சம்மனசுக்களும் பூசையும்!

அர்ச். கிரகோரியார்: "பூசைப்பலியில் பங்கு பெறும்படி வானமண்டலங்கள் திறக்கப்பட்டு, சம்மனசுக்களின் படையணிகள் இறங்கி வருகின்றன."

அர்ச். அகுஸ்தீனார்: ''குருவானவர் பூசை நிறைவேற் றும்போது, தேவதூதர்கள் அவரைச் சூழ்ந்து நின்று அவருக்கு உதவி செய்கிறார்கள்.''

அர்ச். கிறீசோஸ்தோம் அருளப்பர்: ''திவ்ய பலி நிறை வேறும்போது, தேவாலய பீடப்பகுதி எண்ணற்ற சம்மனசுக்களால் நிரப்பப்படுகிறது. இவர்கள் பீடத்தின் மீது பலியிடப் படும் தேவபலிப்பொருளானவரை ஆராதிக்கிறார்கள்."

பூசையால் விளையும் நன்மை மிக அற்புதமானது, கடவுளின் இரக்கமும், தாராளமும் அப்போது எவ்வளவு அளவுக்கு உட்படாததாக இருக்கிறது என்றால், நமக்குத் தேவையான நன்மைகளைக் கேட்க பீடத்தின் மீது சேசு பாலன் பிறக்கும் நேரத்தைவிட மிகச் சிறந்த நேரம் வேறு எதுவுமில்லை. அப்போது நாம் கேட்கும் எதையும் நாம் ஏறக்குறைய நிச்சயமாகப் பெற்றுக்கொள்வோம். பூசையில் நாம் பெற்றுக் கொள்ளாததை மற்ற ஜெபங்கள், தவ முயற்சிகள் அல்லது திருயாத்திரைகளின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்புவது மிக அரிது.

சம்மனசுக்கள் இதை முழுமையாக அறிந்துள்ளனர். ஆகவே அவர்கள் இந்த இரக்கத்தின் வேளையில் கடவுளை ஆராதிக்கவும், தங்கள் விண்ணப்பங்களைக் கடவுளின் முன் சமர்ப்பிக்கவும், பெருங்கூட்டமாக இறங்கி வருகிறார்கள்.

அர்ச். விர்ஜித்தம்மாளின் வெளிப்பாடுகளில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: ''ஒரு நாள் நான் திவ்வியபலி பூசையில் பங்கு பெற்றுக் கொண்டிருந்தபோது, பெருந்திரளான சம்மனசுக்கள் இறங்கி வந்து, பீடத்தைச் சுற்றி நின்று, குருவானவர் செய்யும் காரியங்களைக் கண்டு தியானித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். என் இருதயத்தைக் கொள்ளை கொண்டு பரவசத்தில் ஆழ்த்திய பரலோக கீதங்களை அவர்கள் பாடினார்கள். பரலோகம் முழுவதுமே அந்த மாபெரும் தேவபலியைக் கண்டு தியானித்துக் கொண்டிருந்தது போலிருந்தது. ஆனால் ஏழைகளும், குருடர்களும், பரிதாபத்திற்குரிய சிருஷ்டிகளுமான நாம் எவ்வளவோ குறைவான நேசத்தோடும், ஆசையோடும், வணக்கத்தோடும் அதில் பங்கு பெறுகிறோம்!''

ஓ, கடவுள் மட்டும் நம் கண்களைத் திறப்பார் என்றால், எத்தகைய அதிசயங்களைத்தான் நாம் பூசையில் காண மாட்டோம்!''

அர்ச். ஆசீர்வாதப்பர் சபையின் பரிசுத்த துறவற குரு வாகிய முத். ஹென்றி சூசோ ஒரு நாள் பூசை வைத்துக் கொண் டிருந்த போது, சம்மனசுக்கள் காணக்கூடிய விதத்தில் பீடத்தைச் சுற்றி ஒன்றுகூடினார்கள். அவர்களில் சிலர் நேசப் பரவசங்களில் அமிழ்த்தப்பட்டவர்களாக அவருக்கு மிக அருகில் வந்தார்கள்.

நாம் காண்பதில்லை என்றாலும் ஒவ்வொரு திவ்விய பலிபூசையிலும் நிகழ்வது இதுதான்.

இந்த அதிசயத்திற்குரிய உண்மையைக் கத்தோலிக்கர்கள் எப்போதாவது நினைக்கிறார்களா? பூசையின்போது அவர்கள் ஆயிரக்கணக்கான தேவதூதர்களுக்கு மத்தியில் இருந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள்.