லூர்து மாதா - வரலாறு!

பிரான்ஸ் நாட்டின் தென் - மேற்கு பகுதியில் Midi - Pyrénéees என்னும் மாநிலத்தில் லூர்து நகரம் அமைந்துள்ளது.அமெரிக்கா என்றால் நமக்கு சுதந்திர தேவியின் சிலை ஞாபகம் வருவது போல் ப்ரான்ஸ் என்றால் அனைவருக்கும் லூர்து மாதா கோயில்தான் ஞாபகம் வரும். இயற்கை அழகு கண்கொள்ளாத வண்ணம் அமைந்திருக்கும் பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ளது "லூர்ட்ஸ்" என்ற சின்னஞ்சிறு நகரம்.தென்மேற்கு ப்ரான்ஸ் பகுதியில் "Midi - Pyrénéees" என்ற மலைத்தொடரின் மத்தியப் பகுதியில் உள்ள இந்தச் சிறிய ஊரை,ஒவ்வொரு வருடமும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகிறார்கள்.இந்த சின்னஞ்சிறு ஊரில் அப்படியென்ன விசேஷம்?

லூர்ட்ஸ் என்னும் இவ்வூரில் அமைந்துள்ள மாதா கோயில்,கோயிலின் அடிவாரத்தில் உள்ள "கிரிட்டோ" எனப்படும் குகை,அந்தப் பகுதியில் குபுகுபுவென பொங்கி வரும் கற்கண்டாய் இனிக்கும் தெளிவான புனிதமான ஊற்று நீர்.ஊரின் நடுவே மிகவும் ப்ரம்மாண்டமாக மூன்று நிலைகளில் அமைக்கப்பட்டிருக்கிறது புனித லூர்து மாதா கோயில்.

உலகெஞ்கும் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பாஸ்லிகாக்களில் ஒன்றான இந்த ஆலயத்தை மாதாவே விரும்பி அமைத்துக் கொண்ட கதையை பார்க்கலாம்.

19ம் நூற்றாண்டில் கேவ் நதியின் கரையில் பல மாவு மில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அத்தகைய மில் ஒன்றில் பணி புரிந்து வந்த பிரான்ஸிஸ் தன் மனைவி லூயிஸ் சௌபிரஸ் மர்றும் 4 குழந்தைஅக்ளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இனிமையான இவர்களின் வாழ்வில் திடீரென துன்பங்கள் தொடர்ந்து வரத்தொடங்கின.

மில்லில் வேலை செய்யும் போது சிறு கல் ஒன்று பிரான்ஸிஸ்ஸின் இடதுகண்ணில் புகுந்து கண்பார்வை பறிபோயிற்று.2 மூட்டைகள் மாவினை திருடியதாக அவர்மேல் தவறான பழி விழு,எட்டு தினங்கள் சிறையிலடைக்கப்பட்டார்.ஊரெங்கும் பஞ்சமும்,காலரா நோயிம் பரவிற்று.

இந்நோய் பிரான்ஸிஸ்ஸின் மூத்த மகளான பெர்னாடெட்டையும் தாக்கிற்று.வசதியில்லாத காரணத்தினால் நடுத்தெருவிற்க்கு வந்த குடும்பத்தினரைப் பார்த்து பரிதாபப்பட்டு,அவர்களின் உறவினர் ஒருவர் பழைய சிறையான "காசோட்" என்ற அறையை அவர்கள் தங்குவதற்க்காக அளித்தார்.

தந்தை முதலில் சிறைக்கு சென்றார், இப்போது குடும்பத்துடன் அனைவருமே சிறையில் தங்குகிறார்கள் என ஊரில் பலர் அவர்களைக் கேலி செய்தனர். உடல்நலமில்லாததாலும்,ஊர்ப் பேசிய கேலியினாலும்,பெரிதும் மனதளவில் பாதிக்கப்பட்டாள் பெர்னாடெட்.பதினான்கு வயதாகியும் பள்ளிக்குச் செல்லாததால் ஆங்கிலத்திலோ, ப்ரெஞ்சிலோ பேச, படிக்க, எழுத தெரியாது.

அவளுக்குப் பேசத் தெரிந்தது கூட மாறுபட்ட பிரெஞ்சு மொழிதான். அவள் மான்க்கவலைகளை வாரா வாரம் மாதா கோயிலுக்கு சென்று முறையிட்டு அழுவாள்.

ஊற்று நீர் பெருகுமிடத்தில் இருக்கும் மாதா 1858ம் ஆண்டு பிப்ரவரி பதினொன்றாம் தேதி தன் தோழிகளுடன் காட்டில் கள்ளிப் பொறுக்கவும்.ஆடு மேய்க்கவும் சென்றாள்.கேவ் நதிக்கரையில் பாறைகள் நிறைந்த காட்டில் தோழிகள் விறகு வெட்டிக் கொண்டிருந்த போது,பெர்னாடெட்டிற்கு காற்றில் ஒரு ரீங்கார ஒசை கேட்டது. நிமிர்ந்து பார்த்தவர்களுக்கு பாறையின் நடுவே ஒரு இளம்பெண், கருணை முகத்துடன்,சுற்றிலும் ஒளிவட்டம் வீச நின்றிப்பது தெரிந்தது. என்னவென்று புரிந்து கொள்ளும் முன் அந்தப் பெண் மறைந்து விட்டாள்.

ஆர்வம் மேலிட, தொடர்ந்து அடுத்த நாள் அதே பகுதிக்குப் பெர்னாடெட் போன போது திரும்பவும் அதே காட்சியைக் கண்டாள்.3 ம் நாளும்,4 நாளும் காட்சித் தந்த பிறகு பெர்னாடெட்டிடம் அந்த இளம்பெண்,

"தொடர்ந்து உண்ணால் இந்தப் பாறைகள் நிறைந்த பகுதிக்குப் 15 நாட்களுக்கு வரமுடியுமா?" என்று கேட்டாள். "முடியும்" என்று பதிலளித்த பெர்னாட்டெட்டிடம் "உனக்கு இவ்வுலகில் சந்தோஷத்தை அளிக்க முடியாவிட்டாலும் அவ்வுலக அளிப்பேன்" என்று கூறி மறைந்தாள்.

தொடர்ந்து 15 நாட்கள் கிரிட்டோவிற்க்குச் சென்ற போது, மேலும் மேலும் தரிசனங்கள் கிடைத்தன.8 தரிசனத்தின் போது "தவத்தில் ஈடுபடு! பாவப்பட்டவர்களுக்காக ஜபம் செய்!" என்ற ஆணை கிடைத்தது. 9 வது முறை காட்சியளித்த போது அந்த இளம்பெண் பெர்னாடெட்டை அருகில் அழைத்து, "இக்குகையில் உள்ள மண்ணை உன் நகங்களினால் கீறு, அதில் தோன்றும் ஊற்று நீரில் உன் உடலைக் கழுவிய பிறகு அதனைப் பருகுவாயாக" என்று கூறினாள்.

அவள் வார்த்தைகளுக்குப் பதிலேதும் கூறாமல் அவ்வாறே செய்த போது, மண்ணாக இருந்த ஊற்று நீரைப் பருகியதும் உடலில் உள்ள வியாதியும், அதனால் ஏற்பட்ட சோர்வும் நீங்கிய உணர்வைப் பெற்றாள். ஆஸ்துமா நோயினால் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு மூச்சு நன்றாக விட முடிந்தது. புல்லரிப்புடன் திரும்பிப் பார்த்த போது ஊற்று நீர் குபுகுபுவெனப் பெருகத் தொடங்கியது.

இவர் தான் பெர்னாடெட்.

அடுத்து வந்த தரிசனங்களில் அந்த ஊற்று நீரை பருகினால் உடலில் உள்ள நோய்கள் நீங்கப் பெறும் என்பதை மேலும் மேலும் உறுதிப்படுத்தினாள் அந்த இளம்பெண். 13 வது தரிசனத்தின் போது, "போய்ப் பாதிரியார்களையும்,பொது மக்களையும் திரளாக அழைத்து வந்து இங்கு எனக்கு ஒரு ஆலயம் எழுப்பச் சொல்"என்று அப்பெண் கூறினாள்.

அடுத்த 2 தரிசனங்களிலும் அதே வார்த்தைகளைக் கூறவே, யார் அந்த இளமங்கை என்றறியும் ஆவல் பெர்னாடெட்டிற்கு ஏற்பட்டது. 16 வது முறை தரிசனம் தந்த போது, "ஒளி வெள்ளமாகத் திகழும் மாதாவே!தாங்கள் யார்? என்று பெர்னாடெட் கேட்டதும், "நான்தான் புனித தூயமேரி மாதா!" என்ற பதில் கிடைத்தது.

அறிவிலோ, செல்வத்திலோ, சுகத்திலோ, உடல்நலத்திலோ எந்தவிதத்திலும் தகுதியில்லாத ஏழையான தன்னைத் தேர்ந்தேடுத்து, ஒருமுறை, இருமுறையல்ல 18 முறை காட்சியளித்ததை எண்ணிப் பெருமகிழ்ச்சி அடைந்தாள் பெர்னாடெட்.

அடுத்த நாள் ஊர் மக்களையும், படித்தவர்களையும், பெரியோர்களையும் கிரிட்டோவிற்கு அழைத்து வந்தாள் பெர்னாடெட். அவளுக்கு மாதாவின் தரிசனம் கிடைத்த போது மாதாவின் முன் மெழுகுவர்த்தி ஏற்றி நின்றாள். மெழுகுவர்த்தி உருகி பெர்னாடெட்டின் கையிலேயே 10 நிமிடங்கள் எரிந்தது. ஆனால் பெர்னாடெட்டின் கையைப் பாதிக்கவில்லை. சுற்றி நின்றிருந்த மக்களுக்கு மாதாவைக் காண முடியாவிட்டாலும், மாதாவை தரிசித்துக் கொண்டிருக்கும் பெர்னாடெட்டின் பரவசமான முகம் தெரியவே, அவர்கள் உடல் புல்லரித்தது. அதற்கு அடுத்த நாள், 18 வது தரிசனம் கேவ் நகரின் அக்கரையில் உள்ள புல்வெளியில் பெர்னாடெட்டுக்குக் கிடைத்தது, இதுவரை தன் வாழ்நாளில் என்றுமே கண்டிராத அளவு அழகும், கருணையும் ததும்பும் மாதாவைக் கண்டாள்.

மூத்த பிஷப்புகளையும், மூத்த பாதிரியர்களையும் பல பெரியோர்களையும் அறிஞர்களையும் தேடி சந்தித்து, தனக்கு 18 முறை மாதா தரிசனம் அளித்ததையும், ஊற்று நீரின் மகிமையை விளக்கியதையும், தனக்கு கோயில் எழுப்புமாறு கூரியதையும் எடுத்துக் கூறினாள். ஆனால் அவள் வார்த்தைகளை உடனே நம்ப அவர்கள் தயாராக இல்லை.

"மாதாவின் வார்த்தைகளை உங்களிடம் எடுத்துக் கூறுவது மட்டுமே என் வேலை. நம்புவதும்,நம்பாமலிருப்பதும் உங்கள் இஷ்டம்" என்று ஒதுங்கி விட்டாள் பெர்னாடெட். அவளது வார்த்தைகளை வழக்காக பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது. இதற்கிடையில் நோயினால் பாதிக்கப்பட்ட பலர், ஊற்று நீரைப் பருகி, மாதாவை வேண்டி பல வகையான நோய்களிலிருந்து குணமடையத் தொடங்கினார்கள். பொது மக்களின் நம்பிக்கை பெருகி, பலரும் மாதாவை தரிசித்த பெர்னாடெட்டை நாடி வணங்கத்தொடங்கினர்.

மிகவும் வறுமையான சூழ்நிலையில் இருந்த போதும், தன்னையோ தன் குடும்பத்தையோ வியாபாரப் பொருளாக பொதுமக்கள் மாற்றுவதை விரும்பாத பெர்னாடெட் லூர்ட்ஸ் நகரிலிருந்து நெவர்ஸ் என்ற நகருக்குச் சென்று, அங்குள்ள கிறிஸ்துவ மிஷனின் கான்வெண்ட்டில் சேர்ந்து உடல்நலம் குன்றியவர்களுக்காகச் சேவை செய்யத் தொடங்கினாள். திரும்ப லூர்ட்ஸ் நகருக்கு வராமலேயே 1879ம் ஆண்டில் தன் 35 வதுவயதில் உயிர்நீத்து அவ்வுலகில் இன்பம் பெற மாதாவை சரணடைந்தாள்.

நெவர்ஸ் கான்வெண்ட்டிலேயே புதைக்கப்பட்ட அவளது உடல்,கோயில் கட்டுவதற்காக வாதாடப்பட்ட வழக்கிற்காக 1909ம் ஆண்டு ஒரு முறையும்,1919ம் ஆண்டு ஒரு முறையும் வெளியே எடுக்கப்பட்டது. சிறிதளவு கூட பழுதடையாமல் அவள் உடல் இருந்ததைக் கண்டு அனைவரும் திகைத்தனர். புனிதமேரி மாதாவின் அருள் பூரணமாகப் பெர்னாடெட்டின் மேல் இருப்பது அனைவருக்கும் தெளிவாயிற்று.

லூர்ட்ஸ் நகரில் மாதாவின் விருப்பபடி மிகப் பெரிய ஆலயம், 3 நிலையில் எழுப்பப்பட்டுள்ளது. உலகெங்கிலிருந்தும் மக்கள் திரளாக வந்து மாதாவை வணங்கி ஊற்றுநீரைப் பருகி பலவிதமான நோய்களிலிருந்து குணமடைந்துள்ளனர். நோயாளிகள் பலர் மாதாவின் கருணையை நாடி ஸ்ட்ரெச்சரில் டிரிப் பாட்டிலுடனும்,சக்கர வண்டிகலீல் ஊனமுற்றவர்களும் திரளாக வருவதை இங்கு காணலாம்.

கைகால் முறிவு, கண்பார்வை பாதிப்பு, காசநோய், ஆஸ்துமா, பாரிசவாயு, உடலில் பல இடங்கலீல் ஏற்பட்டுள்ள ட்யூமர் என்ற கட்டிகள் எனப் பலவித நோய்களில் இருந்து குணமடைந்த, பல நோயாளிகள் ஊற்று நீரின் பிரசித்ததை கோயிலின் ரிஜிச்தரில் பதிவு செய்துள்ளனர். பிப்ரவரி 12ம் தேதி பெர்னாடெடிற்க்கு மாதாவின் முதல் தரிசனம் கிடைத்த நாள் "உலக நோயாளிகளின் நாளா"கக் கருதப்படுகிறது.

4,000 மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்த லூர்ட்ஸ் நகரம் இன்று மிக முக்கியமான புண்ணியஸ்தலமாக பிரபலமடைந்துவிட்டது. பல்வேறு யாத்ரீகர்கள் வந்து தங்குவதால்.பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரத்திர்க்கு அடுத்தபடியாக இங்குதான் 270 ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளன.ஒவ்வொரு சீஸன் எனப்படும் பருவகாலத்திலும் 6 மில்லியன் கடிதங்கள் நோயாளிகளிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் பிரார்த்தனையாக வந்து சேர்கிறது. இண்டர்நெட்டின் மூலமாகவும் பிரார்த்தனைகள் பதிவு செய்யப்படுகின்றன. அவை மாதாவின் பாதத்தில் சமர்ப்பிக்கபடுகின்றன.

இந்த ஆலயம் அமைந்துள்ள ஊரினை "துலூஸ்" (TOULOUSE) என்றா நகரத்திற்கு விமானம் மூலம் சென்றால், அங்கிருந்து சாலை வழியாக சென்றடையலாம். வழியெங்கும் இயற்கை காட்சிகளே நம்மை நோயிலிருந்து பாதி விடுபடச்செய்யும். போகும் போது கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டியது புனித ஊற்றுநீரை நிரப்பி வரத் தேவையான பாட்டில்கள் அல்லது ஜெரிகேன்கள்! மாதா பெர்னாடெட்டிற்கு காட்சியளித்த குகையைத் தொட்டுப் பரவசமடையலாம். மெழுகுவர்த்திகளை நாமே பணம் போட்டு எடுத்துச் சென்று மாதாவின் முன் ஏற்றலாம்.

யாத்ரீகர்களின் பேரில் ஆலயம் கொண்டுள்ள அளவற்ற நம்பிக்கையினால் நம்மைக் கட்டுப்படுத்த, மெழுகுவர்த்தி விற்க, புனித நீரை நிரப்ப எங்கும் ஆட்களில்லை. புனிதநீர் சிறிய ஊற்றில் பொங்குவதை கண்ணாடி வழியே காணலாம். அந்நீரை பல்வேரு குழாய்களில் பொதுமக்கள் சிரமமின்றி பிடித்துக் கொள்ள குழாய்கள் பல அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விஞ்ஞான யுகத்தில் இன்னும் நடந்து கொண்டிருக்கும் தெய்வீக அற்புதங்கள் அங்கு காணலாம். இந்த புனிதமாதாவை தரிசிக்க விரும்புபவர்கள் இந்தியாவில் கூட தரிசிக்கலாம். புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் என்னும் நகரத்தில் லூர்துமாதா கோயில் இருக்கிறது. பிரான்ஸ் நாட்டிலிருந்து மாதாவின் சிலை வரவைக்கப்பட்டு இங்கு கோயில் அமைந்துள்ளது. நாமும் மாதாவை தரிசித்து அவர்களின் அருளை பெறுவோம்.