மே 27

அர்ச். பீட். துதியர் (கி.பி. 735) 

இந்த மகா அர்ச்சியசிஷ்டவர் சகல புண்ணியங்களிலும் தேர்ந்து கல்வி சாஸ்திரங்களிலும் சிறந்து இங்கிலாந்து தேசத்துக்கு ஒரு அறிய ஆபரணமாயிருந்தார்.

இவர் இங்கிலாந்தில் பிறந்து, இவருக்கு 7 வயது நடக்கும் போதே சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டார். சந்நியாச மடத்தில் இவருக்கு ஆசிரியரான ஒரு அர்ச்சியசிஷ்டவர் உலகப்படிப்புடன் ஞானப் படிப்பையும் கற்பித்தார்.

அர்ச். பீட் நாளடைவில் சிறந்த சாஸ்திரியாகி அநேக மாணவர் களுக்கு சாகும் வரையில் கல்வி கற்பித்து வந்தார். கல்விச்சாலையில் கூடி யிருந்த 600 பேருக்கு இவர் கல்வி கற்பித்து, தமது மடத்தின் ஒழுங்குகளை சிறிதளவும் மீறாமல் இடைவிடாமல் ஜெபித்து அறிய தவம் புரிந்து வந்தார்.

அக்காலத்தில் வழங்கி வந்த முக்கிய பாஷைகளில் தேர்ச்சி பெற்று சகல சாஸ்திரங்களிலும் சிறந்து விளங்கினார். இவர் அநேக சிறந்த பிரபந்தங்களை உண்டாக்கி வேதாகமங்களை மொழி பெயர்த்து அவைகளுக்கு விளக்கமும் கொடுத்தார்.

ஆகையால் இவர் திருச்சபையின் வேதபாரகராக விளங்குகிறார். இவர் சிறந்த சாஸ்திரியானதால் புலவரும், சாஸ்திரிகளும், அரசரும் இவரை அணுகி இவர் ஆலோசனையைக் கேட்பார்கள். அப்படியிருந்தும் இவர் தம்மை வெகுவாய் தாழ்த்தி அற்பமாக எண்ணுவார்.

ஒரு சிறு குழந்தை போல சிரேஷ்டர் களுக்குக் கீழ்ப்படிவார். இடைவிடாமல் சர்வேசுரனை தியானித்து ஜெபிப்பார். இவர் அடிக்கடி வியாதியாய் விழுந்தாலும் வேலையையும் ஜெபத்தையும் மறக்க மாட்டார்.

735-ம் வருடம் கர்த்தர் மோட்ச ஆரோகணமான திருவிழா அன்று இவருக்கு வியாதி அதிகரித்தபடியால் தேவதிரவிய அநுமானங்களைப் பெற்று தரையில் படுத்துக்கொண்டு ஜெபித்து, பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்துவுக்கும் தோத்திரமென்று கூறி உயிர் விட்டார்.

யோசனை 

நாமும் திரித்துவ ஆராதனையைப் பக்தியுடன் அடிக்கடி சொல்வோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ஜான், பா. வே.
அர்ச். ஜூலியுஸ், வே.