நம் திவ்ய அன்னை பற்றிய தந்தை பியோவின் போதனைகள் 3 :

பழைய ஏற்பாட்டின் பேழை கடவுளுடைய வார்த்தைகளை தன்னுள் கொண்டிருந்தது. புதிய ஏற்பாட்டுப் பேழையாகிய மாமரியோ தன்னுள் மனிதனாக அவதரித்த வார்த்தையானவரையே கொண்டிருந்தார்கள். பழைய பேழைக்குள் மன்னா இருந்தது. புதிய பேழையாகிய மாமரி பரலோகத்திலிருந்து இறங்கி வந்த உயிருள்ள அப்பமானவரைத் தன்னுள் கொண்டிருந்தார்கள் (அரு:6). மோயீசன் பழைய பேழைக்குள் ஆரோனின் கோலை வைத்தார். அது உண்மையான பெரிய குரு யாரென்று காட்டும்படி தளிர்விட்டு, பூப்பூத்தது. ஆனால் மாமரியோ உண்மையான, நித்திய பெரிய குருவையே தன்னுள் கொண்டிருந்தார்கள், பழைய உடன்படிக்கைப் பேழையின் உட்புறம் மிகப்பரிசுத்தமான, வேறு எந்த உலோகமும் கலக்காத பரிசுத்தமான பொன் தகட்டால் மூடப்பட்டது ( யாத்.25:11). ஆனால் புதிய உடன்படிக்கைப் பேழையாகிய தேவ அன்னையோ ஜென்மப்பாவக் கறையோ, எந்த விதமான கர்மப் பாவக் கறையோ இன்றி, கடவுளின் வரப்பிரசாதத்தால் பரிபூரணமாக நிரப்பப்பட்டவர்களாக இருந்தார்கள் (லூக் 1:28).

பழைய உடன்படிக்கைப் பேழை யாராலும் தொடப்படக் கூடாததாக இருந்தது. அதைத் தொடத் துணிந்த ஓசா அந்த இடத்திலேயே கடவுளால் அடித்து வீழ்த்தப்பட்டான். புதிய உடன்படிக்கைப் பேழையாகிய மாமரியோ “ கணவனை அறியாத “ நித்திய கன்னிகையாக, மனிதனால் தொடப்படக் கூடாதவர்களாக, ஒரு சிறப்பான நோக்கத்திற்காக கடவுளால் பாதுகாக்கப்பட்டவர்களாக இருந்தார்கள்.

புதிய ஏற்பாட்டின் நிறைவேற்றம் எப்போதும் பழைய ஏற்பாட்டின் முன்னடையாளத்தை விட மேலானதாக இருப்பதால், கடவுளின் எதிரிகளின் மீது புதிய உடன்படிக்கைப் பேழையின் (மாமரியின்) வல்லமையும், பழைய உடன்படிக்கைப் பேழையின் வல்லமையை விட மிகவும் மேலானதாக இருக்கிறது. பாத்ரே பியோ இவற்றையெல்லாம் நன்றாக உணர்ந்திருந்தார்.

“ மாமரிக்கு அன்பு காட்டும்படி உலகில் உள்ள எல்லாப் பாவிகளுக்கு சொல்லும் அளவுக்கு ஓர் உரத்த குரலைக் கொண்டிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அவர்கள் ஒரு பெருங்கடலாக இருக்கிறார்கள். சேசுவை அடைவதற்கு ஒருவன் இந்த பெருங்கடலைக் கடந்து சென்றேயாக வேண்டும்”. என்று அவர் அடிக்கடி கூறி வந்தார். பாத்ரே பியோவின் அறை வாசலுக்கு மேலே,

“  மாமரி என் முழு நம்பிக்கையின் காரணமாக இருக்கிறார்கள் “ என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144, பிரதர் மகிபன் Ph: 9940527787

தந்தைப் பியோவுக்கு மட்டுமா… நமக்கும் நம் அன்புத்தாய் முழு நம்பிக்கையின் காரணமாய் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல நாம் நம்சர்வேசுவரன் சேசு ஆண்டவரை அடைய நிச்சய வழியாய் இருக்கிறார்கள்..

பழைய உடன்படிக்கைப் பேழை கடவுளுடைய பிரசன்னத்தின் கருவிகளைக் கொண்டிருந்தது. ஆனால் புதிய உடன்படிக்கைப் பேழையோ கடவுளையே கொண்டிருந்தது…

புதிய உடன்படிக்கைப் பேழையை.. கடவுள் நமக்கு அளித்த அன்புத் தாயை,.. நம் அனைவருக்கும் அம்மாவான மாதாவை பயன்படுத்தாமலும், அன்பு செய்யாமலும், அவரின் துணையை நாடாமலும் இருப்பவர்களுக்கு அவர்களுக்குத்தான் நஷ்ட்டம்…  தாயின் பராமரிப்பில் வளரும் பிள்ளைகளுக்கும், தாயில்லாமல் வளரும் பிள்ளைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நாம் தாயுள்ள பிள்ளைகள். தாயுள்ள பிள்ளைகளாக வாழ்வதில் பெருமை கொள்வோம்; கடவுளுக்கு நன்றி சொல்வோம். மேலும் நாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக வாழ்வதில் பெருமை கொள்வோம்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !