பரிகாரப் பக்தியின் சாரம்

பரிகாரம் என்பது இழந்த ஒன்றுக்கு நஷ்ட ஈடு செய்வதாகும். பக்தி என்பது பற்று அல்லது அன்பு ஆகும். நிறைய பக்தி முயற்சிகள் இருக்கின்றன. அவைகளெல்லாம் ஒரு கருத்து நிறைவேற அல்லது உதவி பெறுவதற்காக மன்றாட்டுடன் செய்யப்படுகின்றன.

ஆனால் பரிகாரப் பக்தி என்பது பெற்றுக்கொள்வதில் அல்ல, கொடுப்பதில்தான் அடங்கியிருக்கிறது. யாருக்கு கொடுப்பதில்? கடவுளுக்கு கொடுப்பதில்!! கடவுளுக்கு என்ன குறை? உண்மைதான், கடவுள் இயல்பிலேயே நிறைவுடையவராய் இருக்கிறார். கடவுள் அன்பாயிருக்கிறார். அந்த அன்பிலே மனிதனை சிருஷ்ட்டித்தார். மனிதனின் அன்பை எதிர்பார்க்கிறார்.

ஆனால் மனிதனோ கடவுளுக்கெதிராக பாவம் செய்தான். இதனால் கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையே உள்ள அன்பில் விரிசல் ஏற்பட்டது. மனிதனுக்காக எல்லாவற்றையும் கொடுத்த கடவுளுக்கு மனிதன் காட்டவேண்டிய பிரதி அன்பு தடைபட்டுப்போனது. இதனால் தமரித்துவ ஆசனத்தைச் சுற்றி ஏமாற்றம் சூழ்ந்துவிட்டது.

கடவுளுக்கு ஏற்பட்ட இந்த இழப்பை நீக்கி மனிதனை கடவுளுடன் மறு உறுவாக்க வேண்டும். அதாவது பாவத்திற்கு பரிகாரம் செய்யப்பட வேண்டும். இதைச் செய்யவே இயேசு நாதர் சுவாமி உலகிற்கு வந்தார். தம் திருமாதாவின் உதரத்தில் கருவுற்றது முதல் சிலுவையில் தன் கடைசி மூச்சு வரை தன்னையே பாவப்பரிகாரப் பலியாக்க கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தார். பாவத்தினால் அடைபட்டிருந்த மோட்ச வாசலைத் திறந்து வைத்தார்.

ஆனால் மனிதன் பாவம் செய்வதை நிறுத்தவில்லை. இப்போது உலகில் நடக்கும் பாவத்தைப் பற்றி யாருக்கும் சொல்லித்தெறிய அவசியமில்லை. இத்தகைய பாவங்களால் மனிதன் கடவுளைப் பகைக்கிறான், நிந்திக்கிறான், கடவுளுக்குத் துரோகம் செய்கிறான். இவற்றிற்கு பரிகாரம் செய்து கடவுளை ஆற்றுப்படுத்துதலே பரிகாரப்பக்தி. பாத்திமாவிலே மாதா கொடுத்த காட்சிகளின் உட்பொருளும் இதுதான். இதுதான் மற்ற பக்திக்கும், பரிகார பக்திக்கும் உள்ள தனித்தன்மை. பரிகார பக்தி தன்னை முழுவதும் கடவுளுக்கு கொடுக்கிறது. அற்ப சுய நலமும் அற்றது. முற்றிலும் கடவுளையே சார்ந்தது.

பரிகார பக்தி ஜெபங்களைச் சொல்வதிலும், ஜெபமாலை ஜெபிப்பதிலும், பிரசங்கம் கேட்பதிலும், பிரசங்கம், பவனிகள் நடத்துவதில் கூட அடங்கியிருக்கவில்லை. அது நேசிப்பதிலும், சேசு மரிய இருதயங்களுடஇரக்கமான அன்புடன் அந்நியோன்யத்தில் நெருக்கமாக இனைந்திருப்பதில் அடங்கியிருக்கிறது.

எடுத்துக்காட்டாக மெக்சிகோ அருகிலுள்ள ஒரு குன்றில் யூவான் தீகோ என்ற 55 வயது மேற்கிந்திய புதுக்கிறிஸ்தவனுக்கு அவருடன் அந்நியோன்மயாக உரையாடினார்கள்.

மாதா : “ கேள் என் மகனே, நான் அருமையாய் நேசிக்கிற என் மகன்களிளெல்லாம் மிகச் சின்ன மகனே !....உன் இருதயம் இனி கலங்கக வேண்டாம். இங்கே உன் அருகில் இருப்பது யார்? உன் தாயல்லவா ? நீ என் அன்பான நிழலடியின் பாதுகாப்பிற்குள் இல்லையா? நீ என் நெஞ்சுற்குள் பத்திரமாக நீ இருக்கிறாயல்லவா ? உனக்கு என்ன தேவையுள்ளது ? “ இப்படிக் கனிந்த மொழிகள்.

யூவான் : என் மாதாவே ! என் எஜமாட்டியே என் பிள்ளாய், என் மகள்களுக்குள் மிகச்சின்ன மகளே ! நான் உன்னை வருத்தப்படுத்திகிறேனா? நீ நன்றாக இருக்கிறாயா அம்மா ? மகிழ்ச்சியாய் இருக்கிறாயா அம்மா? நீ நன்கு உறங்கினாயா ? என் சின்ன மகளே ! இன்று காலை நலமே இருக்கிறாயா ? என் மாதாவே, இப்படிப்பட்ட அந்நியோன்ய அன்பே பரிகாரப்பக்தி ஆகும்.

ஒரு தந்தைக்கும் தாய்க்கும் மகிழ்ச்சியாயிருப்பது வீடா ? வீட்டிலுள்ள பொருட்களா ? அல்லது நிலபுலங்களா? அல்ல அவர்கள் குழந்தைகளே, அவர்களுக்கு மகிழ்ச்சியாகும். அவர்களே வீட்டில் செல்வமாகும். அதைப்போல் நேசிப்பதில் யாரையும் முந்த விடாத சேசுவுக்கும், மாதாவுக்கும் நாம்தான் மகிழ்ச்சியாயிருக்கிறோம். அவர்கள் நமக்காக பட்டு அனுபவித்த பாடுகளே அதற்கு அத்தாட்சி. எனவே அவர்கள் மீது கனிந்த அன்பு கொள்வது நியாயமல்லவா ? 

கனிந்த அன்போடு அவர்களை நாம் நேசிப்போமென்றால் நாம் நம்மைப் பற்றிய எல்லாக் கவலைகளையும் மறந்து விடுவோம்.

அவர்களிடம் நாம் அனைத்தையும் கொடுத்துவிடுவோம். அவர்களுக்கு என்ன தேவையாயிருக்கிறதோ அதை நிறைவு செய்யப்புகுவோம். சேசு ஒரு அர்ச்சிஷ்ட்டவருக்கு இப்படிக் கூறியுள்ளார் : “ என்னை நினை, உன்னை நினைப்பேன், “ இதற்கு அர்த்தம் என்னவென்றால் சேசுவை நாம் கவனித்துக்கொண்டால் அவர் நம்மை கவனித்துக்கொள்வார். நாம் அவருடைய தேவைகளை நிறைவு செய்தால் அவர் நம்முடைய தேவைகளை நிறைவு செய்வார்.

பரிகாரம் செய்து கடவுளுக்கும் அவரின் திருத்தாய்க்கும் ஆறுதளிக்க விரும்புகிற நாம், நம்மைப் பற்றிய எல்லாக் கவலைகளையும் மறக்க வேண்டும். அதை அவர்களிடமே கொடுக்க வேண்டும். உலக பாவங்களால் நொந்து போயிருக்கிற அவர்களுக்கு ஆறுதலளித்து அவர்களின் வேதனையை போக்க முன் வரவேண்டும். அதற்கு அவர்கள் மீது கனிந்த அன்பு கொள்ள வேண்டும்.

இயேசுவுக்கே புகழ் !! இயேசுவுக்கே நன்றி !! மரியே வாழ்க !!