உத்தரியம் - பாகம் 22 - உத்தரியம் அணிவிக்கப்பட சொல்ல வேண்டிய ஜெபங்கள்!

(சுருக்கமான முறை)

குருவானவர் : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக !

எல்லோரும் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக !

கார்மேல் உத்தரியத்தை புனிதப்படுத்தும் முறை..

குருவானவர் : கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே, மனுக்குலத்தின் மீட்பரே, உமது அன்பிற்காகவும், உமது பரிசுத்த மாதாவும், கார்மேல் மலை புனிதமிக்க கன்னிகையுமான மரியாயின் அன்பிற்காக உமது ஊழியர்கள் அணியப்போகும் இந்த உத்தரியத்தை ஆசீர்வதித்தருளும். இதனால் எதிரியின் தாக்குதலிலிருந்து விடுபட்டு, மரண மட்டும் உமது அருளில் நிலைத்திருக்கும் வரம் அருளும்- என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கிறவரே- 

ஆமென் (எல்லோரும்)

(குருவானவர் உத்தரியங்களின் மேல் தீர்த்தம் தெளிக்கிறார்)

உத்தரிய சபையில் உறுப்பினரை சேர்க்கும் முறை..

குருவானவர் : “ அன்னையின் புனித ஆடையை அணிந்து கொள்ளும் நீங்கள் பாவ மாசில்லாமல் இதை எப்போதும் அணிந்திருக்க அதிபரிசுத்த கன்னிகையின் உதவியைக் கேளுங்கள். அவர்கள் உங்களை எல்லா தீமைகளிலிருந்தும் காப்பாற்றி நித்திய வாழ்வுக்கு வழி நடத்துவார்கள்- ஆமென்

கார்மேல் சபைத் துறவிகள் இயேசுவின் இரக்கமுள்ள இருதயத்தின் உதவியால் செய்யும் அனைத்து ஞானகிரிகைகளுக்கும் உங்களை பங்காளிகளாக்குகிறேன். பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே- ஆமென் 

பரிசுத்த கார்மேல் அன்னையின் உத்தரிய சபையில் உங்களை ஏற்றுக்கொள்ள சித்தமான எல்லாம் வல்ல ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களது கடைசி நேரத்தில் ஆதிப் பாம்பின் வல்லமையை அழித்து, உங்களுக்கு வாழ்வின் வெற்றி வாகையையும், மகிமையின் முடியையும் பெற்றுத் தர வேண்டுமென்று அந்த அன்னையை பணிந்து வேண்டுவோம் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக – 

ஆமென் (எல்லோரும்)

(அதன் பின் குருவானவர் அனைத்து மக்களுக்கும் உத்தரியத்தை அவர்கள் கழுத்தில் அணிவிக்கிறார்)

தேவமாதாவின் வாக்குறுதி ( 1251- ஜூலை 16- ல் புனித சைமன் ஸ்டாக்கிடம் சொல்லியது)

“எனது அருமை மகனே, இவ்உத்தரியத்தைப் பெற்றுக்கொள். நான் உங்களுக்கு வழங்கும் சிறப்புச் சலுகையின் அடையாளம் இது. இதை அணிந்துகொண்டு இறப்பவர்கள் நித்திய நெருப்பிலிருந்து காப்பாற்றப்படுவார்கள், இது மீட்பின் சிறப்பு அடையாளம், ஆபத்தில் காக்கும் கேடயம், அமைதி மற்றும் பாதுகாப்புக்கென சிறப்பாக வழங்கப்படும் உறுதி” 

1917 ஆம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி பாத்திமாவில் மிகப்பெரிய சூரிய அதிசயம் கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேர் முன்னிலையில் நடந்த போது மாதா கார்மேல் அரசியாக தன் கரத்தில் உத்தரியத்தை ஏந்தியவாறு காணப்பட்டார்கள்..

உத்தரியத்தை கரத்தில் ஏந்தியவாறு மாதா காட்சி தந்ததேன்? என்று சகோதரி லூசியாவிடம் கேட்டதற்கு,

“ அது எனென்றால் எல்லோரும் உத்தரியத்தை அணிய வேண்டும் என மாதா விரும்புகிறார்கள் “ என்று பதிலளித்தாள்.

அதை விளக்கிக்கூறும்படி கேட்டதற்கு,

“ உத்தரியத்தை அணிந்திருக்க வேண்டும். எனென்றால் நாம் மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறோம் என்பதன் பொருள் இது “ என்று கூறினாள்.

உத்தரியம் அணிவோம் அன்னையின் பாதுகாப்பைப் பெறுவோம்..

ஜெபமாலை.. உத்தரியம்.. தாய் பிள்ளை உறவிதுவே..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !