கார்மேல் மாதா - வரலாறு!

அர்ச்சியசிஷ்ட கார்மேல் அன்னை அல்லது  கார்மேல் மலை அன்னை அல்லது அர்ச்சியசிஷ்ட உத்தரிய மாதா என்பது கார்மேல் சபையின் பாதுகாவலராகிய, சேசு கிறிஸ்துவின் தாயான அர்ச்சியசிஷ்ட கன்னி மரியாவுக்கு அளிக்கப்படும் பெயராகும்.

கார்மேல் சபையின் முதல் உறுப்பினர்கள் 12 முதல் 13ம் நூற்றாண்டு வரை திருநாட்டில் உள்ள கார்மேல் மலையில் வனவாசிகளாக வாழ்ந்தனர். தங்களின் துறவு இல்லத்தருகில் ஒரு கோவிலை அன்னையின் பெயரில் கடவுளுக்கு கட்டினர். அக்கால வழக்கப்படி அக்கோவில் இருந்த இடத்தின் பெயராலேயே அன்னைக்கு கார்மேல் அன்னை என்னும் பெயர் வழங்கலாயிற்று.

15ம் நூற்றாண்டில், மாதாவின் உத்தரியம் என்னும் அருளிரக்கத்தின் பக்தியானது பரவ துவங்கியது. மாதாவே உத்தரியத்தை புனித சைமன் ஸ்டாக் என்னும் கார்மேல் சபை புனிதருக்கு ஒரு காட்சியில் அளித்ததாக நம்பப்படுகின்றது. 16 ஜூலை கத்தோலிக்க திருச்சபையில் கார்மேல் அன்னையின் விழா நாள் ஆகும்.

அர்ச்சியசிஷ்ட கார்மேல் அன்னை, சிலி நாட்டின் பாதுகாவலி ஆவார்.

கார்மேல் மாதாவின் சபையானது தனது பெயரை, இஸ்ரயேல் தேசத்தில் உள்ள, கன்னி மரியாளுக்கென்று, அவர் விண்ணுக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்பாக  முதன் முதலில் அர்பணிக்கப்பட்ட ஆலயம் இருக்கும் கார்மேல் மலையைப்  பின்பற்றி எடுத்துக் கொள்கிறது.

புனித சைமன் ஸ்டாக் என்பவர் தனது நாற்பதாவது வயதில் இங்கிலாந்தில் உள்ள கார்மேல் சபையில் இணைகிறார். இஸ்ரயேலில் இருக்கும் கர்மேல் சபைக்கு அனுப்பப்பட்ட அவர், கலகக்காரர்கள் அந்த இடங்களை ஆக்கிரமிக்கும் வரை அங்கிருந்து தன் செப தப ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபட்டார்.அதன் பின், தனது சபைச் சகோதரர்களுடன் இங்கிலாந்து திரும்பிய அவர், ஏகமனதாக கிபி 1245 ஆம் ஆண்டில் சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் மாதாவின் பேரில் மிகுந்த பற்றுதல் கொண்டிருந்தார். இதுவே கார்மேல் சபை இவரது தலைமையின் கீழ் தழைத்தோங்கக் காரணமாய் அமைந்தது. இன்று ஏறத்தாழ 764 ஆண்டுகளுக்கு முன்னர், 1251ம் ஆண்டில் கார்மேல் துறவு சபை இடையூறுகளுக்கு உள்ளானது. அச்சமயத்தில் சைமன், தனது சபைக்கு ஏதாவது ஒரு தனிப்பட்ட சலுகையை வழங்குமாறு அன்னைமரியிடம் உருக்கமாகச் செபித்து வந்தார். இந்த நல்ல துறவியின் செபத்தைக் கேட்ட அன்னைமரியா, 1251ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி கேம்பிரிட்ஜில் ஒரு கறுத்த ஆரஞ்சு வண்ண உத்தரியத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம் அவருக்குக் காட்சி கொடுத்துச் சொன்னார்:

"எனது அருமை மகனே, இந்த உத்தரியம் உங்கள் சபைக்குரியது. நான் உங்களுக்கு வழங்கும் சிறப்புச் சலுகையின் அடையாளம் இது. இதனை உனக்காவும், உனது கார்மேல் மலைச் சிறாருக்காகவும் நான் பெற்றது. இதை அணிந்துகொண்டு இறப்பவர்கள் நித்திய நெருப்பிலிருந்து காப்பாற்றப்படுவார்கள், இது மீட்பின் சிறப்பு அடையாளம், ஆபத்தில் காக்கும் கேடயம், அமைதி மற்றும் பாதுகாப்புக்கென சிறப்பாக வழங்கப்படும் உறுதி" என்று கழுத்தில் அணியும் இந்த உத்தரியத்தை அன்னைமரியாவிடமிருந்து பெற்றவர் புனித சைமன் ஸ்டாக்.   Stock என்றால் அடிமரம் என்று பொருள்.

புனித சைமன் அவர்களின் இளமைக்கால வாழ்வு பற்றி அவ்வளவாகத் தெரியவில்லையெனினும், இவர் தனது 12வது வயதிலிருந்தே ஓர் ஓக் மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த காலியான இடத்தில் துறவியாக வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகிறது. இவர் இளைஞனாக இருந்தபோது புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். அங்கு கார்மேல் சபைத் துறவிகளுடன் சேர்ந்தார். பின்னர் ஐரோப்பா திரும்பி, கார்மேல் சபையின் பல இல்லங்களை நிறுவினார். குறிப்பாக, கேம்பிரிட்ஜ், ஆக்ஸஃபோர்டு, பாரிஸ், பொலோஞ்ஞா போன்ற பல்கலைக்கழக நகரங்களில் கார்மேல் சபை இல்லங்களை ஏற்படுத்தினார். கார்மேல் சபையை தியானயோக வாழ்விலிருந்து தர்மம் எடுத்து வாழும் சபையாக மாற்றினார்.