திவ்விய பலிபூசையும், உத்தரிக்கிற ஆத்துமங்களும்!

ஒருமுறை இந்த உலகை விட்டு நாம் விலகிய பிறகு, திவ்விய பலிபூசைக்கு மேலாக நாம் வேறு எதையும் நம் ஆத்துமங்களுக்காக ஆசிக்க மாட்டோம். பீடத்தின் திவ்விய பலி அனைத்திலும் அதிக வல்லமையுள்ள பரிந்துரை ஜெபமாக இருக்கிறது. ஏனெனில் அது எல்லா ஜெபங் களுக்கும், எல்லா தவத்திற்கும், எல்லா நற்செயலுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. பூசைப்பலியானது சேசுநாதர் சிலுவையின் மீது ஒப்புக்கொடுத்ததும், அவர் இப்போது அதன் அளவற்ற பரிகார மதிப்புடன் பீடத்தின் மீது ஒப்புக்கொடுப்பதுமான அதே பலிதான் என்பதை நாம் நினைவுகூர்வோமானால், இதைப் புரிந்து கொள்வதில் நமக்கு எந்த சிரமமும் இருக்காது. பலியாக்கப்பட்ட சேசுநாதர், நம் பாவங்களுக்குப் "பிராயச்சித்தப் பலியான " (1 அரு. 2:2) உண்மையான பலிப்பொருளாக இருக்கிறார். அவரது தேவ இரத்தம் "பாவங்களின் மன்னிப்புக்காக" (மத். 26:28) சிந்தப்படுகிறது. திவ்விய பலிபூசையோடு முற்றிலுமாக எதுவுமே ஒப்பிடப்பட முடியாது. இந்த தெய்வீகப் பலியின் நன்மை தரும் கனிகள் கணக்கற்ற ஆத்துமங்களுக்கு நன்மை பயக்க முடியும்.

ஒரு முறை, அர்ச். பெர்னார்ட் உரோமையிலுள்ள மூன்று நீரூற்றுகளின் அருகிலுள்ள அர்ச். சின்னப்பர் கோவிலில் பூசை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, மோட்சத்தை நோக்கிச் சென்ற ஒரு முடிவில்லாத படிக் கட்டைக் கண்டார். ஏராளமான சம்மனசுக்கள், உலகம் முழுவதிலுமுள்ள பலிபீடங்களில் குருக்களால் புதுப்பிக்கப் படுகிற சேசுவின் திவ்விய பலியால் உத்தரிக்கிற ஸ்தலத் திலிருந்து விடுவிக்கப்பட்ட ஆன்மாக்களைச் சுமந்து கொண்டு, அந்தப் படிக்கட்டில் ஏறிச் சென்று கொண்டிருந்தார்கள்.

இதன் காரணமாக, நம் உறவினர்களின் மரணத் தின்போது, மலர்கள், கறுப்பு உடைகள், அடக்கச் சடங்குகள் ஆகியவற்றை விட அந்த ஆத்துமங்களுக்காக பூசை செய்விப் பதிலும், பூசை கண்டு ஒப்புக்கொடுப்பதிலும் நாம் மிக அதிக கவனம் செலுத்துவோம்.

பாத்ரே பியோவிடம் வந்து, தாங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்து விரைவில் விடுவிக்கப்படும்படியாக தங்களுக்காக பூசை வைக்கும்படி அவரிடம் கேட்ட உத்தரிக்கிறஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களின் பல காட்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் அவர் சக பிரான்சிஸ்கன் சகோதரர் ஒருவரின் தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிக் காக பூசை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். பூசையின் முடிவில், அர்ச்சியசிஷ்டவர் அந்த சகோதரரிடம்: 'இன்று காலையில் உம் தந்தையின் ஆத்துமம் மோட்சத்தில் பிரவேசித்தது!'' என்று கூறினார். அந்த சகோதரர் இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். என்றாலும் அவர் அர்ச். பியோவிடம் , ''ஆனாலும் தந்தையே, என் நல்ல தந்தை இறந்து முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டனவே'' என்றார் அந்த சகோதரர். அர்ச். பியோ பதிலுக்கு, ''என் மகனே, கடவுளுக்கு முன்பாக எல்லாக் கடனும் செலுத்தப் பட்டாக வேண்டுமே" என்றார். அளவற்ற மதிப்புள்ள ஒரு விலையை, அதாவது "மாசற்ற செம்மறிப் புருவை'யாகிய (காட்சி. 5:12) சேசுவின் திருச்சரீரம், திரு இரத்தம் ஆகியவற்றை, நமக்குப் பெற்றுத் தருவது திவ்விய பலி பூசையே.

ஒரு நாள் அர்ச். மரிய வியான்னி அருளப்பர் தமது பிரசங்கம் ஒன்றில் ஒரு குருவானவரைக் குறித்துப் பேசி னார். அவர் இறந்து போன தம்முடைய நண்பருக்காக பூசை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். தேவவசீகரத்திற்குப் பிறகு அவர் பின்வருமாறு ஜெபித்தார்: ''பரிசுத்தரான நித்திய பிதாவே, நாம் ஒரு பரிமாற்றம் செய்து கொள் வோம். நீர் உத்தரிக்கிற ஸ்தலத்தில் என் நண்பரின் ஆத்து மத்தை வைத்திருக்கிறீர். நானோ என் கரங்களில் உமது திருச்சுதனின் திருச்சரீரத்தை வைத்திருக்கிறேன். நீர் என் நண்பரை விடுவித்தருளும், நான் உம் திருச்சுதனை அவருடைய திருப்பாடுகளுடையவும், திருமரணத் தினுடையவும் எல்லாப் பேறுபலன்களோடும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்!''

இதை நினைவில் கொள்வோம்: ஓர் ஆன்மா வுக்காக ஒப்புக்கொடுக்கப்படும் எல்லா ஜெபங்களும், நற்கிரியைகளும் நல்லவைதான், என்றாலும் நம்மால் முடியும்போதெல்லாம், எல்லாவற்றிற்கும் மேலாக, மரித்த நம் பிரியத்துக்குரியவர்களின் ஆன்மாக்களுக்காக திவ்விய பலிபூசை (குறிப்பாக முப்பது கிரகோரியன் பூசைகள்) நிறைவேற்றப்படச் செய்வோம்.

முத். ஹென்றி சூசோவின் வாழ்வில் நாம் ஒரு நிகழ்வைப் பற்றி வாசிக்கிறோம். அவர் இளைஞரா யிருக்கையில், தம் சபையைச் சேர்ந்த ஒரு துறவற சகோதரரோடு ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்: ''நம் இருவரில் முதலில் நித்தியத்திற்குள் கடந்து சென்று விட்டவர் பரலோக மகிமையைப் பெற்றுக் கொள்வதைத் துரிதப்படுத்தும்படி, மற்றவர் வாராவாரம் ஒரு பூசை ஒப்புக்கொடுக்க வேண்டும்" என்பதுதான் அந்த ஒப்பந்தம். முத். ஹென்றியின் நண்பர் வேத போதக நாடு ஒன்றில் முதலில் இறந்தார். முத். ஹென்றி தம் நண்பருக்குத் தாம் தந்திருந்த வாக்குறுதியை நினைவுகூர்ந்து சிறிது காலம் அவருக்காகப் பூசை நிறைவேற்றி வந்தார். அதன்பின் மற்றவர்களுக்காகவும் பூசை நிறைவேற்றும் கடமை அவருக்கு இருந்ததால், நண்பருக்கு வாக்களித்திருந்த பூசையை நிறுத்தி விட்டு, அதற்குப் பதிலாக ஜெபங்களும், தவ முயற்சிகளும் செய்து ஒப்புக்கொடுத்து வந்தார். ஆனால் அவரது நண்பர் அவருக்குத் தோன்றி அவரைக் கடிந்து கொண்டார்: "உம் ஜெபங்களும், தவ முயற்சிகளும் எனக்குப் போதுமானவையாக இல்லை. சேசுநாதரின் திரு இரத்தமே எனக்குத் தேவை'' என்றார் அவர், ''ஏனெனில் இவருடைய இரத்தத்தின் மூலமாய்த்தான் நாம் இவருக்குள் பாவப் பொறுத்தலாகிய மீட்பை அடைந்திருக்கிறோம்" (கொலோ .1:14).

"பக்தியோடு நிறைவேற்றப்படும் ஒவ்வொரு பூசை யாலும் அநேக ஆத்துமங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மோட்சத்திற்குப் பறந்து போகிறார்கள்' என்று அர்ச். ஜெரோம் கூறுகிறார். பக்தியோடு பங்கு பெறப்படும் பூசைகளைப் பற்றியும் இவ்விதமாகவே சொல்ல வேண்டும். பிரசித்தி பெற்ற கார்மெல் சபையின் காட்சி தியானியான பாஸ்ஸியின் அர்ச். மரிய மதலேன் உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களை விடுவிக்கும் நோக்கத்துடன் மனதளவில் சேசுவின் திரு இரத்தத்தைப் பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தாள். உண்மையாகவே விலையேறப்பெற்ற தமது திரு இரத்தத்தை ஒப்புக்கொடுப்பதன் மூலம் அநேக ஆன்மாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று அவளுடைய பரவச நிலையொன்றில் சேசுநாதர் அவளுக்குக் காண்பித்தார். இது வேறு எப்படியும் இருக்க முடியாது. ஏனெனில் அர்ச். அக்குயினாஸ் தோமையார் கற்பிப்பது போல சேசுநாதருடைய ஒரு துளி இரத்தம் முதலாய் தனது அளவற்ற மதிப்பைக் கொண்டு, பிரபஞ்சம் முழுவதையும் அதன் ஒவ்வொரு பாவத்தில் இருந்தும் விடுவிக்கக் கூடியதா யிருக்கிறது.

ஆகவே, நாம் உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக பல பூசைகள் நிறைவேற்றப்படச் செய்து, அல்லது பூசைகள் கண்டு ஒப்புக்கொடுத்து, அதன் மூலம் அவர்களுடைய வேதனை களிலிருந்து அவர்களை விடுவிப்போம். "சகல நற்செயல் களையும் ஒன்றாகக் கூட்டினாலும், அவை ஒரு திவ்விய பலிபூசையின் மதிப்பைக் கொண்டிருக்க முடியாது, ஏனெனில் அவை மனிதரின் கைவேலைகளாக இருக்கிற அதே வேளையில் திவ்ய பலிபூசையோ சர்வேசுரனுடைய கைவேலையாக இருக்கிறது" என்று அர்ச். வியான்னி அருளப்பர் கூறுகிறார்.

திவ்விய நற்கருணையின் திருமாதாவாகிய மரியாயே வாழ்க!