கடவுளிடமும் அயலாரிடமும் நன்றியோடு இருப்போமாக.

நமதாண்டவரும், தேவமாதாவும் கடந்த வருடம் நமக்குச் செய்த சகல நன்மைகளுக்காகவும் நாம் நன்றி செலுத்துவோமாக. விசேஷமாய் இப்புது வருடத்தில் நமதாண்டவர் நமக்குத் தரவிருக்கும் அநேக நன்மை உபகாரங்களுக்காக நன்றியோடு அவரை நாம் நெருங்கிச் செல்வோம்.

எல்லோர் மனதிலும் ஒரு கேள்வி எழுகிறது. ஏன் மக்களில் பெரும்பாலானோர் தவறான பாதையில் செல்கிறார்கள்? ஏன் மனிதர்களில் மிக அநேகரை நம்ப முடியவில்லை? ஏன் மக்கள் தெய்வ பயமில்லாமல், மனசாட்சி இல்லாமல் வாழ்கிறார்கள்? ஆண்டவரோடும், மாதாவோடும் நெருங்கியிருப்பவர்களும், தேவ பாடத்தைப் படித்திருப்பவர்களுமாகிய தேவ ஊழியர்கள் கூட மாறிப் போய்விட்டார்கள்.

இதற்கு ஒரே பதில்: மக்களும், தேவ ஊழியர்களும் நன்றியில்லாமல் இருப்பதே. சகலத்தையும் படைத்த கடவுள் ஒருவரை, மனிதனின் வாழ்வுக்குத் தேவையானதைக் கொடுத்துக் கொண்டிருக்கும் கடவுளை, சகல நன்மைத்தனம் நிறைந்த கடவுள் ஒருவரை நினையாமல், நேசியாமல் மறந்து, நன்றி கெட்டிருப்பதே. இதனால் நாம் வரப்பிரசாதங்களை இழந்து போகிறோம்.

ஒளியாய் நம் உள்ளத்தில் இருந்து நம் மனதையும், புத்தியையும் மோட்சத்தை நோக்கி உயர்த்த வேண்டியவரை இழந்ததினால் அவரது இடத்தை சாத்தான் உடனே வந்து கைப்பற்றிக் கொள்கிறான். நம் உள்ளத்தில் வெறுமையும், மனதின் மத்தியில் இருளும் ஏற்படுகின்றன. தேவ விசுவாசத்தையும், தேவ நம்பிக்கையையும், தேவசிநேகத்தையும் இழந்து போகிறான். பாவம் விளைகிறது, பாவத்தால் தப்பறை வருகிறது.

இதனாலேயே மனிதன் உலகத்தையும், அதன் ஜடப் பொருட்களையும், அழிந்து போகிற உலக நன்மைகளையும் அதிகமாய் விரும்புகிறான், நேசிக்கிறான், மதிக்கிறான். கடவுளையே மனிதன் நன்றி கெட்டு மறக்கும்போது, தன் அயலகத்தாரின் உதவியை, நன்றி உபகாரங்களை அவன் மறந்து போவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

அவன் தன் நன்றிகெட்டதனத்தால் தன் அயலாரின் அன்பையும், நம்பிக்கையையும், மரியாதையையும் இழந்து போகிறான். மெய்யங் கடவுளைச் சார்ந்திராத மற்ற மத மக்களிடம் கூட தெய்வபயம் இருந்தது. ஆனால் நவீனவாதப் பதிதம், கத்தோலிக்கர்களிடம் அதை அழித்து, நாஸ்தீக மனப்பான்மைக்கு அவர்களைக் கொண்டுசென்றுவிட்டது.

உண்மையான கடவுளை ஆராதிப்பவர்களும், நேசிப்பவர்களுமான தேவ ஊழியர்களும் கூட தன் நேசமும், அன்புமுள்ள கடவுளுக்குப் பிரமாணிக்கமாகவும், நன்றியுபகாரத்தோடும் இருப்பதற்குப் பதிலாகப் பிரமாணிக்கம் கெட்டு, அதாவது நன்றி கெட்டுப் போய்விட்டார்கள்.

இதைத்தான் நமதாண்டவர் 17-ம் நூற்றாண்டில் அர்ச். மர்கரீத் மரியம்மாளுக்குத் தோன்றி, அன்பினால் பற்றியெரியும் தமது வேதனை நிறைந்த திரு இருதயத்தைக் காட்டி, "நன்றியற்ற மனிதர்களின் / தேவ ஊழியர்களின் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக நீயாவது எனக்கு ஆறுதல் தர மாட்டாயா?” என்று இந்த உலகத்தைப் படைத்துக் காத்து வரும் சர்வ வல்லபக் கடவுள் தந்தைக்குரிய பாசத்துடனும், தயவிரக்கத்துடனும், அன்புடனும் கேட்கிறார்.

எனவே, சகோதரர்களே, நாம் தீர்மானம் செய்வோம். இந்த வருடத்திலிருந்தாவது ஆண்டவரே உம்மையும், உமது தாயாரையும் நாங்கள் மிக அதிகமாய் நேசிப்போம். நன்றியோடு இருப்போம். எங்கள் அயலாரிடமும் நாங்கள் மிகுந்த அன்போடும், நன்றியோடும் இருப்போம் என்று ஆண்டவருக்கு முன்பாகப் பிரதிக்கினை செய்வோம். அந்தப் பிரதிக்கினையின்படியே நாம் வாழ்வோம்.