மே 28

அர்ச். ஜெர்மானுஸ். மேற்றிராணியார் (கி.பி. 576) 

ஜெர்மானுஸ் பிரான்ஸ் தேசத்தில் பிறந்து, தம்முடைய அர்ச்சியசிஷ்ட தனத்தால் தமது தேசத்திற்குச் சிறந்த ஆபரணமானார். இவர் சிறு வயதிலேயே அர்ச்சியசிஷ்டதனத்தை நாடி புண்ணிய வழியில் நடந்தார்.

உலகத்தைத் துறந்து சந்நியாசியாகி குருப்பட்டம் பெற்று பிறருடைய ஆத்தும் இரட்சண்யத் திற்காக உழைத்து வந்தார். இவருடைய அரிதான புண்ணியங்களினிமித்தம் புதுமைகளைச் செய்யவும், தீர்க்கத்தரிசனங்களை உரைக்கவும் வரம் பெற்றார்.

இவருக்கு ஒரு நாள் கனவில் அறிவிக்கப்பட்ட பிரகாரம் இவர் பாரீஸ் பட்டணத் திற்கு அதிமேற்றிராணியாராக நியமிக்கப்பட்டார். அந்த மகிமைப் பட்டத்திற்கு உயர்த்தப்பட்டாலும் தாம் முன்பு கடைப்பிடித்த வழக்கங்களை விட்டவரல்ல.

இரவெல்லாம் கோவிலில் ஜெபத்தில் செலவழிப்பார். ஏழைகளை அன்புடன் விசாரித்துத் தாராளமாய் தர்மம் செய்வார். தமது கிறீஸ்தவர்களுக்காக இடை விடாமல் ஜெபிப்பார். இவருடைய உருக்கமுள்ள பிரசங்கத்தால் சகல அந்தஸ் திலுமுள்ள கிறிஸ்தவர்களும் ஞானப் பலன் அடைந்தார்கள்.

அதிவிரைவில் அந்நகரத்தில் பாவம் ஒழிந்து, ஒழுங்கற்ற கூத்து, நாடகம் முதலியவைகள் நின்று விட்டன. பகை வைராக்கியம் தீர்ந்து, கட்சி கலகம் ஒழிந்தது. சுருக்க மாக கூறவேண்டுமென்றால், அந்த துஷ்டப் பட்டணம் முழுவதுமாக மாறியது.

உலக வாழ்வில் பிரியம் கொண்ட அத்தேசத்து அரசனும் மேற்றிராணியாருடைய புத்திமதியால் மனந்திரும்பி, வேத விஷயத்தில் அவருக்கு உதவி புரிந்து, அநேக கோவில்களைக் கட்டுவித்து, எழைகளுக்கு தர்மமாகக் கொடுக்கும்படி ஏராளமான திரவியத்தை அர்ச்சியசிஷ்டவருக்குக் கொடுத்தான்.

ஜெர்மானுஸ் சாகும் வரையில் சர்வேசுரனுக்குப் பிரமாணிக்கமாய் ஊழியஞ் செய்து 80-ம் வயதில் மோட்ச முடி பெற்றார்.

யோசனை 

நாம் பிறருக்கு தர்மம் கொடுக்கும் அளவாக சர்வேசுரன் தமது வரப்பிரசாதத்தை நமக்கு அருளுவாரென்று அறிவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். காரோ, வே.
அர்ச். அகுஸ்தீன், மே.