மூன்று அருள்நிறை மந்திர பக்தி முயற்சி!

மகா பரிசுத்த கன்னிமரியாயின் மீது பக்தி கொண்டிருப்பது மீட்படைவதற்கும், முன் குறிக்கப்பட்டிருப்பதற்குமான மிகப் பெரிய அடையாளம் என்பது அர்ச்சியசிஷ்டவர்களின் வாக்கு. திருச்சபையின் வேதபாரகர்களும் அர்ச். அல்போன்ஸ் மரிய லிகோரியாருடன் சேர்ந்து, ''மாதா மீது பக்தியுள்ள அவர்களது ஊழியன் அழிந்துபோக மாட்டான்'' என்று ஒருபட கூறியுள்ளார்கள்.

'மரியாயின் மைந்தன் அவலமாய் சாகான்'' என்பது கத்தோலிக்க மக்களின் ஒரு பெரிய நம்பிக்கை. அதே சமயம் மாமரியின் பக்தியில் மரணம் வரை நிலைத்திருக்கவும் வேண்டும் என்பதும் அவசியமே! இதற்கு உதவியாக இருப்பது "3 அருள்நிறை மந்திர பக்தி என்ற உந்த சிநேக முயற்சியாகும்.

இந்த பக்தி முயற்சி 13-ம் நூற்றாண்டில் அர்ச். மெக்டில்டாம்மாளுக்கு தேவதாயால் கொடுக்கப்பட்டது. தமது மரண வேளையில் தேவதாய் உதவ வேண்டும் என்று மன்றாடிக் கொண்டிருந்த அவளுக்குத் தேவதாய் காணப்பட்டு: ''நீ ஒவ்வொரு நாளும் சிறப்பான முறையில் மூன்று அருள்நிறை மந்திரத்தைச் சொல்லி வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

முதல் அருள்நிறை மந்திரம் - பிதாவாகிய சர்வேசுரன் எனக்கு வழங்கியுள்ள அளவில்லாத வல்லமைக்கு மகிமையாகச் சொல்ல வேண்டும். பரலோகத்திலும், பூலோகத்திலும் கடவுளுக்கு அடுத்தபடியாக, சகல சிருஷ்டிகளுக்கும் மேலான வல்லமையை கொண்டிருக்கும்படியாக எனது ஆன்மாவை பிதாவாகிய சர்வேசுரன் உயர்த்தியதற்கு மகிமையாகச் சொல்ல வேண்டும்.

இரண்டாவது அருள்நிறை மந்திரம் - சுதனாகிய சர்வேசுரன் புத்திக்கெட்டாத அவரது ஞானத்தை எனக்கு அளித்துள்ள மகிமைக்காகச் சொல்ல வேண்டும். உன் மரண வேளையில் உன் ஆன்மாவை இத்தகைய ஞானத்தால் நிரப்புவேன். அதனால் அறியாமை மற்றும் தப்பறையின் இருள் நீங்கும்.

மூன்றாவது அருள் நிறை மந்திரம் - திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவர் எனது ஆன்மாவைத் தம் இனிமையான தேவசிநேகத்தாலும் இரக்கத்தாலும் நிரப்பிய மகிமைக்காகச் சொல்லப்பட வேண்டும். உனது கடைசி மரண நேரத்தில், சாவின் கசப்பான பாத்திரத்தை, மகிழ்ச்சி மற்றும், தெய்வீக இனிமையின் பாத்திரமாக மாற்றுவேன்'' என்று விளக்கிக் கூறினார்கள்.

மேலும் ஒரு சமயம் தேவதாய் அர்ச். பெரிய ஜெர்மருத்தம்மாளுக்கும் இது பற்றி : "எனது இந்த 3 அருள்நிறை மந்திர பக்தி முயற்சியை பிரமாணிக்கத்துடன் ஜெபிக்கும் எந்த ஆன்மாவுக்கும், அவர்களின் இறுதி வேளையில் மோட்ச ஆறுதலையும், தேறுதலையும் அடையும்படியாக நான் அசாதாரண முறையில் மகிமையலங்காரத்துடன் காணப்படுவேன்'' என்று வாக்களித்தார்கள்.

அர்ச். போர்ட் மெளரீஸ் லியோனார்டு என்பவர் ஆன்மாக்கள் சாவான பாவங்களைக் கட்டிக் கொள்ளாமல் இருக்கும் வரப்பிரசாதத்தைப் பெற காலையிலும், மாலையிலும் மாமரியின் அமல உற்பவ மகிமைக்குத் தோத்திரமாக இந்த 3 அருள் நிறை மந்திர பக்தியைக் கைக்கொள்ளும்படி போதித்து வந்தார்.

இந்த அர்ச்சியசிஷ்டவர், தம்மிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய வருபவர்களுக்கு பாவ பொறுத்தல் அபராதமாக இந்த 3 அருள் நிறை மந்திர பக்தியைச் செய்ய உத்தரவிட்டு வந்தார். கற்புக்கு எதிரான பாவ சோதனைகளால் போராடி வரும் ஆன்மாக்களுக்கு இப்பக்தி முயற்சியை இவர் வலியுறுத்தி வந்தார்.

இந்த பக்தி முயற்சிக்கு அர்ச். 10-ம் பத்திநாதர் பாப்பரசர் தமது அப்போஸ்தலிக்க ஆசீர்வாதத்தை வழங்கினார்., 15-ம் ஆசீர்வாதப்பர் இதனை உயர் பக்தி சபை என்ற நிலைக்கு உயர்த்தினார்.

(ஆதாரம் : Vcatholic.com by ROB COLLIN.)

மரியாயே வாழ்க!