வியாகுல மாதா சுரூபத்திற்கு முன்பாகச் சொல்லத்தகும் ஜெபம்.

பல கோவில்களிலும், சிற்றாலயங்களிலும் தனது தேவசுதனின் மரித்த சரீரத்தைத் தன் கரங்களில் தாங்கியுள்ள மரியாயைச் சித்தரிக்கும் சுரூபம் இருப்பதை நாம் காண்கிறோம். இவை "பியெட்டா சுரூபங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய சுரூபங்களைச் சந்தித்து, வியாகுல மாதாவின் வல்லமையுள்ள மன்றாட்டின் வழியாக விரும்பிய வரத்தைக் கேட்டு மன்றாடுவதன் மூலம் எண்ணற்ற வரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மிகுந்த தயாளமுள்ள மாதாவே, உமது திருக்குமாரனின் சிதைக்கப்பட்ட திருச்சரீரத்தை உமது கன்னிமைக் கரங்களில் தாங்கிக் கொண்டபோதும், உமது தாய்மையுள்ள இருதயத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டபோதும், மிகுந்த மென்மையும், கனிவும் நிரம்பிய முத்தங்களால் அவரை நீர் நிரப்பியபோதும், எப்பேர்ப்பட்ட கசப்பு உமது திரு இருதயத்தை நிரப்பியது! இந்த வாக்குக் கெட்டாத உமது மனக் கசப்பைப் பார்த்து, என் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தந்தருள உம்மை மன்றாடுகிறேன். மரியாயே, ஈனப் பாவியாகிய அடியேனுக்காக, தேவரீர் இப்போது உம் கரங்களில் தாங்கியுள்ள உம் சேசுவிடம் மன்றாடும். உமது தாய்க்குரிய கரங்களில் உமது திருக்குமாரனுடைய நொறுக்கப்பட்ட திருச்சரீரத்தை எடுத்து, இதே நிலையில் அவரை எனக்காக பரலோகப் பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தருளும். எனக்கு வரப்பிரசாதத்தையும், இரக்கத்தையும், விசேஷமாக...

(நீ பெற விரும்புகிற விசேஷ வரத்தை இங்கு குறிப்பிடவும்)

எனக்குப் பெற்றுத் தரும்படியாக, சேசுவின் துளைக்கப்பட்ட திரு இருதயத்தையும், அவரது திருப்பாடுகளையும், மரணத்தையும், உம்முடைய அளவிட முடியாத சகல வியாகுலங்களையும் அவருக்கு ஒப்புக்கொடுப்பீராக.

ஆமென்.

தேவதாயே, தயை செய்து பாவி என்னிருதயத்தில் சேசு காயம் பதியும்.

மரியாயே, எங்கள் நம்பிக்கையே, எங்கள் பேரில் தயவாயிரும்!