உத்தரிக்கிற ஆன்மாக்களுக்கு நாம் எவ்வாறெல்லாம் உதவி செய்யலாம்?

1. முதலாவதாக உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் படும் துன்பத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்,

இதற்கான வழிமுறைகள் எளியதே.

(அ) புனித ஆன்மாக்களுக்காக தினசரி ஒரு செபத்தை ஒப்புக்கொடுக்க வேண்டும்.

(ஆ) வாரத்தில் ஒருநாள், குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் செய்யப்படும் அனைத்து நற்கிரியைகள், செபங்கள், வேதனைகள் மற்று பரித்தியாகங்களை ஒப்புக் கொடுத்தல்.

(இ) இதற்கென தனிப்பட்ட முயற்சிகள் எதுவும் மேற்கொள்ள வேண்டியதில்லை. நாம் எப்பொழுதும் அந்த நாளில் செய்யும் காரியங்களை ஒப்புக் கொடுக்க வேண்டும்.

(ஈ) முடிந்த அளவு அதிக மக்களிடம் சொல்ல வேண்டும்,

2. இரண்டாவது, உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக திருப்பலிகள் ஒப்புக் கொடுப்பது. உண்மையில் ஆன்மமீட்பில் அதிகபட்ச பலன் அளிக்கக் கூடிய காரியம் இதுதான்.

3. பொருளாதார வசதி குறைவினால் அதிக திருப்பலிகள் ஒப்புக் கொடுக்க இயலாதவர்கள், இக்கருத்துக்காக தம்மால் முடிந்த அளவு திருப்பலிகளில் பங்கேற்று உதவி செய்யலாம். குறைந்த ஊதியமே பெறும் ஒரு இளம் வயது நபர், 'என் மனைவி சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டாள். நான் அவளுக்காக 10 பலி பூசைகள் ஒப்புக்கொடுத்தேன். என்னால் அதற்குமேல் செய்ய இயலவில்லை . ஆனால் அவளது ஆன்ம இளைப்பாற்றிக்காக 1000 பலி பூசைகளில் பங்கேற்றேன்' என புத்தக ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

4. எண்ணிலடங்கா பலன்கள் தரும் ஜெபமாலை ஜெபிப்பதன் மூலமாகவும், சிலுவைப் பாதையை தியானித்து ஜெபிப்பதன் மூலமாகவும் புனித ஆத்மாக்களுக்கு சிறப்பாக உதவி செய்யலாம். நாம் ஏற்கனவே அறிந்தவாறு முத். மாசியஸின் ஜான் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆத்மாக்களை, முக்கியமாக ஜெபமாலை பக்தி மூலமாகவே உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடுவித்துள்ளார்.

5. மற்றுமொரு எளிய, அதிக பலன் தரும் வழி, தொடர்ந்து பலன்கள் உடைய மனவல்ய செபங்களைச் சொல்வது. பலரும் ஒரு நாளைக்கு 500 அல்லது 1000 தடவை , "இயேசுவின் திரு இருதயமே, என்னுடைய முழு நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்" அல்லது "இயேசு" என்ற சிறு ஜெபங்களை தொடர்ந்து ஜெபிக்கின்றார்கள். இந்த ஆறுதல் தரும் பக்தி முயற்சிகளின் மூலம் தங்களுக்கு கடலளவு ஆசீர்வாதங்களையும், உத்தரிக்கிற ஆன்மாக்களுக்கு பெருமளவு இளைப்பாறுதலையும் பெற்றுத் தருகின்றனர்.

இவ்வாறு ஒரு நாளைக்கு ஆயிரம் தடவைகள் மனவல்ய செபங்கள் செய்வதன் மூலமே நிறைய பலன்களையும் பெற்று அதிக ஆன்மாக்களையும் மீட்க முடியுமென்றால், ஒரு மாதம், ஒரு ஆண்டு அல்லது 50 ஆண்டுகளுக்குப் பிறகு இதன்மூலம் மீட்கப்பட்ட ஆன்மாக்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமாக இருக்கும்? இச்சிறு செபங்களை சொல்லாமலிருந்தால் எவ்வளவு உதவிகளையும், ஆசீர்வாதங்களையும், ஆன்மாக்களையும் இழந்திருக்க வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு 1000 தடவை இச்சிறு செபங்களை உச்சரிப்பது நம்மால் முடிந்த எளிய செயல்தான். 1000 தடவைகள் சொல்ல முடியவில்லையென்றால் 500 அல்லது 200 தடவையாவது சொல்லலாமே!

6. இன்னும் அதிக பலன் தரக்கூடிய செபம், "நித்திய பிதாவே, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற திரு இரத்தத்தை, இன்று உலகம் முழுவதும் நிறைவேற்றப்பட்டதும், இனி நிறைவேற்றப்பட்ட இருக்கின்றவையுமான சகல பலி பூசைகளோடும் சேர்ந்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காக ஒப்புக் கொடுக்கிறேன்" என்பதாகும்.

ஒரு நாளைக்கு பல தடவை இச்செபத்தைச் சொன்ன புனித ஜெர்த்துருத்தம்மாளுக்கு ஒவ்வொரு முறை செபிக்கும்போதும் அதிக அளவு ஆன்மாக்கள் உத்தரிப்பு ஸ்தலத்தை விட்டு மீட்பு பெறுவதை நமதாண்டவர் காண்பித்துள்ளார்,

7. நாம் இவ்வுலகில் வாழும்போது செய்யும் அனைத்து நற்கிரியைகளையும், மரணத்திற்குப் பின் நமது ஆன்மாவிற்காக செய்யப்படவிருக்கும் அனைத்து பரித்தியாகங்களின் பலன்களையும், உத்தரிக்கிற ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காக ஆண்டவரிடம் இப்போதே ஒப்புக் கொடுத்தோம் என்றால் அதுவே தலைசிறந்த செயலாக இருக்கும். ஏனென்றால் தனது பெயரால் சின்னஞ்சிறு ஒருவனுக்கு செய்யப்படும் எளிய செயலுக்கே பெரும் கைம்மாறு செய்யும் தேவன், தான் மிகவும் நேசிக்கும் ஆன்மாக்களின் இரட்சிப்பிற்காக, ஒருவன் தான் வாழும்போதும் இறந்த பின்னும் செய்யப்படும் நற்கிரியைகளின் பலன்களை ஒப்புக் கொடுக்க முன்வரும் போது எத்தகைய பெரும்பேற்றை கைம்மாறாக அளிப்பார் என எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு ஒப்புக் கொடுக்கும்போது குருக்கள் மற்ற தங்கள் கருத்துக்களுக்காக பலி பூசை ஒப்புக் கொடுப்பதையும், விசுவாசிகள் மற்றவர்களுக்கோ அல்லது தாம் விரும்பும் பிற கருத்துக்களுக்காக செபிப்பதையோ இச்செயல் தடை செய்யப் போவதில்லை. எனவே அனைவரையும், தாங்கள் வாழும்போதும், இறந்தபின்னும் செய்யப்படும் நற்கிரியைகளின் பலன்களை உத்தரிக்கிற ஆன்மாக்களுக்கு ஒப்புக் கொடுப்பதை பரிந்துரைக்கிறோம்.