கையில் நன்மை வழங்குதலும் பெறுதலும் தேவ நிந்தையும், தேவத் துரோகமுமாகும்!

தேவ வழிபாடு மற்றும் தேவத்திரவிய அனுமான ஒழுங்கு முறைக்கான திருச்சங்கத்தின் தலைவரான கர்தினால் ராபர்ட் சேரா என்பவர், ஃபெடரிக்கோ போர்ட்டோலி என்பவர் எழுதிய "கையில் நன்மை வழங்குதல்'' என்னும் நூலுக்குத் தாம் எழுதிய முகவுரையில், கையில் நன்மை வழங்கும் முறையால் திவ்ய நன்மையின் மீது தொடுக்கப்படுகிற ஏராளமான தாக்குதல்கள் பற்றி விவரித்து, இந்த வழக்கத்தைப் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இந்த வழக்கம் இந்த அவசங்கைகளுக்கான கதவைத் திறந்து வைப்பதாகவும், அதற்கு மாறாக, முழந்தாளில் நின்று நாவில் நன்மை உட்கொள்ளும் வழக்கத்தில் இந்த அவசங்கைகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.

"நின்று கொண்டும், கையிலும் நன்மை வாங்குவதை (குருக்களாகிய) நாம் ஏன் வற்புறுத்துகிறோம்? கடவுளின் அருளடையாளங்களுக்குப் பணிய மறுக்கும் இந்த மனநிலை எதற்காக? முழந்தாளில் நின்று நாவில் திவ்ய நன்மை வாங்க விரும்பும் விசுவாசிகளுக்கு அதை மறுப்பதன் மூலம், அல்லது அவர்களை மரியாதையின்றி நடத்துவதன் மூலம் தம் அதிகாரத்தை நிலைநிறுத்த எந்தக் குருவும் துணியாதிருப்பாராக. நாம் ஆண்டவரின் குழந்தைகள் என்ற முறையில், தாழ்ச்சியோடும், உருக்க முள்ள நேசத்தோடும் அவருடைய திருப்பந்திக்கு வந்து, நம் ஆண்டவ ராகிய கிறீஸ்துநாதரின் திருச்சரீரத்தை முழங்கால்களில் நின்று நாவில் பெற்றுச் செல்வோமாக'' என்று கர்தினால் ராபர்ட் சேரா என்பவர் கூறுகிறார்.

“முந்திய, பாரம்பரிய வழிபாட்டு ரீதிகளோடு ஒத்திருக்க வேண்டியதாக இருந்தாலும், அவற்றிற்கு நேர் எதிரானவையாக ஆகியிருக்கிற (இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின்) வழிபாட்டுச் சீர்திருத்தத்திற்கான " நடைமுறையாக கையில் நன்மை வாங்கும் வழக்கம் ஆகிவிட்டதாக கர்தினால் அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்.