நம் திவ்ய அன்னை பற்றிய தந்தை பியோவின் போதனைகள் 2 :

இன்னும் சில அருமையான ஒப்புமைகளையும் நாம் பார்ப்போம். 2 அரசர் 6: 9 –ம் வசனம், “ தாவீது அந்நாளிலே ஆண்டவரைப் பற்றி அச்சம் கொண்டு, “ ஆண்டவர் பேழை என்னிடம் வருவதெப்படி “ என்றார் என்று கூறுகின்றது. புதிய ஏற்பாட்டில் எலிசபெத், “ என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர எனக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி?” என்று கேட்கிறாள்.

2 அரசர் ஆகமத்தில், 6-ம் அதிகாரத்தில், உடன்படிக்கைப் பேழை கேத்தையனான ஓபேத் ஏதோமின் வீட்டில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தது. அது அங்கே இருந்த மூன்று மாதங்களில் ஆண்டவர் ஓபேத் ஏதோமையும், அவருடைய வீட்டாரையும் ஆசீர்வதித்தார் என்று பார்க்கிறோம் (6:11). அதே போல லூக்காஸ் முதல் அதிகாரத்தில் ( புதிய உடன்படிக்கைப் பேழையான) மாமரி எலிசபெத் வீட்டில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார்கள் என்று நாம் வாசிக்கிறோம் (1:56).

திருவெளிப்பாட்டிலும் திவ்ய கன்னிகை புதிய உடன்படிக்கைப் பேழையாக காட்டப்படுவதை நாம் காண்கிறோம் (திருவெளி 11:19) அதன்பின் 12:1- ம் வசனத்தில் “ விண்ணகத்தில் அரியதோர் அறிகுறி காணப்பட்டது. பெண் ஒருவர் காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள். தலையின் மீது பன்னிரு வீண்மீன்களை முடியாக சூடியிருந்தாள்” என்று வாசிக்கிறோம்.

இந்த இடத்தில் வரலாறு உண்மை ஒன்றை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். பரிசுத்த வேதாகமம் எழுதப்பட்ட போது அது அதிகாரங்களையும் வசனங்களையும் பிரிக்கவில்லை. 12-ம் நூற்றாண்டில்தான் முதன் முறையாக வேதாகமம் அதிகாரங்களாகவும், வசனங்களாகவும் பிரிக்கப்பட்டது. ஆகவே திருவெளிப்பாடு ஆசிரியர், அப்போஸ்தலரான அர்ச். அருளப்பர் ஒரே தொடர்ச்சியாகத்தான் அதை எழுதினார். இவ்வாறு 12- அதிகாரத்தில் தொடக்க வார்த்தைகள் முன்பு 11-ம் அதிகாரத்தின் தொடர்ச்சியாகத்தான் இருந்தன. அதாவது,

“ கடவுளின் உடன்படிக்கைப் பேழை அவரது தேவாலயத்தில் காணப்பட்டது “ என்ற 11-ம் அதிகாரத்தின் கடைசி வாக்கியத்தைத் தொடர்ந்து சூரியனை ஆடையாக அணிந்தவர்களும் தன் உதிரத்தில் தேவசுதனைத் தாங்கியிருந்தவர்களுமான பெண் பற்றிய வாக்கியம் வந்து விடுகிறது. இவ்வாறு இந்தப்பெண்தான் புதிய உடன்படிக்கைப் பெட்டகமாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

பழைய ஏற்பாட்டின் அடையாளங்களும், தீர்க்க தரிசனங்களும் புதிய ஏற்பாட்டில் தங்கள் நிறைவேற்றத்தைப் பெறுகின்றன என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இவ்வாறு செங்கடலைக் கடந்து சென்ற கடவுளின் தெறிந்து கொள்ளப்பட்ட மக்கள் ஞானஸ்நானத்தின் வழியாக நித்திய இரட்சண்யத்திற்குள் கடந்து வரும் கிறிஸ்தவர்களுக்கு முன்னடையாளமாக இருக்கிறார்கள். பாஸ்கா செம்மறிக்குட்டி, சிலுவையில் மரித்த நமதாண்டவரின் முன்னடையாளமாக இருக்கிறது. பாலைவனத்தில் பொழியப்பட்ட மன்னா, திவ்ய நற்கருணையைக் குறிக்கிறது. இவ்வாறே பழைய உடன்படிக்கைப் பேழையும் மாமரியின் முன்னடையாளமாக இருக்கிறது.

புதிய ஏற்பாட்டின் நிறைவேற்றம் எப்போதும் பழைய ஏற்பாட்டின் அடையாளத்தை விட உயர்ந்ததாகவே இருக்கிறது. இறைப் பிரசன்னத்தின் உயிருள்ள பேழையாகிய நம் அன்னை பழைய ஏற்பாட்டுப் பேழையை விட உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். 

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144, பிரதர் மகிபன் Ph: 9940527787

புதிய உடன்படிக்கைப் பேழையாகிய எங்கள் தாய் மரியே ! உம்மை… வணங்குகிறோம்…

வாழ்க .. வாழ்க.. மாதாவே,,, வாழ்க … வாழ்க.. மாதாவே… ஜெபிப்போம்…ஜெபிப்போம்….ஜெபமாலை…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !