புனித பாசி மரிய மதலேனாவின் சரிதையிலிருந்து... புனிதையின் ஞானஸ்தானமும், புது நன்மையும்!

ஞானஸ்தானம் : பக்தியும், சமாதானமும் நிலவிய இந்த தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் இரண்டாவது குழந்தைதான் நமது புனிதை. இவள் 1566-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பிறந்தாள். மறு நாள், அர்ச். அருளப்பர் தேவாலயத்தில் கேத்ரின் என்ற பெயருடன் ஞானஸ்தானம் பெற்றாள் ( விழா எடுக்க வேண்டும், விழா பெரிதாக இருக்க வேண்டும் என்ற வீண் ஆடம்பரத்திற்காக ஞானஸ்தானம் எவ்வளவு நாட்கள் தள்ளிப்போடப்படுகிறது)

புது நன்மை : தனக்கு புது நன்மை கொடுப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தனது தாயிடம் கேத்ரின் கோரினாள். அது அர்ச். பத்தாம் பத்தினாதருக்கு முந்தைய காலமாதலாள் சிறு வயதில் குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கும் வழக்கம் அக்காலத்தில் இல்லை. ஆயினும் அவள் தாயின் வேண்டுகோளின்படி 10 வயதில் அவளுக்கு புது நன்மை கொடுக்க பாசி குடும்பத்தினரின் பாவசங்கீர்த்தண குருவும், சேசு சபையின் மாநில தலைவருமான தந்தை ரோசி இணங்கினார். புது நன்மை கொடுப்பதற்கான நாள், ஆண்டவர் மனுவுருவெடுத்த நாளான மார்ச் மாதம் 25-ம் தேதி என்று முடிவு செய்யப்பட்டது. சேசு சபையின் பொறுப்பிலிருந்த சின்ன அருளப்பர் ஆலயத்தில் அவளுக்கு புது நன்மை வழங்கப்பட்டது.

அந்நாளில் அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அன்று முதல் அவளுக்கு ஒரே ஒரு ஆசை மட்டும்தான் இருந்தது. அது சேசுவை நற்கருணை வடிவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே. ஆனால் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே நன்மை வாங்க அவளுக்கு அனுமதி தரப்பட்டது. வாரத்தின் முதல் பகுதியை நன்மை வாங்கியதற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தவும், இரண்டாம் பகுதியை நன்மை வாங்க தயாரிக்கவும் கேத்தரின் செலவிட்டாள். இந்த நற்கருணை அன்பருக்கு ஏதேனும் பரிசு தர வேண்டுமல்லவா? என்ன பரிசு தரலாம் என்று கேத்தரின் சிந்தித்தாள். ஜெபம் செய்தாள். முடிவாக பெரிய வியாழன் அன்று ( 19.4.1576) அன்புப் பெருக்குடன்  நற்கருணை வாங்கினாள். வாங்கியபின்,

“ ஆண்டவரே ! என் கன்னிமையை நிரந்தரமாக உமக்கு காணிக்கையாக்குகிறேன். உம்மைவிட  யாரையும் நான் அதிகமாக நேசிக்கமாட்டேன். ஒரு நாளும் என்னை யாரும் தொட அனுமதிக்க மாட்டேன் “ என்று கூறி தனது கன்னிமையை ஆண்டவருக்கு அர்ப்பணித்தாள்.

நமதாண்டவரும் அவள் தந்த பரிசு குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். உடனே ஆண்டவர் அவளது விரலில் ஒரு தங்க மோதிரத்தை அணிவித்தார். அப்போது புனிதை இதை அறியவில்லை. அவள் கன்னிகையான பின்பு சேசு அந்த மோதிரத்தைக் காட்டி, “ இந்த மோதிரம் நீ முன்பு கொடுத்த வார்த்தைப்பாட்டின் அடையாளம் “ என்றார்.

நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி.

புனிதை நற்கருணை ஆண்டவரைப் பெறவும் நன்றி சொல்லவும் அந்த வாரத்தை இரண்டாகப் பிரித்து பாதியை நன்றி சொல்லவும், பாதியை அவரைப் பெற தன்னை தயாரிக்கவும் செய்தாள்.. நாம் அவரைப் பெற ஒரு நாளாவது நம்மை தயாரிக்கிறோமா? அவரை வாங்கியபின் ஒரு பத்து நிமிடவாவது அவரோடு பேசுகிறோமா?

இயேசுவுக்கே புகழ் மரியாயே வாழ்க !