தேவ நிந்தையான இவ்வழக்கம் தோன்றிய விதமும், அதற்கான தீர்வும்!

கையில் நன்மை வாங்கும் தேவ நிந்தையும், தேவ துரோகமுமான வழக்கம் 1960-களின் தொடக்கத்தில் முதன் முதலாக கத்தோலிக்க வட்டாரங்களில் பரவத் தொடங்கியது. 

முதன் முதலாக ஹாலந்து நாட்டில் இந்த வழக்கம் தொடங்கியது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் முடிந்த சிறிது காலத்தில், ஹாலந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற, ஆங்கிலம் பேசாத நாடுகளில், இந்த வழக்கத்தின் காரணமாக அதிகரித்து வந்த தேவநிந்தையான நிகழ்வுகளின் காரணமாக, பாப்பரசர் ஆறாம் சின்னப்பர், இது விஷயமாக உலக மேற்றிராணிமாரிடம் கருத்துக் கேட்கும் பணியைத் தொடங்கினார். 

இதன் பலனாக, 1969, மே 28 அன்று, தேவ வழிபாட்டுக்கான திருச்சங்கம் Memoriale Domini - மெமோரியாலே தோமினி' என்னும் மடலை வெளியிட்டது. அதன் முடிவு பின்வருமாறு: ''மேற்றிராணிமாரிடமிருந்து பெறப்பட்ட பதில்களின் அடிப்படையில், (நாவில் நன்மை வழங்குவதாகிய) இன்றைய ஒழுங்கு எந்தக் காரணத்திற்காகவும் மாற்றப்படக் கூடாதென்பது மிகப் பெரும்பாலான ஆயர்களின் உறுதியான கருத்தாக இருப்பது தெளிவாகிறது. உண்மையில், இந்த வழக்கம் மாற்றப்பட்டால், அது இந்த மேற்றிராணிமார் மற்றும் பெரும்பான்மையான விசுவாசிகளின் நல்லுணர்வுக்கும், ஞான ரீதியான நல்ல விருப்பங்களுக்கும் எதிரானதாக இருக்கும்.'' 

மேற்றிராணிமாரின் ஆலோசனைகளைக் கேட்ட பிறகு, விசுவாசிகளுக்கு நாவில் நன்மை வழங்கும் நீண்ட கால நடைமுறை மாற்றப்படக் கூடாது என்று பாப்பரசர் தீர்மானித்தார். அதன்பின், இந்தத் திருச்சட்டத்தை ஆர்வத்தோடு கடைப்பிடிக்கும்படி அப்போஸ்தலிக்க ஸ்தானம் மேற்றிராணிமாரையும், குருக்களையும், விசுவாசிகளையும் பலமாக வற்புறுத்தியது.