உத்தரிப்பு ஆன்மாக்கள் ஆயிரம் மடங்காக நமக்குத் திருப்பிச் செலுத்துவர்.

உத்தரிக்கிற ஆன்மாக்களின் உணர்ச்சிகள் எவ்வாறு இருக்குமென்றால், தமக்காக பரிகார முயற்சிகள் மேற்கொள்பவர்களிடம், வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவிற்கு நன்றியுணர்வுடன் இருப்பார்கள்.

கைம்மாறாக திரும்ப அவரவர்களுக்கு உதவியே ஆகவேண்டுமென்று, மிக ஆர்வமுடன், தீவிரமாக இடைவிடாமல், கடவுள் உதவி செய்ய மறுக்க முடியாத அளவிற்கு நமக்காக செபிப்பர்.

பொலோஞ்ஞா நகரைச் சேர்ந்த புனித கத்தரீனம்மாள், "நான் மிகப் பெரிய உதவிகளையெல்லாம் புனிதர்களின் பரிந்துரையினால் பெற்றுள்ளேன், ஆனால் இன்னும் அதிக பெரிய உதவிகளை உத்தரிப்பு ஆன்மாக்கள் மூலம் பெற்றுக் கொண்டேன்" என்கிறார்.

உத்தரிப்புக் கடன் முடிந்து, வேதனையிலிருந்து இறுதியாக மீட்பு பெற்று, பேறுபெற்ற பரலோக ஆனந்தத்தில் திளைக்கும் பொழுது, உலகில் இருக்கும் தங்கள் நண்பர்களையெல்லாம் மறக்கும் தொலைவில் இருந்தாலும், அவர்கள் எல்லையில்லா நன்றியுடன் தான் இருப்பார்கள்.

கடவுளின் அரியணை முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து தங்களுக்கு உதவி செய்தவர்களுக்காக இடைவிடாது செபிப்பார்கள். செபங்கள் மூலமாக தங்கள் நண்பர்களுக்கு ஆபத்து காலத்தில் அரணாக இருந்து, துன்புறுத்தும் வாதைகள் அனைத்திலிருந்தும் அவர்களைக் காப்பாற்றுவார்கள்.

தங்களது செப உதவி பெறுபவர்கள், பரலோகம் வந்து சேர்ந்து தங்களது நேச, இனிய நண்பர்களாக மாறும் வரை செபம் செய்வதை நிறுத்த மாட்டார்கள்.

உத்தரிக்கிற ஆன்மாக்களுக்கு உதவி செய்வதன் மூலம் எத்தகைய வலிமை மிகு பாதுகாப்பாளர்களை நாம் பெற்றுக் கொள்கிறோம் என்பதை மட்டும் கத்தோலிக்கர்கள் நாம் உணர்ந்தால், உத்தரிக்கிற ஆன்மாக்களுக்கு செபிப்பதில் இவ்வளவு அலட்சியம் காட்ட மாட்டோம்.