பரிசுத்த திருக்குடும்பம்!

அர்ச். சூசையப்பரின் பரிசுத்ததனத்தை விசுவாசிகள் கண்டுகொள்ளும்போது வெற்றியின் முழக்கம் கேட்கப்படும்.
- அர்ச். இஸோலானிஸ் இசிதோர்.

திருக்குடும்பத் திருநாள். இதைக் கிறீஸ்தவக் குடும்பங்களின் திருநாள் என்று சொல்ல வேண்டும். தேவசுதன் இவ்வுலகில் நடத்திய தம் வாழ்வின் மிகப்பெரும் பாகமாகிய 30 ஆண்டுகளை ஒரு சாதாரண நாட்டுப்புறத்தச்சரின் எளிய தொழிற்சாலையில் கழித்த பரம இரகசியம், தங்கள் வாழ்நாளெல்லாம் இல்லறத்தை நடத்த வேண்டியவர்களாகிய பெரும்பாலான மக்களுக்கு ஓர் உயரிய மேல் வரிச்சட்டமாய் (முன்மாதிரிகையாக இருக்க வேண்டுமென சர்வேசுரன் திருவுளங் கொண்டார்.

சிறந்த புண்ணியங்களைப் பயிலக் கற்றுத் தரும் பள்ளி கிறீஸ்தவக்குடும்பமே. அக்குடும்பத்தில் இயற்கையாகவே ஏற்படும் அன்பு; ஒருவருக்கொருவர் மீது தானாகவே எழும் பற்றுதல், ஆதரவு முதலிய நல்ல உணர்ச்சிகள், குடும்பத்திற்கு நேரக் கூடிய ஏழ்மை, இன்ப துன்பம், இவ்வின்ப துன்பங்களால் உண்டாகும் ஒற்றுமை, இவையனைத்தும் ஆத்துமங்கள் புண்ணிய ஜீவியத்தில் வளர்ச்சி பெற்று ஓங்க ஏற்ற வழிகளாய் இருக்கின்றன.

இப்படிப்பட்ட கத்தோலிக்கக் குடும்பத்தையே மனித இரட்சணியத்திற்கு ஒரு பேருதவியாகக் கடவுள் ஏற்படுத்தியிருக்கிறாரெனச் சொல்ல வேண்டும். ஆகவே, கிறீஸ்தவக்குடும்பம் சீர்குலைந்தால், கிறிஸ்தவ பரிசுத்த வேதமே இல்லாமல் போகும் என்பது உறுதி.

குடும்பத்தில் அதிகாரம் வகிக்கும் தாய் தந்தையரிடம் மரியாதை, கீழ்ப்படிதல், நேசம், பரிசுத்ததனம் ஆகிய புண்ணியங்களே ஞான ஜீவியத்தின் அடிப்படை என்ற உண்மை திருக்குடும்பத்தில் தெளிவாக விளங்குகிறது. தேவமாதா சேசுவுக்குக் கீழ்ப்பட்டவர்கள்; எனினும் சேசு அவர்களுக்குக் கீழ்ப்படிகிறார்.

சூசையப்பர் அவர்கள் இரு வருக்கும் தாழ்ந்தவரே. ஆனால் அவருக்கு மற்ற இருவரும் கீழ்ப்படிந்து தேவ சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள். கிறீஸ்துவையும் அவரது திருச் சபையையும் அழிக்கத் தேடும் விரோதிகள் முதலில் கிறீஸ் தவக்குடும்பத்தையும் அதில் உள்ள அதிகாரம், கீழ்ப் படிதல், பரிசுத்ததனம் இவற் றையே சீர்குலைக்க முயல் கிறார்கள். தற்கால நாகரீகம் இவ்வழியையே கையாண்டு வருகிறது. உலகம் அடைந்துள்ள சீர்கேடு இதன் விளைவுதான் என்பதில் சந்தேகமில்லை.

எனவே திருச்சபையின் உயிர்நாடி போல் உள்ள கிறிஸ்தவக் குடும்பங்களின் நோக்கங் களைக் காப்பாற்றிச் செழிப்பிக்க இத்திருநாள் மிக உதவியாயிருக்க வேண்டும். கூடி ஜெபமாலை ஜெபிக்கும் குடும்பம் வீழ்ந்து போகாது.