புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அன்னையின் பிறப்பே ஓர் அதிசயம்

''அன்னையைப் போல ஒரு தெய்வமில்லை, அவள் அடிதொழ மறப்பவர் மனிதரில்லை. மண்ணில் மைந்தரில்லை.'' கிறிஸ்தவர்களின் பக்திக்கும், வணக்கத்திற்கும் மரியாதைக்கும், போற்றுதலுக்கும் மிகவும் உரித்தானவள் அன்னை மரியாள்.

தன் மகன் இயேசுவைப் போல, சகல மனிதரின் விடுதலைக்காக மௌனமாய் போராடி, தன் அன்பு மகனின் மீட்பு போராட்டத்தில் ,தனது பங்கை வல்லமையாய் நிருபித்து, ஏழை மக்களின் கண்ணீர் துடைக்க காலமெல்லாம் இயேசுவிடம் பரிந்து பேசி மக்களின் சுகமே தனது சுகம் என, தன் சுகம் மறந்து, ஒரு நிமிடம் கூட வாழ்நாளில் தனக்காக வாழாத ஒரு மாபெரும் தாய்மையின் பொக்கிஷம் மரியாள் தனது மகிழ்ச்சியே, தனது மக்கள் தான் என்பதை வாழ்ந்து காட்டியவள் மரியாள்.

சுயநலமும், போட்டியும், பொறாமையும், அகங்காரமும், அசிங்கமும், ஆணவமும் தலைவிரித்தாடும் இத்தரணியில் பெண்ணாய் பிறந்து புனிதையாய் வாழ்ந்தவள் நம் தாய் மரியாள். இவள் சாதாரண பிறவி, இறைவனின் புனிதகரத்தால் பரிசுத்தமாய் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதை அன்னை மரியாளின் வாழ்வு நிருபித்து காட்டுகிறது.

மாசற்ற குழந்தையாய் பிறந்து, ஏழைபெண்ணாய் பருவம் எய்தியபோது இறைவனின் சவாலை ஏற்று, ஒரே மகனை இந்த மனுகுலத்திற்கு வார்த்து கொடுத்ததல்லாமல், விதவையான பருவத்தில் உயிர் இழக்க வேண்டிய மகனின் சிலுவையின் அடியில் தொங்கி, "உலகத்திற்குத் தாயாய் இரு" என்று சொன்ன மகனின் வார்த்தையை, மறுக்காமல், மரியாள் ஏற்றாளே! இவள் என்ன சாதாரண பெண்ணா ?

''உமக்கும் பெண்ணுக்கும், உன் வித்திற்கும் அவள் வித்திற்கும் இடையே பகையை உண்டாக்குவோம். அவள் உன் தரலயை நசுக்குவாள்'' (தொ.நூ.3:15) என்று இறைவன் சொன்னபோதே, மரியாளை ஆண்டவர் முன்குறித்து வைத்திருந்தார் என்பது தெளிவாகிறது. '' என் அன்பே ...உன்னில் மாசுமருவே கிடையாது "" இனிமைமிகு பாடல் 4:7 வரிகளும் அன்னைமரியாளின் பிறப்பின் இயல்பை எடுத்துச் சொல்கிறது. அருள் மிக பெற்றவரே (லூக். 1:42) என்ற எலிசபெத்தின் வாழ்த்துரை மரியாளின் அமலஉற்பவத்திற்குச் சிறந்த எடுத்தக்காட்டு.

தாய் வயிற்றில் கருவான நேரம் முதல் பிறப்பு வரை மரியாள் ஜென்மப் பாவமாசு எதுவுமின்றி, காப்பாற்றப்பட்டாள். ஆகவே இறைவன் மரியாளை கருவிலே புனிதப்படுத்தி, மரியாளை தன் மகனின் வழியாய் கொணரவிருக்கும் மீட்பின் போராட்டத்திற்குத் தயார்படுத்தினார் என்பதுதான் உண்மை. ஆகவே அவளின் பிறப்பு அமலஉற்பவமாக மாறியது. நாம் தூயவராகவும் மாசற்றோராகவும் தன் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மை கிறிஸ்து வழியாக தேர்ந்தெடுத்தார்.(எபேசி.1:4) என்ற வசனங்கள் மரியாளுக்குப் பொருத்தமாக அமைகிறது.

அன்னைமரியாள் இயேசுவை கருவிலே தாங்குவாற்காக, மரியாளுக்கு ஆண்டவர் தொடக்க முதல் சிறப்பு கவனம் செலுத்தி, தன் பாதைக்குப் பக்குவபடுத்தி இன்று அமலஉற்பவி என்று போற்றுதற்குரியவராக மரியாளை இறைவன் மாற்றினார்.அதற்கேற்ற வண்ணமாக மரியாள் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டி '' இன்னாள் முதலாய் எல்லா தலைமுறையும் என்னை பேறுடையாள் என போற்றுமே "" என்று தன்னை பிரகடனப்படுத்தினாள். எனவே நாமும் திருமுழுக்கால் நமது ஜென்மப் பாவத்திலிருந்து விடுபடுகிறோம். பாவத்தை விட்டு, பாதைகளை மாற்றிக் கொள்கிறபோது நாமும் மரியாளின் பங்காளிகள் தான்.