுவதும் சகல வித நிந்தை அவமானக் கொடுமையுடன் வாதிக்கவும் பட்டதால் அளவிறந்த துயரப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிலாத்து, மாசற்ற நாதரைப் பரபாஸ் என்கிற கொலைபாதகத் திருடனோடே ஒரே வரிசையாய்க் காண்பிக்க, யூதர்கள் பாதகனை விடுதலையாக்கி, சேசுநாதரைக் கொல்லக் கூவினதால் அகோரதுக்கத்தால் மனம் நொந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுநாதர் கற்றூணில் கட்டுண்டு கொடிய சேவகரால் பட்ட அடியெல்லாம் உமது இருதயத்தில் பட்டாற்போல் வேதனை அனுபவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அடியால் உமது நேச சேசுவின் திருத்தசை தெறிக்க, திரு இரத்தம் வெள்ளமாய் ஓட, திருமேனியெல்லாம் ஏக காயமானதைக் கண்டு இருதயம் பிளந்து விம்மிக் களைத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கர்த்தருடைய திருச்சிரசில் முள்முடி வைத்து அழுத்தவும், மூங்கில் தடியால் அடிக்கவும் எப்பக்கத்திலும் முட்கள் தைத்து இறங்கவும் அவைகளின் வழியாகச் சிந்தின இரத்தத்தால் திருமுகமும், தாடியும் நனையவும் கண்டு வியாகுல முட்களால் இருதயத்தில் குத்தப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்முடைய ஏக நேசரைச் சிலுவையில் அறைய வேண்டும் என்கிற அநியாயத்தீர்வையைக் கேட்டு வியாகுல அம்பினால் ஊடுருவப்பட்டமாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகா அவமானத்தோடு உம்முடைய திவ்விய சுதன் திரளான சனங்கள் சூழப் பாரமான சிலுவையைச் சுமந்து வருகிறதைக் கண்டிரங்கிப் பிரலாபித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஒரு செம்மறியைப் போலக் கொலைக்களத்திற்குக் கூட்டிக் கொண்டு போகப்பட்ட உம்முடைய நேச குமாரனைத் துக்கித்துப் பின் சென்ற மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

துஷ்ட சேவகர் திவ்விய சேசுவின் காயங்களோடு ஒட்டியிருந்த வஸ்திரங்களைத் தோல் உரிப்பது போல் உரிக்கக் கண்டு ஏங்கின மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவரைச் சிலுவையில் அறைகிற சத்தத்தைக் கேட்டு, வியாகுல மிகுதியால் பரிதவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்முடைய நேச குமாரன் இரு கள்ளருக்கு நடுவே உயர்ந்த சிலுவையில் ஸ்தாபிக்கவும், திரளான சனங்களால் காணவும், நிந்தித்துத் தூஷிக்கவும் பட்டதைப் பார்த்து, மனம் உருகி, கண்ணீர் வெள்ளமாய்ச் சொரிந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுநாதர் மூன்று மணி நேரம் சிலுவையில் கொடூர நிர்ப்பந்தங்களுடனே தொங்குகிறதைக் கண்டு வியாகுலத்தால் அவரோடே சிலுவையில் அறையுண்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுநாதர் தமக்குப் பதிலாய்ச் சீடனான அருளப்பரை உமக்கு மகனாகத் தந்து, "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்ற துயர வசனம் கேட்டுப் பரிதவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உமது நேச குமாரன் தலை குனிந்து மரிக்கிறதைக் கண்டு, உமது உயிர் பிரிந்து போகிறதை விட அதிக வேதனைக்கு உட்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உயிர் பிரிந்த திவ்விய சேசுவின் விலாவை ஒரு சேவகன் ஈட்டியால் குத்தித் திறந்ததைக் கண்டு வியாகுல வாளால் ஊடுருவப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சீடர்கள் சிலுவையினின்று இறக்கின சேசுநாதரின் திருச்சரீரத்தை உமது மடியில் வளர்த்தின போது, திருக்காயங்களைத் துயரத்தோடு உற்றுப் பார்த்து, முத்தி செய்து, திரளான கண்ணீரைச் சொரிந்து பிரலாபித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்முடைய நேச சேசுவின் திருச்சரீரம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டபோது துக்கத்தில் அமிழ்ந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவர் அடக்கமான பின்பு தேவரீர் தனிமையில் இருந்ததாலும், அவரது திருப்பாடுகளை இடைவிடாமல் நினைத்ததாலும் அளவற்ற துக்க வியாகுலத்திற்கு உட்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வியாகுல மிகுதியால் சகல வேதசாட்சிகளை விட அகோர வேதனை அனுபவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகல உபத்திரவ வியாகுலத்திலும், மாறாத பொறுமையின் உத்தம் மாதிரிகையான மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

துன்ப துயரத்தில் அடியோர்களுக்கு அடைக்கலமும், ஆறுதலுமாகிய வியாகுல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுக்கிறிஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக, மிகவும் வியாகுலமுள்ள கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்.
கருணைச் சமுத்திரமாகிய திவ்விய சேசுவே, தேவரீர் அடியோர்களுக்காகப் பட்ட கணக்கில்லாத கொடூர கஸ்தி நிர்ப்பந்த வேதனைகளுக்கும் மோட்ச இராச்சியத்தில் சுதந்தரித்துக் கொண்ட அளவில்லாத பேரின்ப மகிமை வல்லபத்திற்கும், உமது நேச திருமாதாவைப் பங்காளியாக்கத் திருவுளமானீரே சுவாமி! தேவரீர் உமது திருப்பாடுகளையும், நேச மாதாவின் வியாகுலத்தையும் பார்த்து, உமது திரு இரத்தப் புண்ணியப் பேறுகளுக்கும் அடியோர்களைப் பங்காளிகளாக்கி, உமது பேரின்ப இராச்சியத்தின் ஆனந்த மகிமைக்கு எங்களைப் பாத்திரவான்களாகச் செய்தருளும்.

ஆமென்.